SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்: மனிகா, சுமித் நாகல் வெளியேற்றம்

2021-07-27@ 00:38:04

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட  விளையாட்டுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தோற்று வெளியேறி வருவது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு ஒலிம்பிக் தொடரின் 2வது நாளிலேயே பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை  மீராபாய் சோனு வெள்ளி வென்று  அசத்தியது இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த மற்ற விளையாட்டுகளில் இந்திய குழுவினர் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றனர். வில்வித்தையில் சறுக்கல்: 4வது நாளான நேற்று இந்திய வில்வித்தை ஆடவர் குழு, கஜகிஸ்தானுடன்  மோதியது. அதில்  அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-2 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேற... பதக்க நம்பிக்கை பிறந்தது. மதியம் நடந்த காலிறுதியில் தென் கொரியாவுடன் மோதிய இந்திய அணி 0-6 என்ற கணக்கில் பரிதாபமாக  தோற்று வெளியேறியது. இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட தென் கொரியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

டென்னிசில் நாக் அவுட்: சனிக்கிழமை நடந்த ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் வென்றார். 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் வீரர் ஒருவர் ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வென்றது இதுவே முதல் முறையாகும்.  இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி  வீரர் மெத்வேதேவுடன் (2வது ரேங்க்)   மோதிய நாகல் (160வது ரேங்க்)  2-6, 1-6   என நேர் செட்களில் சரணடைந்தார். ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில்  சானியா- அங்கிதா இணை முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டதால் டென்னிசில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

* ஆண்கள் பேட்மின்டன் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில்  இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 13-21, 12-21 என நேர் செட்களில்  இந்தோனேஷியாவின்  கெவின் சஞ்ஜெயா -  மாகஸ் ஜிடியோன் ஜோடியிடம் 32 நிமிடங்களில் வீழ்ந்தது.
* குத்து சண்டை  ஆட்டத்தில் இந்திய வீரர்  ஆஷிஷ் குமார், நேற்று மாலை  சீன வீர் எரிபைக் துஹேடாவிடம் மோதினார். அதில்  ஆஷிஷ் தோல்வி அடைந்து வெளியேறினார்.
* துப்பாக்கிசுடுதல் போட்டியின் ஆடவர் ‘ஸ்கீட்’ பிரிவு தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் அங்கத் வீர் சிங் 18வது இடத்தையும்,  மீராஜ் அகமது கான் 25வது இடத்தையும் பிடித்தனர். இந்த சுற்றில் முதல் 6 இடங்களை பெற்றவர்கள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

'சரத் கமல் அசத்தல்'
இந்திய வீரர், வீராங்கனைகளின் தோல்வி தொடர் கதையாகிக் கொண்டிருக்க, டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்  போர்ச்சுகல்  வீரர் டியோகோ  அபோலோனியாவுடன் மோதிய சரத் 4-2 என்ற செட்களில் (2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9) போராடி வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் 3வது சுற்றில் சீன வீரர் லாங் மா உடன் மோதுகிறார். இதில் வென்றால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சரத் முன்னேறுவார்.

'மனிகா ஷாக்'
டேபிள் டென்னிசில்   ஏற்கனவே கலப்பு  இரட்டையர் பிரிவில்  சரத் கமல் - மனிகா பத்ரா இணை, ஒற்றையர் பிரிவில் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்தனர்.   நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய  சுதிர்தா முகர்ஜி 0-4 என நேர் செட்களில்  போர்ச்சுகல் வீராங்கனை  ஃபூ யூவிடம் தோற்றார். பதக்க நம்பிக்கையை கொடுத்த மனிகா பத்ரா,  மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் 0-4 என நேர் செட்களில்   ஆஸ்திரியா வீராங்கனை சோபியா போல்கனோவாவிடம் போராடி தோற்றார்.

'போராடி தோற்றார் பவானி தேவி'
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு விளையாட்டு வாள்வீச்சு. ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டுக்கு முதல்முறையாக தகுதி பெற்ற இந்தியர் என்ற பெருமையை பெற்ற தமிழகத்தின் பவானி தேவி, நேற்று காலை நடந்த முதல் சுற்றில் 15-3 என்ற புள்ளிக் கணக்கில் துனிசியா வீராங்கனை அசிசி நாடியாவை வென்று நம்பிக்கை அளித்தார். ஆனால், மதியம் நடந்த 2வது சுற்றில்  பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனெட்டிடம்  7-15 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார்.

