SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்திய இலையின் லீலைகளை சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-30@ 00:46:19


‘‘மாங்கனி மாவட்டத்தில் கரன்சியை பார்த்து 32 பல்லு காட்டுவது யாரு...’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டம் ஆத்தூரில் டிஸ்ட்ரிக் ஜெயில் இருக்கு. புதியதாக கைது செய்யப்படுவோரை இந்த ஜெயிலுக்கு கொண்டு வந்து, அதன்பிறகுதான் சென்ட்ரல் ஜெயிலுக்கு கொண்டு போவாங்களாம். குறைஞ்சது 20 நாட்கள் இந்த ஜெயிலில் வச்சிருப்பாங்களாம். அந்த நேரத்தில் கைதிகளுக்கு ஜாமீன் கிடைத்ததும் அவங்களோட உறவினர்கள் அதற்கான கோர்ட்டு ஆணையை கொடுத்துட்டு வாசலில் காத்துக்கிடப்பாங்களாம். அப்போது தான் அந்த கிடுக்கிப்பிடி நடக்குமாம். கைதியின் உறவினர்களிடம் ‘இவ்வளவு நாளா நல்லா கவனிச்சிக்கிட்டோம். அதுக்காக அய்யா உங்கள கவனிச்சிக்கிட்டு போக சென்னாருன்னு’ சொல்லுவாங்களாம். எப்படா வெளியே அழைச்சிக்கிட்டு போறதுன்னு வந்த உறவினர்களும் பச்சநோட்டு ரெண்ட மனம் நொந்து தள்ளிவிடுவாங்களாம். கைக்கு கை மாறியவுடன் 32 பல்லையும் காட்டிக்கிட்டு போவாராம் அந்த வார்டன். இதே நிலைதான் ஏர்போர்ட் இருக்குற ஜெயில்லயும் நடக்குதாம். இந்த பல் காட்டும் வேலை சென்னை ஆபீசர்ஸ்களுக்கே தெரியும்போது, உள்ளூர் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்னு புலம்புறாங்களாம் நேர்மையான வார்டன்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொள்ளைக்காரனிடம் கொள்ளைடியத்து மாட்டிக் கொண்ட விவகாரம் இருக்குன்னு சொன்னியே.. அது என்ன மேட்டர்..’’  என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்தல தண்ணீர் இல்லாமல் ஓடும் பாலாற்றில் நாள்தோறும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணல் கொள்ளையர்கள் சிலர் போலீசாருக்கு மாதந்தோறும் மாமூல் கொடுத்து விட்டு தடையின்றி மணல் கடத்தி வருகின்றனராம். இந்நிலையில், சத்துவான காவல் நிலையத்தில பணியாற்றும் முதல் நிலை காவலரான தினமானவர், இன்ஸ் பெயரை சொல்லி, புதிதாக 40 இன்ச் டிவி வாங்கிக் கொண்டு, அவர் வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டாராம்.இதற்கிடையில், இன்ஸ் நடத்திய ஆய்வின்போது மணல் கொள்ளையனை பிடித்து விசாரிச்சப்போ தான், சில நாட்களுக்கு முன்னாடி தானே மாமூலமாக 40 இன்ச் டிவி வாங்கி கொடுத்தேன் எதற்கு என்னை பிடிக்கிறாய் என மணல் கொள்ளையன் கேட்டதும் குட்டு அம்பலமாச்சாம். இதைக்கேட்டு அதிர்ந்த இன்ஸ் மணல் கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை காவலர் தினமானவர் மாமூலமாக டிவி வாங்கியது தெரிஞ்சது. பின்னர் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காவலர் தினமானவர் மாமூல் வாங்கியது உறுதியானதாம். உடனே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வெளிச்சத்துக்கு வந்தது ஒரு டிவி மட்டுமே. இது இல்லாம உயர் அதிகாரிகளின் பெயரை சொல்லி என்னென்ன பொருட்களை வாங்கி குவிச்சிருக்காங்க என்ற பட்டியலை ரகசியமாக கணக்கெடுத்து வர்றாங்களாம். இதனால சில போலீசார் கலக்கத்தில் உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆர்ப்பாட்டத்துக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் இலை கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ் கற்றுக் கொண்டார்களா...’’ ஆச்சர்யத்தில் மூழ்கினார் பீட்டர் மாமா.
‘‘மாநில அரசை கண்டித்து இலை கட்சி  சார்பில் 28ம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பலரும் தங்கள் வீடுகளுக்கு முன்பே தனி ஆளாக நின்று கோஷம் எழுப்பினர். குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்தும் இலையின் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவில்லையாம். பொதுமக்கள் மத்தியில் அசிங்கப்பட்டுவிடக் கூடாதே என்று நினைத்த இலை ஏற்பாட்டாளர்கள் முகத்தில் பளிச்சென மின்னல் வெட்டியது. உடனடியாக, அந்த பகுதியில் உள்ள செங்கல்சூளையில் பணியாற்ற வந்த வடமாநில இளைஞர்களை அழைத்து வந்தாங்க. தப்பு செய்தாலும் சரியாக செய்யணும் இல்லையா... அவர்களை போட்டோகிராபர்கள், பொதுமக்கள் அடையாளம் காணாத வகையில், முகத்தை மறைக்கும் அளவுக்கு மாஸ்க் மாட்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைத்தார்களாம். அவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திருதிருவென விழித்தவாறே பதாகையை ஏந்திக்கொண்டு நின்றார்களாம். அதில் இலை கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்ப... வடமாநில இளைஞர்கள் தமிழகத்தை என்ற வார்த்தையை மட்டும் ஒவ்வொரு முறையும் இலை கட்சியினர் உச்சரிக்கும்போது அவர்களுடன் சேர்ந்து தமிழகம் என்று சொன்னார்களாம். அந்தவகையில் தமிழ் மட்டும் கற்றுக் கொண்டார்கள் என்று சக இலை கட்சி தொண்டர்கள் பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இல்லாதவர்கள் பெயரில் வீடு கட்டும் திட்டத்துக்கு அப்ளை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில் இருக்கணுமே...’’ சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தின் மையப்பகுதியான சின்ன மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு பெறப்படும் கடனுதவியில் பயனாளிகளுக்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் மானியம் கிடைக்குமாம். இம்மாவட்டத்தில் கொட்டரை ஊராட்சியில் கடந்த இலை ஆட்சியில் போலி பயனாளிகளின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு முறைகேடு நடந்திருந்ததாக ஆட்சி மாற்றத்தால் பரபரப்பான புகார் எழுந்ததாம். இது தொடர்பாக ஊழல் தடுப்புபிரிவு போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர். இதில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 2019-2020ம் ஆண்டில் போலி பயனாளிகளின் பெயரில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சி செயலர், வட்டாரவளர்ச்சி அலுவலர், துணை அலுவலர்கள் என ஒரு டீமே இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்ததாம். இறுதி விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டதும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயக்கூடும் என போலீசார் மூலம் அரசல்புரசலாக கசிய தொடங்கியிருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிலியில் உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்