SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்லட்சாமியின் ஆதரவாளர் செய்த குசும்பை சொல்கிறார்: wiki யானந்தா

2021-08-02@ 00:42:18

‘‘கொள்ளையடித்ததை மறைக்க இலை கட்சியினர் என்ன தந்திரம் செய்யறாங்க...’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில், தற்போது விவசாயமே செய்யாத இலை கட்சியினர்தான் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினராக இருக்காங்க. அவங்க உண்மையான விவசாயியை சங்கத்தில் உறுப்பினராக சேர்க்காமல் கடந்த பத்து ஆண்டுகளில், தங்களின் குடும்பத்தினர், உறவினர்களை கூட்டுறவு சங்க உறுப்பினராக சேர்த்துக்கொண்டனர். அப்புறம், கூட்டுறவு வங்கிக்கு வரும் நெல், கரும்பு, நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் அவர்களே எடுத்துக்கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உண்மையான விவசாயிகளுக்கு கடன் கண்டு கொள்ளாமல், இன்று போய்... நாளை வா என்று சொல்லி திருப்பி அனுப்புவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆட்சி மாற்றத்திற்குப்பின் இதுதொடர்பாக விவசாயிகள் கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் முறையிட்டாங்க. இதனால், கூட்டுறவு சங்கத்தில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதற்கு சங்க நிர்வாகிகளான இலை கட்சியை சேர்ந்த சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பரவாயில்லை. அதிகாரிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து, பட்டியலை வெளியிட வேண்டும் என கண்டிஷனோடு சொல்லிட்டாங்க. தற்போது, உண்மையான விவசாயிகள். சங்கத்தில் சேர கூட்டுறவு சங்கத்தை அணுகி வருகின்றனர். ஆனால், உண்மையான விவசாயிகள் உள்ளே வந்தால், சிக்கலாகி விடும்.. நாம் செய்த கோல்மால்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என்று இலை  நிர்வாகிகள் பயப்படறாங்களாம்.. அப்புறம், கீழ்நிலையில் உள்ள ஊழியர்களை பார்த்து, எங்களை கேட்காமல் சங்க உறுப்பினராக யாரையும் சேர்க்கக்கூடாது என கூட்டுறவு அதிகாரிகளை மிரட்டி வர்றாங்க... இதனால தூங்கா நகரத்துல இருக்கிற விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டு பேசிட்டு வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்லூரியில் ராகிங் நடக்கலாம்... அதுவே தவறு... மனித உயிர்களை காப்பாற்றும் துறையில் இருப்பவர்கள் ராகிங் செய்யலாமா...’’ என்று ஆதங்கப்பட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், இலை ஆட்சியில் இருந்து ஒரு பெண் டாக்டர், பெண் மருந்தாளுனர்கள், உதவியாளர்கள் என 10 பேர் பணியில் இருந்து வருகின்றார்களாம். தெருவில் உள்ள குழாய் அடிகளில் நடக்கும் சண்டைபோல் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் நடக்குதாம். இது பழைய மேட்டர்;புது மேட்டரை கேளு. இங்கு புதிதாக பணியில் சேரக்கூடிய பெண் பணியாளர்களிடம் சீனியர் பெண் மருந்தாளுனர்கள் ராக்கிங் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறதாம். சீனியர்கள் எந்த வேலையும் செய்யாமல் ஓபி அடித்து கொண்டு ஜூனியர் பணியாளர்களை பகல், இரவு பணிகளில் வேலை வாங்குவதுமாக இருந்து  வருகின்றார்களாம். ஜூனியர்களிடம் இங்கு நாங்கள் வைத்தது தான் சட்டம்;  நாங்கள் சொல்கிற வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும் என தகாத  வார்த்தைகளால் மிரட்டல் விடுக்கிறார்களாம். சீனியர்களுக்கு விடுமுறை உண்டாம்; ஜூனியர்கள் கேட்டால் தரமுடியாது என்கிறார்களாம். ஜூனியர், சீனியர்களுக்குள் நடக்கும் கூத்துக்கு இடையில்  சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகள் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்களாம். இதுதொடர்பாக மருத்துவ அதிகாரியிடம் நேரிடையாக அடுக்கடுக்கான புகாரும் சென்றதாம்... ஆனால்... இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கூடிய மருத்துவ அதிகாரி பெண்கள் ஆதிக்கம் என்பதால் நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்கி கொண்டாராம். நடவடிக்கை எடுத்தால் பெண்கள் போக்சோவில் புகார் கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஆண் அதிகாரி அடக்கி வாசிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஏனாம்காரரின் அறிவிப்பு, கோமாளித்தனமாக இருப்பதாக அவங்க கட்சிக்காரங்களே தலையில் அடித்து கொள்வதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட புல்லட்சாமியை அழைத்து சென்று நிற்க வைத்தவர்தான் ராவ். 650 கிலோ மீட்டருக்கு அப்பால், ஆந்திராவின் பக்கத்தில் உள்ள தொகுதியில் நின்ற புல்லட்சாமி தோற்றுப்போனார். அதே நேரத்தில்  முன்னெச்சரிக்கையாக மற்றொரு தொகுதியில் நின்றதால் சாமியின் தலை தப்பியது. கட்சி தலைவரை எப்படியாவது வெற்றிப்பெற வைக்கிறேன் என அழைத்து கொண்டு போய் முச்சந்தியில் நிறுத்தி அடி வாங்கவிட்டது, அவரது மனதில் தொகுதி மக்கள் மீது ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ராவ் வீசிய அனைத்து அஸ்திரங்களை எதிர்கொண்டு தொகுதிக்கு புதியவராக சுயேட்சை வெற்றிப்பெற்றார். புல்லட்சாமியை தோற்கடித்த  மக்களை நினைத்து மனதுக்குள்ளே வெதும்பினார்; திட்டி தீர்த்தார். ஆனால் இதனை துளியும் மனதில்  வைத்துக்கொள்ளாத புல்லட்சாமி, தன்னை வந்து சந்திக்கும்படி ராவுக்கு அழைப்பு அனுப்பினார். இதற்கிடையே ஏனாமில் உள்ள தனது இல்லத்தின் முன் புல்லட்சாமிக்கு ஓட்டு போடாதவர்கள், என் வீட்டு வாசலை மிதிக்க வேண்டாமென  பெயர் பலகை வைத்து ராவ் அதிரடித்தார். இதனால் அந்த கட்சிக்கு ஓட்டுபோட்டவர்கள் கூட நம்மள ஏனாம்காரர் சந்தேகப்படுகிறாரே... உதவி கேட்டு எப்படி செல்வது என்று தயக்கம் காட்டுகிறாராம். நிர்வாகிகளின் நிலை அதைவிட மோசமாம். தங்கள் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தும், ஏனாம்காரரை எந்த முகத்தை வைத்துக் கொண்டு சந்திப்பது,  உதவி கேட்பது என்று தடுமாறிக் கொண்டு இருக்கிறார்களாம். இதில் சில நலம் விரும்பிகள், அரசியலில் இதெல்லாம் சகஜம் எனக்கூறி அறிவிப்பு பலகையை எடுத்துவிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பலகையை அப்புறப்படுத்தினார். இருப்பினும் தன்னை வந்து சந்திக்கும் முக்கிய பிரமுகர்களிடம், புதியவர் கொடுத்த விட்டமின்களை வாங்கி கொண்டு, நல்லவரை தோற்கடித்துவிட்டீர்களே எனக் கூறி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்