SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் பேசிய நிலையில் ஒற்றை தலைமையின் கீழ் வரும் அதிமுக

2021-07-29@ 00:41:44

* திடீரென உரிமை கொண்டாடும் டிடிவி.தினகரன்
* வாய் திறக்க மறுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை: சசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் பேசிய திரும்பிய அடுத்தநாளே, அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வரும் என டிடிவி.தினகரன் புதிர் போட்டுள்ளார். இதனால் பாஜ மூலம் மீண்டும் அதிமுகவுக்குள் நுழையும் முயற்சியை அவர்கள் தொடங்கியுள்ளதாக பரபரப்பு கிளப்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார் சசிகலா. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவித்தும், சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள ஓபிஎஸ், இபிஎஸ் மறுத்தனர். எனினும், அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று அமித்ஷா கடைசி வரை போராடினார். ஆனால், சசிகலா கட்சிக்குள் வந்தால், தன்னுடைய செல்வாக்கு குறைந்து விடும் என எடப்பாடி கடுமையாக எதிர்த்தார்.  

இந்த சூழலில், அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசி ஆடியோ ஒவ்வொன்றாக வெளியானது. ஆனால், அதிமுகவில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பும், பின்பும் அதிமுகவில் அதிகாரம் மற்றும் பதவி போட்டி, கட்சி பதவி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, முதல்வர் வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு இருவரும் குழாயடி சண்டை போல் மோதி கொண்டனர். மூத்த தலைவர்கள் எடப்பாடி பக்கம் நின்றதால், ஓபிஎஸ் விரக்தியடைந்தார். இதனால், இரண்டாம் நிலை பொறுப்பே அவருக்கு கிடைத்தது. கட்சிக்குள் ஒரம்கட்டப்படுவதால், தனது லாபியை நிரூபிக்க ஓபிஎஸ் டெல்லியில் ஆதரவாக உள்ள பாஜ மேலிட தலைவர்களை அணுகினார். இதையடுத்து, பிரதமர் மோடி சந்திக்க நேரம் கொடுத்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதையறித்த எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர் வேலுமணி நிர்மலா சீதாராமன் மூலம் ஓபிஎஸ்சுடன் மோடியை சந்திக்க நேரம் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டு, சந்தித்து வந்துள்ளனர். என்னதான் வெளியில் ஒன்றாக இருப்பதாக சொன்னாலும், கூட்டாக சந்திப்பு முடிந்த பின் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்து கட்சிக்குள் நடக்கும் மோதல்களை விளக்கி ஆளாளுக்கு ஒரு மனுவை கொடுத்துவிட்டு வந்தனர். மோடியுடனான சந்திப்புக்கு பின் நிருபர்களை சந்தித்த எடப்பாடி, சசிகலா குறித்து எழுப்பிய கேள்விகளை முற்றிலுமாக தவிர்த்து நடையை கட்டினார். ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் வாயே திறக்கவில்லை. தொடர்ந்து, அமித்ஷாவையும் சந்தித்து ஓபிஎஸ், இபிஎஸ் பேசினர்.

அப்போது, ‘தேர்தல் தோல்விக்கு அதிமுகதான் காரணம். சசிகலாவை சேர்த்து இருந்தால், இப்படி தோற்றி வாய்ப்பு இல்லை’ என அமித்ஷா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா பேசிய ஆடியோ வெளியான பிறகு பலமுறை பேட்டியளித்த எடப்பாடி, சசிகலாவை கடுமையாக விமர்சித்து பேசினார். கட்சியில் இடமே இல்லை என கூறினார். தற்போது, அவர் வாய் திறக்க மறுப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதேநேரத்தில், தேர்தலுக்கு முன்பு அமமுகவின் பொதுச்செயலாளர்தான் நான். அதிமுகவை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதிமுகவில் இருப்பவர்கள் விரைவில் அமமுகவுக்கு வருவார்கள். உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் அமமுகவில்தான் இருக்கிறார்கள் என்று பேட்டியளித்த டிடிவி.தினகரன் தற்போது பல்டி அடித்துள்ளார்.

நேற்று முன்தினம் திருச்சியில் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற ஒற்றை தலைமையும், சிறைக்கு செல்லும் முன்பு வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அதிமுக இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. விரைவில் அது சரியாகி விடும். முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கை என்பது உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான்’’ என்றார்.  டிடிவி.தினகரன் திடீரென அதிமுகவுக்கு உரிமை கொண்டாடுவது, கட்சியை விரைவில் சரி செய்து விடலாம் என சசிகலா பேசிவருவது, மோடி, அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா குறித்து பேச மறுப்பது என அனைத்தையும் பார்க்கும்போது அதிமுகவில் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்பது உறுதியாக தெரிகிறது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் மாஜி அமைச்சர்கள் சிக்கி உள்ளதால், அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லியிடம் சரணடைந்து உள்ளதாக அதிமுகவினரே கமென்ட் அடித்து வருகின்றனர். இதனால், டெல்லி எடுக்கும் முடிவுக்கு இவர்கள் அனைவரும் அடிபணிந்து செல்வார்கள் என கூறப்படுவதால், மீண்டும் பல்வேறு நாடகங்கள் அதிமுகவில் அரங்கேறி, தலைமை மாற்றம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்