SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமாருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது: அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

2021-07-29@ 21:46:47

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்களது உருவப்படம்  திறப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக வரலாற்றை மாற்றக்கூடாது” என்று முன்னாள் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: கடந்த 1919ம் ஆண்டில் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில் முதன்முதலாக இடம்பெறத் தொடங்கினர்.   சென்னை மாகாண மன்றத்திற்கு 1920-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30-ஆம் நாள் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, திரு. சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது.  

1921-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பன்னிரண்டாம் நாள் கன்னாட் கோமகன் அவர்களால் முதல் மாகாண சுயாட்சிச் சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. பனகல் ராஜா, டாக்டர் பி. சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி. இராசன், குர்மா வெங்கடரெட்டி நாயுடு என நீதிக்கட்சியின் முதலமைச்சர்கள் 17 ஆண்டுக் காலம் பதவி வகித்தார்கள். மேற்காணும் முதலமைச்சர்களில் ஒருவரான டாக்டர் பி. சுப்பராயன் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை அமல்படுத்தப்பட்டது. எனவேதான், டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் திருவுருவப் படம் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓ.பி. இராமசாமி ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது.  

எனவே, அவருடைய திருவுருவப் படமும் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்ற வரலாறு 1921-ஆம் ஆண்டே தொடங்கி விட்டது.  1-4-1921-ஆம் நாளன்று, நீதிக்கட்சி ஆண்ட காலத்தில்தான் வாக்காளர் பட்டியலில்  மகளிரும் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  1989-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களால் கொண்டாடப்பட்ட பொன்விழா பற்றி திரு. ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.  அப்போது ஒரு மலர் வெளியிடப்பட்டது.  அந்த மலரில் எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய அணிந்துரை இடம்பெற்றுள்ளது.  அதில் அவர், “தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு வயது இன்று 52” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.    

சட்டப்பேரவை, சட்டமன்றப் பேரவை அன்று.  திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேரவைத் தலைவராக இருந்தவர், சட்டப் பேரவைக்கும், சட்டமன்றப் பேரவைக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 1937-ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணச் சட்டமன்றம், சட்டமன்ற மேலவையாகவும், வாக்குரிமை பெற்ற வயது வந்த அனைத்து மக்களாலும் நேரிடையாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட சட்டப்பேரவையாகவும் செயல்படும் முறை பிறந்தது என்பதன் அடிப்படையில் 1989-ஆம் ஆண்டில் சட்டப்பேரவையின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 1997-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப்  பவளவிழா மற்றும் சட்டமன்றப் பேரவை வைரவிழா தலைவர் கலைஞர் அவர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழா கொண்டாடும் நோக்கத்திற்காக வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என திரு. ஜெயக்குமார் கூறியிருக்கிறார். எதற்காக மாற்றி எழுத வேண்டும்? நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களும் பங்கு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.   

 ஜெயக்குமார் சொன்னதுபோல, மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் நாங்கள் செயல்படவில்லை, அனைவரையும் அறிவாளிகளாக்கும் முயற்சியில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. டி. ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோதும் ஒருவருக்கும் புரியாத கருத்தைப் பேரவையில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுவார். அப்போதெல்லாம் நாங்கள் அவருடைய பேச்சைக் காமெடியாகத்தான் எடுத்துக்கொள்வோம். சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றிய இவரைப் பதவியேற்ற ஓராண்டிலேயே அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பதவியை விட்டு நீக்கியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையின் மூலம் அவர் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்