SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டிப்படைத்த மா.செ. அடங்கிக் கிடக்கும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-27@ 00:10:02

‘‘ஆண்டபோது ஆட்டிப்படைத்த மாசெ இப்போ சரண்டராகி பம்மிக் கிடக்கிறாராமே.. என்ன நடந்தது..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் மாசெவான குருவானவர். இவர்களுக்குள் இருந்த நட்பின் காரணமாகவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க விடாமல் தடுத்து முடிசூடா மன்னராக இருந்து வந்தார். முன்னாள் அமைச்சர், ராஜாவான எம்எல்ஏ ஆகியோரை கட்சிப்பணி ஆற்ற விடாமல் அடக்கி ஆண்டு வந்தார். இதனால் அவர்களுடைய ஆதரவாளர்களின் எதிர்ப்பலை இருந்து வந்தது. முடிசூடா மன்னராக இருந்து கட்சிக்காரர்களை அடக்கி ஆண்டதன் விளைவு நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இதனால் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கியது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இங்கு நடந்த கூட்டங்களில் எல்லாம் குருவானவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இதனால் அரண்டு போன குரு, எதிர்ப்பாளர்களிடம் சரண்டர் ஆனதாக பேச்சு அடிபடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘மாங்கனி மாவட்ட சிறை ஜெயிலருக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தமாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘அமைதியின்  சொரூபமாச்சே, அவரு எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டாரேன்னு தான்  எல்லோரும் நினைப்பாங்க. ஆனா அதுதான் இல்லை.  ஏற்கனவே மகளிர் சிறையில் வேலை  செஞ்சு வந்த வார்டனிடம் கைமாத்தா வாங்குன பணத்தை கொடுக்க மறுத்த விவகாரம்  பூதாகரமா வெடிச்சது. அதிகாரிகளின் வார்னிங்குக்கு பிறகுதான் பணத்தை பிச்சு  பிச்சு கொடுத்தாராம். ஆனா இப்போ கசிஞ்சிருக்குற சமாச்சாரம் கொஞ்சம்  பெருசாம். ஜெயில் பக்கத்துலேயே வெள்ளக்காரன் கட்டிய ஓடு பதிச்ச பங்களாக்கள்  இருக்கு. அதுல ஜெயிலருக்குன்னு வீடும் இருக்கு. ஆனா துணை ஜெயிலர் வீட்டுல  குடும்பத்தோட தங்கி இருக்கும் ஜெயிலர், வீட்டை காலி பண்ண முடியாதுன்னு அடம்  பிடிக்காராம். அதுகூட பரவாயில்லைங்க... அந்த வீட்டுக்கான வாடகையையும்  கொடுக்க முடியாதுன்னு முகத்தை விரைப்பா வச்சிருக்காராம். வீட்டையும்  கொடுத்து வாடகையும் நான்தான் கொடுக்கணுமான்னு தலையில  அடிச்சிக்கிட்டிருக்கும் துணை அதிகாரி, வெளியூர்ல இருந்துதான் தினமும்  வேலைக்கு வந்துக்கிட்டிருக்காராம். வீட்டை ஒதுக்குன உயர் அதிகாரிகள்  கண்டுக்காம இருப்பதுதான் வேதனையா இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக ஏதோ பேசப்படுதாமே.. என்ன விஷயம் அது..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுவான பணியில் உயர் அதிகாரியாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி, தனது துறையில் கட்டிடப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியிடம் தனது அலுவலகத்தில் எழுத்துப்பணிக்கு ஆள் வேண்டும் என்றாராம். இதனால் திருமணமாகி 6 மாதம் ஆன பெண்ணை அனுப்பி வைத்தார்களாம். ஆனால் வந்த சில நாட்களிலேயே அந்தப் பெண் மீது ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு கண் இருந்ததாம். ஒரு நாள் தனது அறைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ய, அதிர்ந்துபோன பெண் வெளியில் ஓடி வந்து, நேராக வீட்டுக்குச் சென்று விட்டாராம். இனிமேல் கோட்டைக்கு வேலைக்குச் செல்ல மாட்டேன். எனக்கு வேலையே வேண்டாம் என்று கூறி விட்டாராம். அந்த பெண்ணின் கணவர், இந்தப் பிரச்னையை அடுத்தடுத்து புகார் செய்ய, தற்போது மீண்டும் அந்தப் பெண் வேலை செய்த அலுவலக பணிக்கே திருப்பி அனுப்பி விட்டார்களாம். இதுதான் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள்  மத்தியில் பரபரப்பு பேச்சாக உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பல்கலைக்கழக விவகாரம் ஏதாவது இருக்கா..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா  நகர் பல்கலைக்கழகத்தின் தொடர்பு அதிகாரி, இலை கட்சிக்கு நெருக்கமானவரால்  கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார். பொதுவாக தொடர்பு அதிகாரியாக துணை  பதிவாளர் அந்தஸ்தில் உள்ளவரையே இப்பதவிக்கு நியமிக்க முடியும். இந்த  விதிமுறைகளை எல்லாம் மீறி, அப்போது தலைமையில் இருந்த செல்லமானவர் ஆசியுடன் ,  கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருந்தவரை நியமித்து, அவரும் இலை கட்சி  பிரமுகராகவே பல்கலைக்கழகத்துக்குள் வலம் வந்தார். அவர் தொடர்பு அதிகாரியாக  இருந்த கால கட்டத்தில் பல்வேறு முறைகேடுகளுக்கு தேவையான அனைத்து  வாசல்களையும் திறந்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும், பணி  நியமனம் உள்ளிட்டவற்றில் பல கோடி ரூபாய் கைமாறுவதற்கு துணையாகவும்  இருந்துள்ளார் என உள்ளுக்குள் இருப்பவர்களே முணுமுணுக்கிறார்கள். கடந்த  2018ல் தலைமையில் இருந்த செல்லமானவர் மாறிய பின்னரும் சில காலம் இவரே  தொடர்பு அதிகாரியாக வலம் வந்துள்ளார். பல கோடிகள் கைமாற்றும் முக்கிய  வேலையை இவரிடம் தலைமையில் இருந்தவர் ஒப்படைத்து விட்டுப் போனாராம்.  இந்நிலையில் இவரின் தொடர் செயல்பாடுகளை அறிந்த புதிதாக தலைமைக்கு வந்தவர்,  இவரை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அந்த இடத்திற்கு புதிய தொடர்பு  அதிகாரியை நியமித்துள்ளார். ஆனாலும் இவருக்கு உள்ள வெளி தொடர்புகளை  பயன்படுத்தி இன்னும் நான்தான் தொடர்பு அதிகாரி என்று  கூறி ஆட்டம் போட்டு  வருகிறாராம். இப்போது பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த  முறைகேடுகளை விசாரிக்க குழு அமைத்ததும் பழைய கோப்புகளை அழிக்கும் வேலையில்  இவருக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனராம். இலை கட்சிக்கு   நெருக்கமான இந்த தொடர்பு அதிகாரி மீது உயர்கல்வித் துறைக்கு புகார் மேல்  புகார்கள் குவிந்து வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்