'13 வயதில் தங்கம், வெள்ளி!'
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் என்பது... பல வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கையில் நிறைவேறாத கனவாக ஏக்கப் பெருமூச்சு விட வைத்துவிடுவதைப் பார்க்கிறோம். அப்படியொரு இமாலய சவாலை சந்தித்து சாதித்தும் காட்டியிருக்கிறார்கள் இரண்டு 13 வயது சிறுமிகள் என்றால் நம்புவதற்கு சற்று சிரமமாகத் தான் இருக்கும். டோக்கியோ ஒலிம்பிக்சில் அறிமுகமான ஸ்கேட்போர்டிங் விளையாட்டின் மகளிர் ‘ஸ்ட்ரீட்’ பிரிவில் களமிறங்கிய ஜப்பான் சிறுமி நிஷியா மோமிஜி தங்கப் பதக்கத்தையும், பிரேசில் சிறுமி லியல் ரேஸா வெள்ளிப் பதக்கத்தையும் வென்று மகத்தான சாதனை படைத்திருக்கிறார்கள். 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்ற நகாயமா பியூனாவின் (ஜப்பான்) வயதும் 16 தான். ஒலிம்பிக் தனிநபர் பதக்கம் வென்ற மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையும் நிஷியா வசமாகி உள்ளது. பைனலில் களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் சேப்லோன் அலெக்சிஸ் (அமெரிக்கா, 34 வயது), ரூஸ் (நெதர்லாந்து, 20 வயது), ஜெங் வென்ஹுயி (சீனா, 16 வயது), டிடல் மர்ஜிலின் (பிலிப்பைன்ஸ், 22 வயது), நிஷிமுரா (ஜப்பான், 19 வயது) ஆகியோரின் சவாலை சமாளித்து தான் இந்த ‘டீனேஜ்’ பொடிசுகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் சாதனை, ஒரு போட்டிக்கான வீரர், வீராங்கனை தேர்வு எப்படி இருக்க வேண்டும் என மற்ற நாடுகளுக்கு பாடம் எடுப்பதாகவே அமைந்துள்ளது. இதில் தவறு செய்வதால் தான் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, மீராபாய் சானு வென்ற ஒரு வெள்ளிப் பதக்கத்தையே ஆஹா... ஓஹோ என்று கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறது.

'57 வயதில் பதக்கம்'
ஸ்கேட்போர்டிங்கில் 13 வயது பொடிசுகள் அசத்தினார்கள் என்றால், ஆண்கள் துப்பாக்கிசுடுதல் ஸ்கீட் பிரிவில் 57 வயது ‘பெருசு’ ஒன்று வெண்கலப் பதக்கம் வென்று சாதித்திருக்கிறது! இந்த போட்டியில் அமெரிக்காவின் வின்சென்ட் ஹேன்காக் தங்கம், டென்மார்க்கின் ஜெஸ்பர் ஹான்சென் (வெள்ளி வென்ற நிலையில், குவைத் வீரர் அப்துல்லா அல்ரஷிடி (57 வயது) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். இவர் 7வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடுவதுடன் அதில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறி அசர வைக்கிறார் அப்துல்லா.

'மீராபாய்க்கு தங்கம்?'
மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஹூ ஜிஹுய் ஊக்க மருத்து சோதனையில் சிக்கி இருப்பதால், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம்  பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பைனலில் ஹூ மொத்தம் 219 கிலோ தூக்கி முதலிடமும், சானு 202 கிலோ தூக்கி 2வது இடமும் பிடித்தனர். இந்நிலையில், ஹூவிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் சந்தேகம் இருப்பதால் அவரை  அங்கேயே தங்க வைத்துள்ளனர். 2வது சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானால், அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன், சர்வதேச போட்டிகளில்பங்கேற்கவும் தடை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, அந்த தங்கப்பதக்கம்  இந்திய வீராங்கனை  மீராபாய்க்கு வழங்கப்படும். வெள்ளிப் பதக்கத்துடன் நேற்று நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாறவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவலும், மணிப்பூர் காவல்துறையில் கூடுதல் எஸ்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளதும் சானுவுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்