SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒலிம்பிக்சில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி முதல்வருடன் சந்திப்பு: இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல உறுதி

2021-08-05@ 00:25:26

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். இந்தியாவுக்காக அதிக பதக்கங்களை வெல்ல உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தார். வடசென்னையை சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். சேபர் பிரிவு முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை பென் அசீஸை 15-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்திய அவர், 2வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மானென் புருனெட்டுடன் (3வது ரேங்க்) போராடி தோற்றார். தரவரிசையில் பவானி தற்போது 36வது இடத்தில் உள்ளார்.டோக்கியோவில் இருந்து நாடு திரும்பிய பவானிதேவி, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்ற நம்பிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருந்தார். இந்தியாவில் இருந்து முதன் முதலாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றது எனக்கும் சரி, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருந்தது. அதில் மிகுந்த மகிழ்ச்சி. எனது குடும்பத்தினரும் நல்ல ஒத்துழைப்பை தந்தனர்.குறிப்பாக எனது தாய் மிகவும் கஷ்டப்பட்டார். அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது தாயையும் பாராட்டி இருந்தார். எனவே, முதல்வருக்கு எனது வாளை பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வாள்வீச்சு போட்டியில் இந்தியாவில் இருந்து முதன் முதலாக கலந்து கொண்டு பயன்படுத்திய வாள் என்பதால் அவருக்கு பரிசாக கொடுக்க நினைத்தபோது, ‘இல்லை, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். அதற்கு இந்த வாள் தேவைப்படும்’ எனக்கூறி அதை எனக்கே பரிசாக தந்தார். இன்னும் எந்த உதவியாக இருந்தாலும் தமிழக அரசு செய்யும்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் நன்றாக விளையாட வேண்டும். அதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் எனக்கு கொடுத்தார். விளையாட்டு அமைச்சரை சந்தித்தோம். நான் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறேன். மின்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். எனது வளர்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பங்கு முக்கியமாக இருந்தது. அதன் மூலம் தான் முறையான பயிற்சி எடுக்க முடிந்ததுடன், ஒலிம்பிக் போட்டியில் முதல் மற்றும் 2வது சுற்றில் சவால் கொடுக்க முடிந்தது. அடுத்து வரும் போட்டிகளில் அதிக பதக்கங்களை இந்தியாவுக்காக வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

*  இந்தியாவுக்கு எதிராக நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி, தேனீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 0, சிப்லி 18, கிராவ்லி 27, பேர்ஸ்டோ 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் 52 ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷமி 2, பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
* மகளிர் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜென்டினா அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்ற இந்தியா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கேப்டன் ராணி ராம்பால் மற்றும் பயிற்சியாளர் ஜோர்டு மரினுடன் போனில் பேசிய பிரதமர் மோடி, அரையிறுதியில் தோற்றாலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்ததாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • wildfire-13

  கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

 • plane-crashe-13

  அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

 • wine-12

  இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

 • Tiruppp1

  திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

 • andhratirupp

  திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்