மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு: வைகோ கண்டனம்
2021-08-01@ 17:01:43

சென்னை: மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரம் இடங்களில், 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் அளிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.
ஆனால் அந்த இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம் கூட வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்தது. இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி தி.மு.க., திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு, மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில், இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். அதில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதற்காக ஒரு குழு அமைத்து, மூன்று மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
ஆனால், ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலே நீட் தேர்வு நடைபெறும் என்று கடந்த ஜூலை 12 ஆம் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக தற்போது ஒன்றிய அரசு, அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் முதுநிலை, இளநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. பா.ஜ.க. அரசால் திணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டிலேயே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிகக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான 100 விழுக்காடு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்த வேண்டும். இதில் ஒன்றிய சுகாதாரத் துறையே கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க. அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு தெளிபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம்; போக்குவரத்துறை உயரதிகாரி தகவல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!