SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோஷ்டி பிரச்னை, அரசியல் நிர்பந்தம், நிர்வாக குளறுபடி; 4 மாதத்தில் 4 பாஜக முதல்வர்களின் பதவி பறிபோனது எப்படி?.. திரிவேந்திர சிங் ராவத் முதல் எடியூரப்பா வரை பரபரப்பு

2021-07-27@ 22:01:49

புதுடெல்லி: பாஜகவிற்குள் ஏற்பட்ட கோஷ்டி பிரச்னை, அரசியல் நிர்பந்தம், நிர்வாக குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் கடந்த 4 மாதங்களில் 4 மாநில பாஜக முதல்வர்களின் பதவியை அக்கட்சி தலைமை பறித்துள்ளது. இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தாண்டு உத்தரபிரதேசம், குஜராத், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான வியூகங்களை பாஜக தலைமை வகுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 4 மாதங்களில் 4 மாநில முதல்வர்களை பாஜக தலைமை மாற்றியுள்ளது. கடைசியாக நேற்று கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்த 78 வயதான எடியூரப்பாவின் பதவி பறிக்கப்பட்டதால், அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2019ம் ஆண்டில் பதவியேற்ற அதே தேதியில் பதவியில் இருந்து விலகினார். இதுவரை நான்கு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர், ஒரு முறை கூட முழுமையாக ஆட்சி நடத்த முடியாத துரதிர்ஷ்டமான சூழலை எதிர்கொண்டார். கடந்த 2007ம் ஆண்டில் தென்மாநிலங்களில் முதன்முறையாக பாஜகவின் முதல்வராக எடியூரப்பாக பதவியேற்றாலும் கூட, அவரது பதவி காலம் ஏழு நாட்கள் மட்டுமே நீடித்தது. 2008 சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பா தலைமையில் பாஜக வென்றாலும் கூட, அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளில் முடிவடைந்தது. ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால், 2011ல் ராஜினாமா செய்தார்.

இருப்பினும், அவர் 2016ம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின், பாஜக தன்னை அவமானப்படுத்தியதாக கூறி, 2012ல் பாஜகவில் இருந்து விலகி புதியதாக கட்சியை தொடங்கினார். 2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக மாறினாலும் கூட, அடுத்த ஆண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார். அதன்பின் 2018ம் ஆண்டு பாஜகவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற எடியூரப்பா, தேர்தலில் முழு பெரும்பான்மை பெற முடியாததால், அவரது பதவிக்காலம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது. அதன்பின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரசுடன், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து கூட்டணி வைத்து குமாரசாமி முதல்வரானார்.

அடுத்த ஓராண்டில் ‘ஆப்ரேஷன் தாமரை’ என்ற திட்டத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததால், மீண்டும் 2019 ஜூலை 26ம் தேதி எடியூரப்பா முதல்வரானார். பாஜகவின் கொள்கைப்படி, 75 வயதடைந்த ஒருவர் முதல்வர், அமைச்சர், கட்சி தலைவர் ஆகிய பதவிகளில் வகிக்க முடியாது. ஆனால், 78 வயதான எடியூரப்பா தொடர்ந்து முதல்வராக இருந்து பாஜக தலைமைக்கே சவால் விடுத்து பதவி வகித்துள்ளார். எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு, அவருக்கு பல்வேறு வகையிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அவர் பிரதமர் மோடியை கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தார். அதனை தொடர்ந்து அவர் பதவி விலகும் வதந்திகள் பரவின. அதற்கான, சாத்தியம் இல்லை என்று எடியூரப்பா கூறிவந்தாலும் கூட, வதந்தி தற்போது உண்மையாகிவிட்டது.

திரிவேந்திர சிங் ராவத்
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக கடந்த மார்ச் 10ம் தேதி எம்பியாக இருந்த தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். ஹரித்வாரில் நடந்த கும்பமேளா, தீவிர கொரோனா பரவல், சாதுக்கள், யாத்ரீகர்கள் இறப்பு, எம்எல்ஏக்கள் போர்க்கொடி உள்ளிட்ட காரணங்களால் திரிவேந்திர சிங் ராவத் பதவி பறிக்கப்பட்டது.  

சர்பானந்தா சோனோவால்
கடந்த 2016ல் நடந்த அசாம் சட்டமன்றத் தேர்தலின் போது ஒன்றிய அமைச்சராக இருந்த சர்பானந்தா சோனோவால் முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். முதன்முறையாக அசாமில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதால், சர்பானந்த சோனோவால் முதல்வரானார். இருப்பினும், இந்தாண்டு நடந்த பேரவை தேர்தலில் அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் மீண்டும் பாஜக  பெரும்பான்மை பெற்ற நிலையில் புதிய முதல்வராக சோனோவாலா? அல்லது ஹேமந்த் பிஸ்வா சர்மாவா? என்ற குழப்பம் நீடித்தது. ஒருவழியாக சோனோவாலின் முதல்வர் கனவு தகர்க்கப்பட்டு ஹேமந்த் பிஸ்வா சர்மா முதல்வராக முன்மொழியப்பட்டார். அதன்படி, அவர் முதல்வரானார். இருந்தாலும், சமீபத்தில் நடந்த ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சராக சோனோவல் நியமிக்கப்பட்டார்.

தீரத் சிங் ராவத்
உத்தரகாண்ட்டின் புதிய முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத்தின் பதவிக்காலத்தை பார்த்தால் மார்ச் 10ம் தேதி முதல்வராக பதவியேற்ற அவர், ஜூலை 2ம் தேதி ராஜினாமா செய்தார். கிட்டதிட்ட முதல்வர் நாற்காலியில் அவரால் மூன்று மாதங்கள் மட்டுமே அமர முடிந்தது. கர்வால் மக்களவை எம்பியாக இருப்பதால், 6 மாதத்தில் எம்எல்ஏவாக தேர்வாக வேண்டும் என்ற விதிமுறையின்படி, அவர் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய  சூழல் இல்லை. கொரோனா பரவல் காரணமாக இடைத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. அதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. தற்போது, உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவி வகித்து வருகிறார்.

2024ல் மோடிக்கு சீட் கிடைக்குமா?
கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அந்த லிஸ்டில் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. காலம்காலமாக அத்வானி போட்டியிட்டு வந்த குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட்டு வென்றார். மோடியை பொறுத்தமட்டில், இன்றைய நிலையில் அவரது வயது 70 ஆக உள்ளது. வரும் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது அவரது வயது 73 ஆக இருக்கும். 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும்பட்சத்தில், மோடி அந்த தேர்தலில் போட்டியிடுவாரா?

 என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அப்படியே தேர்தலில் போட்டியிட்டாலும் தனது 75 ஆவது வயது பூர்த்தியாகும் போது தொடர்ந்து உயர்பதவியில் நீடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும், பாஜகவின் கொள்கைபடி தேர்தலில் போட்டியிடுவதோ, உயர் பதவியில் வகிப்பதோ மோடிக்கும் பொருந்தும் என்பதால், அவர் அரசியல் களத்தில் நீடிப்பது என்பது அடுத்த தேர்தலில் முக்கிய விவாத பொருளாக மாற வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்