SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி தங்க நகை கொடுத்து வாடிக்கையாளரை 2 முறை ஏமாற்றிய சரவணா ஸ்டோர் எலைட் தங்கநகை மாளிகை

2021-07-29@ 00:54:01

* பெண் டாக்டர் புகாரில் மாம்பலம் போலீஸ் வழக்குப்பதிவு
* வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: போலி  தங்க நகைகளைக் கொடுத்து, பெண் டாக்டரை  இரண்டு முறை ஏமாற்றிய, சரவணா ஸ்டோர்ஸ் எலைட்  தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மாம்பலம்  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் வாடிக்கையாளர்கள்  மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  ஐயப்பன்தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  

அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2015ம் ஆண்டு, திநகரில் உள்ள  சரவணா ஸ்டோர் எலைட் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல், 2016ம் ஆண்டு  23.630 கிராம் தங்க செயின் வாங்கினேன். இந்நிலையில் 2016ம் ஆண்டு வாங்கிய  தங்கச் செயினானது கடந்த 2019ம் ஆண்டு அறுந்து விழுந்தது. இந்த செயினை  எடுத்து பார்த்தபோது அதில் வெள்ளி கம்பிகள் இருந்தது. இது குறித்து சரவணா  ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும்போது தெரியாமல் நடந்திருக்கலாம் என்று கூறி அதற்காக அவர் மன்னிப்புக்  கேட்டார். அதன்பின்னர், வேறு நகைகளை மாற்றி கொடுத்தார்.
இந்நிலையில் 2015ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனது.

அப்போது அதை  சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு  வைக்கப்பட்டு ஏமாற்றி இருந்தனர். தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும்  எங்களை ஏமாற்றியதுபோல், பல வாடிக்கையாளர்களை போலியான தங்க  நகைகளை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம். எனவே சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை  மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த  புகார் தொடர்பாக காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான  முறையில் நடவடிக்கை எடுக்காத நிலையில், மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர்  திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட  புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று மாம்பலம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி  மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை,  டாக்டர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி  இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை  நிர்வாகத்தின் மீது மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிரபல நகை கடையான தி.நகர்  சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு முறை தங்க  நகைகள் வாங்கியதும், 2 முறை வாங்கிய தங்க நகைகளிலும் வெள்ளிக் கம்பிகள்  மற்றும் அரக்குகள் வைத்து வாடிக்கையாளரை ஏமாற்றி இருப்பது வாடிக்கையாளர்கள்  இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களை ஏமாற்றியதுபோல், பல வாடிக்கையாளர்களை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்