SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சரை வெறுப்பேற்றி கோஷ்டிகானம் பாடிய கதையை கூறுகிறார்: wiki யானந்தா

2021-07-29@ 00:02:56

‘‘கோஷத்திலும் கோஷ்டி பூசல் எதற்காக நடந்ததாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதியமான்கோட்டை மாவட்டத்தில் இலைகட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சரை புறக்கணித்துவிட்டு, ஒரு குரூப் தனியாக நின்றதாம். நிர்வாகிளை ஒதுக்கிவிட்டு, அமைச்சராக இருந்த காலத்தில் குரூப் சேர்த்து ஆட்டம் போட்டதுதான் இதற்கு காரணமாம். மாஜி அமைச்சர் மீதான தங்களின் வெறுப்பை எப்படி பதிவு செய்வது என்று தெரியாமல் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த இலை கட்சியின் சில உள்ளூர் தலைகள் திட்டம் போட்டு இந்த போட்டி கோஷத்தை தனியாக கோஷ்டி சேர்த்து நடத்தியதாம். அதியமான் மாவட்டத்தில் இலை கட்சியினர் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற மாயையை இந்த ஆர்ப்பாட்டம் கோஷ்டி இருக்கிறது என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாம். அதாவது, அதியமான் கோட்டை மாவட்டத்தில், செயலாளராக இருக்கும் மாஜி அமைச்சர் தலைமையில் கட்சி ஆபீஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிட்டிங் கூட்டுறவு வங்கித்தலைவர், டிஸ்டிரிக் பால்வளத்தலைவர் உட்பட சில நிர்வாகிகள் வந்து கலந்துக்கலையாம். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலிருந்து சில அடி தூரம் தள்ளி நின்னு, தனியாக கோஷம் போட்டாங்களாம். இதில் அவர்களின் ஆதரவாளர்கள் என்று சிலர் கலந்துகிட்டாங்களாம்... கோஷ்டிபூசலை மறைக்க இலைக்கட்சியினர் சொன்னது தான் சிரிப்பை வரவழைப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற இலை கட்சியினரே சொல்லி சிரிக்கிறாங்களாம். அது கொரோனாவுக்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கவே தள்ளி நின்று கோஷம் போட்டோம்.. இதுல கோஷ்டிபூசல் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்டு சீறினார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தண்ணீரிலும் கரன்சி பார்த்த அதிகாரிகளை என்னவென்று சொல்வது...’’ ஆச்சர்யப்பட்டார் பீட்டர்மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கான ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் தேர்வு, திட்ட மதிப்பீடு தயாரித்தல், பணிகளை தொகுப்புகளாக பிரித்தது தொடர்பான நடவடிக்கைகள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாகத்தான் நடக்க வேண்டும். ஆனால், இத்திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்திலேயே ரகசியமாக நடைபெற்றதாம். இந்த ஒப்பந்தபுள்ளிக்கான சட்ட விதிமுறைகளை யாரும் முறையாக பின்பற்ற வில்லையாம். கடந்த ஆட்சியில் ரகசியமாக நடந்த இந்த ஒப்பந்தப்புள்ளி விவகாரம் ஆட்சி மாற்றத்தால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக வெளியில் தற்போது கசிய தொடங்கியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி தாவல் படலம் தொடர்கதையாக நடக்கும் போலிருக்கிறதே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு தவிர, மீதமுள்ள 9 தொகுதிகளிலும் இலை வேட்பாளர்களே வெற்றிபெற்று எம்எல்ஏக்களாக வலம் வருகின்றனர். பத்துக்கு பத்து கைப்பற்றினாலும், இலை கட்சியின் எந்த மக்கள் பிரதிநிதியும் நிம்மதியாக இல்லையாம். அரசாங்க பணிகள் எதிலும் மூக்கை நுழைக்க முடியவில்லை. மக்களும், கட்சிக்காரர்களும் சுற்றி சுற்றி வந்தாலும், ஒன்றும் செய்துகொடுக்க முடியவில்லை. நாமும் எதுவும் அடிக்க முடியவில்லை என விழி பிதுங்கி நிற்கின்றனர். இப்படியே 5 ஆண்டு காலத்தை எப்படி ஓட்டறது என தெரியாமல் திகைத்துப்போய் உள்ளனர். இவர்களில் ஒரு இளம் மக்கள் பிரதிநிதி ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம். தேர்தலில் ஏதோ அஞ்சு கோடி, ஆறு கோடி செலவு செய்தால் போதும் என்றார்கள், களத்திலும் இறக்கி விட்டார்கள். ஆனால், கடைசியில் கணக்கு பார்த்தால் 23 கோடி ரூபாய் செலவு என்ற புள்ளிவிவரத்தை பார்த்து அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லையாம். இந்த 23 கோடியை எப்படி 5 ஆண்டில் திருப்பி எடுப்பது.. ஆட்சி வேற நம்ம கையில இல்ல... இப்படியே போனால் நிலைமை ரொம்ப மோசமாகி விடும். பேசாம கட்சி தாவிட வேண்டியதுதான். ’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறையில் கஞ்சா விற்க தனி டீமே இருக்காமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘வெயிலூர் மாவட்டத்துல வெயிலுக்கு அடுத்தபடியா ரொம்ப பேமசாக இருப்பது ஜெயில்தான். சிறைக்குள்ள இருக்கிற கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், கஞ்சான்னு தடையில்லாம கிடைக்குதாம். இதற்கு சிறையில இருக்குற சில சிறைத்துறை கருப்பு ஆடுகள் தான் காரணமாம். சிறையில கைதிங்ககிட்டயே ‘‘ப’’ வைட்டமின் வாங்கிக்கிட்டு செல்போன், கஞ்சான்னு என்ன தேவையோ எல்லாத்தையும் சப்ளை செய்றாங்களாம். இதுக்கெல்லாம் தனித்தனியாக ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி செம வசூல் நடக்குதாம். முன்னாடி உறவினர்கள் மூலமாக நடந்த கஞ்சா சப்ளை நின்னு போச்சாம். அதுக்கு காரணம் கொரோனாவால சிறையில உறவினர்கள் சந்திப்பை ரத்து செஞ்சதுதானாம். இதனால சிறை காவலருங்களே கஞ்சா சப்ளையில இறங்கிட்டாங்களாம். வெயிலூர் சிறையில கஞ்சா விற்பனை ஓஹோன்னு போகுதாம். இந்நிலையிலத்தான், சிறை அதிகாரிங்க, ரெய்டு நடத்தியிருக்காங்க. இந்த ரெய்டுல, கஞ்சா சிக்கியிருக்குது. தொடர்ந்து நடத்திய விசாரணையில, சிறையோட தலைமை காவலர் ஒருத்தரே கஞ்சா விற்றது தெரியவந்திருக்கு. அவரோட இன்னும் 2 காக்கிகளும் கஞ்சா விற்பனையில ஈடுபட்டிருக்காங்க. இதனால 3 சிறை காக்கிகளையும் சஸ்பெண்ட் செய்து இருக்காங்க. இந்த சஸ்பெண்ட் விவகாரத்தில் உள்குத்து இருக்குறதாக பேசிக்கிறாங்க. உயர் அதிகாரிகளுக்கு போக வேண்டியது, சரியாக போகலையாம், இதனாலத்தான் ரெய்டும், சஸ்பெண்ட் நடவடிக்கையும் நடந்துச்சுன்னு சிறை காக்கிங்க மத்தியில பரபரப்பா பேசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்