SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலக்க நினைச்சு கலங்கி போய் இருக்கும் இலை கட்சியின் மக்கள் பிரதிநிதி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-08-01@ 00:44:55

‘‘சொந்த பணத்தில் அபராத தொகையை செலுத்தும் அதிகாரிகளின் அச்சத்தின் பின்னணி குறித்து சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி ஆட்சியின் இறுதி காலத்தில், அனைத்து துறைகளிலும், இலையின் முக்கிய நிர்வாகிகள் ஒருபுறம் சகட்டு மேனிக்கு கல்லா கட்டினர்... கல்லா கட்டியவர்கள் கலங்கி போய் இருப்பதுதான் இப்போது குமரியின் ஹைலைட். விஷயம் என்ன தெரியுமா... குமரி பேரூராட்சி பொறியாளர் நிர்ப்பந்தப்படி13 பேரூராட்சிகளில் 48 பணிகளுக்கு ரூ.19.52 கோடிக்கான டெண்டரை மார்ச் 12ம் தேதி விட்டாங்க. இது வெகுஜன பத்திரிகை எதிலும் வரவில்லையாம். அதுமட்டுமல்ல, பலமுறை சர்ச்சையில் சிக்கி ‘ரெட்’ லிஸ்டில் இருக்கும் ஒப்பந்ததாரருக்கு அந்த மொத்த டெண்டரையும் வழங்கிட்டாங்க. இதுபற்றி அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார்கள் பறந்துள்ளதாம். இந்நிலையில், கோர்ட்டில், சமூக நல ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், டெண்டர் விட்ட வேலைகள் நடக்கலாம். இறுதி உத்தரவில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட செயல்அலுவலர்களின் சம்பளத்தில் இருந்து மொத்த பணத்தையும் அரசு கஜானாவிற்கு  செலுத்த வேண்டும்னு சொல்லிட்டாங்க.  நமக்கு கிடைத்தது கொஞ்சம் கமிஷன் மட்டுமே... லம்பா அடித்தது கான்டிராக்டரும், இலைக்கட்சிக்காரர்களும் தானே... அவர்களிடம் ரிகவரி செய்யாமல் நம்மிடம் செய்வது எப்படினு திகிலில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியினர் கூட்டாக சேர்ந்து கொடுத்த மிரட்டல்... இப்போது பூமராங் போல அவர்களை தாக்க திரும்பி வந்து கொண்டிருக்கிறதாமே...’’ என்று ஆச்சர்யப்பட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து என இலை-தாமரை கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக வலம் வருவது, அக்கட்சியினருக்கு அசுர பலத்தை கொடுத்துள்ளதாம். இந்த அசுர பலமே சில சமயங்களில் சிக்கலில் மாட்டிவிடும் என்பதை அவர்கள் உணரவில்லை என்று அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. அதாவது, கோவை மாவட்டத்தில் இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிகள்தான் அதிகாரம் செலுத்துறாங்க. சமீபத்தில் அவர்கள் 9 பேரும் ஒன்று சேர்ந்து மேட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாங்களாம். இது, பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு துணை போனதாக குடிநீர் வடிகால் வாரிய இரு உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டாங்க. இந்சூழ்நிலையில், தாமரை நீங்கலாக 9 இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தின் உயரதிகாரியிடம், கொரோனா தடுப்பூசி முகாமை அதிகப்படுத்துவது தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தாங்க. அப்போது, இவர்கள் அனைவரையும் மாவட்ட உயரதிகாரி, அமரவைத்து மரியாதை கொடுத்து பேசியுள்ளார். ஆனாலும், மனு கொடுக்கும்போது மாவட்ட உயரதிகாரி எழுந்து நின்று, வாங்கவேண்டும் என ஒரு மக்கள் பிரதிநிதி மட்டும் சற்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். இது, சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். மாவட்டத்தை பொறுத்தவரை எத்தனையோ துறைகளில் உயரதிகாரிகள் இருந்தாலும், மாவட்ட உயரதிகாரிக்கு என கூடுதல் அதிகாரம் உள்ளது. அவர், நினைத்தால், பணி செய்ய விடாமல் தடுத்தார் என புகார் அளித்து, ஒரே நொடியில், மக்கள் பிரதிநிதியை சிறையில் தள்ளமுடியும். ஆனால், அவர், அப்படி செய்யவில்லையாம். இதற்கிடையில், மாவட்ட உயரதிகாரியை மிரட்டிய இலை மக்கள் பிரதிநிதி மீது  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு கட்சி தரப்பினர் கோவை மாநகர காக்கி உயரதிகாரியிடம் புகார் கொடுத்திருக்காங்களாம். இப்புகார் மனு அடிப்படையில், ‘பொறி’யில் சிக்கப்போகும் இலையின் மக்கள் பிரதிநிதி யார் என்பதில் 9 பேரிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். குழப்பம் கலக்கத்தில் தற்போது நிற்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மண்ணிலும் கை வைக்கிறார்.. புல்லிலும் கை வைக்கிறார்... கூலியிலும் கை வைக்கும் அதிகாரியை நினைத்தாலே வெறுப்பு வருகிறது...’’ என்று எரிச்சலுடன் சொன்னார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தின் குளுகுளு நகரத்து வனக்கோட்டத்துக்கு உட்பட்டு பஞ்சாமிர்த நகரத்து வனச்சரகமும் இருக்கிறது. இச்சரகத்தில் அமுதமானவர் பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் இவர் வைத்ததே சட்டமாம். குளுகுளு மலையின் கீழ் பகுதியின் சில ஏரியாவும் இச்சரகக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்பகுதியில் வனவிலங்குகள் அதிகமிருக்கிறது. ஆதிவாசி பழங்குடியின மக்களும் இங்கே அதிகம் வசிக்கின்றனர். வனப்பகுதி மண்ணில் விளையும் ஈச்சம் செடிகள், கடுக்காய் உள்ளிட்டவைகளை வன மகசூல் எடுக்க இந்த அமுதமானவர், தனக்கு வேண்டிய நபர் மூலம் கல்லா கட்டி வருகிறார். புல்லையும் விட்டு வைப்பதில்லையாம். அதில் ஆடு, மாடு மேயவிட்டு அதிலும் சம்பாதிக்கிறாராம். இதை கூட மன்னித்துவிடலாம், ஆனால் மனிதனின் அடிமடியிலேயே கை வைப்பதா என்று அதே துறையில் பணியாற்றும் சிலர் புலம்புறாங்க. இவரது வசூலுக்கு ஆதாரமாக, இவர் வாங்கி, கடவுள் பெயரில் துவங்கும் ஊருக்கு அனுப்பி வைத்த புதிய வாகனமும் ஒரு சாட்சியாகி நிற்கிறது. இன்னும் உச்சமாக, தனக்கு கீழான ஊழியர்களின் கூலியிலும் ஒரு தொகையை கமிஷன் போல பார்த்து விடுகிறாராம். இங்கிருக்கிற ரேஞ்சரானவர் கொரோனா தொற்று காரணமாக சரியாக பணிக்கு வராததும், இவர் தகிடுதத்த வேலைகளில் பெரும் வருவாய் பார்க்க உதவிகரமாக இருக்கிறதாம். இது குறித்து சக ஊழியர்களே செம கடுப்பில் இருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்