SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை இழந்தது ஆடிப்பெருக்கு: டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் வெறிச்சோடின

2021-08-03@ 17:12:45

திருச்சி: கொரோனா காரணமாக நீர்நிலைகளுக்கு வர தடை விதிக்கப்பட்டதால், ஆடிப்பெருக்கு விழா இன்று களைஇழந்தது. மக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு காவிரி தாய்க்கு, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவர். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்துக்கு தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும், திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்,  கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை.  புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். ஆடி பெருக்கன்று காவிரி படித்துறைகளில் மக்கள் திரண்டு பலவகை உணவுகளை படைத்து, மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்வர்.  

சிலர் வீடுகளில் முளைப்பாரி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை ஓய்ந்த நிலையில், தற்போது தொற்று பரவல் மீண்டும் லேசாக துவங்கி உள்ளது. இதனால் திருச்சி, தஞ்சை, புதுகை, திருவாரூர், நாகை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகளில் மக்கள் கூட அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. மேலும் முக்கியமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலே ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.  பெண்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர்.

ஆடிபெருக்கு விழாவுக்கு பெயர்பெற்ற திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இன்றைய தினம் அம்மா மண்டபம் மூடப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையையும் மீறி வழிபாடு செய்ய திருச்சி  மற்றும் வெளியூர்களிலிருந்து வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்பமண்டப தெரு காவிரி படித்துறையில் ஆண்டுதோறும் ஆடிபெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த படித்துறை இன்று மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேசமயம்  திருவையாறு திருமஞ்சனவீதி காவிரி படித்துறையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு காவிரி தாய்க்கு படையலிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதேபோல் நாகை, வேதாரண்யம், பூம்புகார் கடற்கரைகளும் வெறிச்சோடியது. அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் மாவட்டங்களிலும் நீர்நிலைகளுக்கு செல்லும் வழிகளில் தடுப்பு வைத்து மூடப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்