SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை ஆட்சியில் கையூட்டு பெற்ற அதிகாரிகளுக்கு தரப்பட்ட அதிர்ச்சி வைத்தியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-26@ 00:01:42

‘‘இலை தலைமை மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராமே மாஜி எம்எல்ஏ...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்தின் வெற்றிலைக்கு பெயர் போன தொகுதியின் மாஜி எம்எல்ஏவுக்கு, கடந்த தேர்தலுக்கு முன்பு வரை இலைக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்டது. ஆனால், இவருக்கும், முன்னாள் மந்திரியான உதயமானவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டால், இவருக்கான முக்கியத்துவத்தை கட்சியில் மெல்லக் குறைத்து விட்டனர். தேர்தல் காலத்தில் கூட மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு தலைமையிலிருந்து பணம் விநியோகம் செய்த நிலையில், இவரது தொகுதியை மட்டும் தலைமை கைவிட்டு விட்டதாம்... இதுதொடர்பாக மாஜி அமைச்சரிடம், சண்டை போட்டும் பலனில்லையாம். தற்போது இவரது ஆதரவாளர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு கட்சிப்பதவிகள் தரப்பட்டிருக்கிறது. அதாவது, வாடிப்பட்டி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளுக்கு ஒன்றிய பொறுப்பினை இவரது ஆதரவாளர்கள் இருவருக்கு தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது, முன்னாள் எம்எல்ஏவிற்கு பிடிக்காத, மாஜி மந்திரியின் ஆதரவாளர்களையே தேடிப்பிடித்து பதவிகள் தந்துள்ளது தலைமை. இதனால் மாஜி எம்எல்ஏ தன்னை கட்சியில் ஓரங்கட்டி வருவதாக கூற தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விழிபிதுங்கி போயிருக்காங்களாமே சங்கத்து நிர்வாகிங்க...’’
‘‘தமிழகத்தில் கடந்த இலை கட்சி ஆட்சியில கூட்டுறவு சங்கங்களில் கோடிக்கணக்குல முறைகேடு நடந்துச்சு. தற்போது அந்த விவரங்கள் எல்லாம் தலைமையிடத்துக்கு போயி, தீவிரமாக விசாரிச்சுட்டு இருக்காங்களாம். இதனால அப்போ ஆட்டம் போட்ட சங்க தலைவர்கள் முதல் அதிகாரிகள் வரை இப்போ பீதியில இருக்காங்களாம். இதனிடையே, மாங்கனி மாவட்ட டவுனில் உள்ள ஒரு பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்துல வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் சிறப்பு டிஸ்கவுண்ட் கொடுக்கனும். ஆனா அங்குள்ள சில முக்கிய புள்ளிங்க, போலி பில் மூலமா 5 சதவீதத்த மட்டும் கொடுத்துட்டு, உண்மையான கணக்குல வர பில்லில் 20 சதவீதம் கொடுத்த மாதிரி பதிவு செஞ்சிருக்காங்க. இதுமாதிரி கடந்த ஒரு வருசத்துல மட்டும் 50 லகரம்  வரைக்கும் முறைகேடு நடந்திருக்கு. இப்போ வெளியே வந்திருக்கும் இந்த முறைகேடு சமாச்சாரம், சிஎம் தனிப்பிரிவு வரைக்கும் போயிருக்காம். இதனால சம்பந்தப்பட்ட சங்கத்து முக்கிய புள்ளிங்க எல்லாம் செய்வதறியாது  விழிபிதுங்கி போயிருக்காங்களாம். அதேசமயம், இனிமே எப்படியும் நமக்கு நல்லது  நடக்கும்னு, நெசவாளருங்க சந்தோசத்துல இருக்காங்களாம்....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை ஆட்சியில் கையூட்டு பெற்று அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு பத்திர பதிவு செய்தவர்கள் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் மண்டல அளவிலான பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. மத்திய மண்டலத்திற்குற்பட்ட சார்பதிவாளர்கள் மீது ஏராளமான பெட்டிசன்கள் துறை அமைச்சரிடமே நேரிடையாக சென்றதாம். இந்த பெட்டிசன்களிலே ஆதாரத்துடன் மலைக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகம் பெட்டிசன் இருந்ததாம். இதை படித்து பார்த்து அதிர்ந்து போன துறை அமைச்சர், மலைக்கோட்டை மாவட்டத்திலே அன்றிரவே ஹால்ட் போட்டு விட்டாராம். பின்னர் மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லாமல் ஆதாரத்துடன் அதிகம் புகார்கள் வந்திருந்த சார்பதிவாளர் அலுவலகங்களில்  திடீரென ஆய்வு நடத்தியுள்ளார். அமைச்சர் தன்னந்தனியாக வந்து அதிரடி ஆய்வு நடத்தியதால் அலுவலகத்திற்கு வழக்கம் போல் தாமதமாக வந்த அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் ஆடி போய் விட்டார்களாம்...
இந்த அதிரடி ஆய்வுக்கு பின் அங்கிருந்து துறை அமைச்சர் புறப்பட்டு சென்ற அடுத்த சில மணி நேரத்தில் மண்டல பதிவுத்துறை டிஐஜியிடம் இருந்து டிரான்ஸ்பர் தொடர்பான  உத்தரவுகள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அடுத்தடுத்து சென்றதாம்... இதில்  முதல் கட்டமாக கடந்த இலை ஆட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு லட்சக்  கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு மனைகள் பத்திரவு பதிவு செய்யப்பட்டதாக புகாரின் பேரில் மண்டலத்துக்குட்பட்ட மாவட்ட பதிவாளர் மற்றும் சார்பதிவாளர்  அலுவலகங்களில் பணியாற்றிய 11 சார்பதிவாளர்கள், 6 உதவியாளர்கள் என 17 பேர் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டிரான்ஸ்பர் நடவடிக்கை மட்டும் தான் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருந்தா விட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை துறை ரீதியாக  எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருப்பதால் மற்ற அதிகாரிகள் கிலியில் இருப்பதாக கூறுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முடங்கி கிடக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் மாஜி அமைச்சர் சம்பத், திமுக எம்எல்ஏ அய்யப்பனிடம் தோல்வி அடைந்தார். அதில் இருந்து அவர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். அதிமுக நிர்வாகிகளின் திருமணம் நிகழ்ச்சி மற்றும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் அமைச்சராக இருக்கும் போது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருந்தது. தற்போதும் எதிர்ப்பு தொடர்வதால் விரத்தியில்  உள்ளார். கட்சிக்காரர்களே என்னை தோற்கடித்துவிட்டனர். இனிமேல் எனது மகனை தீவிர அரசியலுக்கு கொண்டு வரப்போகிறேன் என தனது நெருங்கிய சகாக்களிடம் கூறி  வருகிறார். மாவட்ட செயலாளராக அவர் தொடர்வதால் சமீபத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட்டதோடு சரி. எந்த நிகழ்ச்சியிலும் போகாமல் வீட்டிலேயே உள்ளார். மேலும் பண்ருட்டி  அருகே உள்ள அவரது வீட்டில் இருந்து காலி செய்துவிட்டு சென்னையில் உள்ள  வீட்டுக்கு நிரந்தரமாக குடிபோக முடிவு செய்துள்ளார். இதுபோன்று செயல்பட்டால் அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்