SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க சுகாதார ஆணையம் புதிய எச்சரிக்கை அம்மை போல் எளிதாக பரவும் டெல்டா வைரஸ்: அசல் வகையை விட ஆயிரம் மடங்கு பயங்கரமானது

2021-07-31@ 01:46:59

நியூயார்க்: ‘சின்னம்மை நோயை போல் டெல்டா வகை வைரஸ் எளிதில் வேகமாக பரவக் கூடியது, மற்ற பிற கொரோனா வைரஸ் மாறுபாடுகளைக் காட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது’ என அமெரிக்க சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை (பி.1.617.2) வைரஸ் மாறுபாடே, 2வது அலை மிக மோசமாக பாதிக்க காரணமாக இருந்தது. இன்னும் இதன் கோரதாண்டவம் இந்தியாவில் அடங்கியபாடில்லை. டெல்டா வகை மாறுபாட்டால் 3வது அலையும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை வைரஸ் தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா போன்ற தொற்று குறைந்த நாடுகளிலும் டெல்டா வகை வைரஸ் பரவி மீண்டும் நிலைமையை மோசமாக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின்  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சிடிசி) ஆவணம் வெளியிடப்படாத தரவுகளை மேற்கோள் காட்டி ஆவணம் தயாரித்துள்ளது. இதிலுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. மற்ற வகை வைரஸ்களைப் போல் இல்லாமல், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கூட டெல்டா வைரசை பரப்பக் கூடியவர்களாக உள்ளனர் என ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போடதாவர்கள் மூக்கு மற்றும் தொண்டையில் எவ்வளவு வைரசை எடுத்துச் செல்கிறார்களோ, அதே அளவு வைரசை தடுப்பூசி போட்டவர்களும் பரப்புவதாக கூறப்படுகிறது.

தடுப்பூசிகள் 90 சதவீத பாதுகாப்பை அளித்தாலும், வைரசை பரப்புவதை தடுப்பதில் அவை பெரியளவில் செயல்படுவதில்லை. எனவே, 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கூட டெல்டா வைரசை பரப்புபவர்களாக உள்ளனர். டெல்டா மாறுபாட்டின் தொற்று, ஆல்பா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுவதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். இது காற்று மூலம் வேகமாக பரவக் கூடிய ஆற்றலை கொண்டது. டெல்டாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வைரசின் அளவு கொரோனா அசல் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுவதை விட ஆயிரம் மடங்கு அதிகம். மிகவும் எளிதாக பரவக்கூடிய வைரஸ்களான தட்டம்மை, சின்னம்மையை விட எளிதாக, வேகமாக பரவக்கூடிய டெல்டா. இது ஒரு தீவிரமான அச்சுறுத்தல் வகை வைரசாகும்.

எனவே, பள்ளி மாணவர்கள், ஊழியர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள் என அனைவரும் எப்போதும் மாஸ்க் அணிவது அவசியம். டெல்டா வகை வைரசை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் தேவை என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்னும் பல ஆய்வு முடிவுகளை ஆராய வேண்டிய இருப்பதால் சிடிசி இந்த ஆவணத்தை இன்னும் வெளியிடவில்லை.

கர்நாடகாவில் கூடுதல் கட்டுப்பாடு
கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை, டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, தக்‌ஷின் கன்னடா, சாம்ராஜ்நகர், மைசூரு, குடகு போன்ற மாவட்ட எல்லைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல கட்டாய பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.

தடுப்பூசி போட்டார் ராகுல்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என சர்ச்சை ஏற்பட்டது. பின்னர், சோனியா 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டதாக சமீபத்தில் காங்கிரஸ் தெரிவித்தது, இந்நிலையில், ராகுல் காந்தியும் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அதன் காரணமாகவே, கடந்த 2 நாட்களாக அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு உத்தரவு
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச  அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை  செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள், வீடுகள் இல்லாத நாடோடி மக்கள் போன்றவர்களால், தடுப்பூசி போடுவதற்கு கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய இயலாது. அவர்களுக்கு என்று தனியாக தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு 44,230 கேரளா மட்டும் 22,064
* நேற்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு 44,230. இதில் கேரளாவில் 22 ஆயிரத்து 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3வது நாளாக கேரளாவில் மட்டும் 50% பாதிப்பு பதிவாகி உள்ளது.
* மொத்த பாதிப்பு 3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 344. தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* கடந்த 24 மணி நேரத்தில் 555 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 217.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 155.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்