SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்சோ வழக்கில் சிக்கிய பாஜ பிரமுகரின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-25@ 02:17:01

‘‘போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜ பிரமுகரை இன்னும் கைது செய்யாமல்  உள்ளார்களாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா .
கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த  இந்த பாஜ பிரமுகர் மீது பெண் ஒருவர் 2018ம் ஆண்டு புகார் கொடுத்து அதன் பேரில் இவர் மீது வழக்குப்பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தற்போது மீண்டும் அந்த நபர் அதே பெண்ணிற்கும் அவரது மகளுக்கும் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் சென்னை கமிஷனரிடம் முறையிட்டனர். முதலில் அவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அந்தப் பெண்ணின் மகளிடம் நடத்திய விசாரணையில் பாஜ பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டு எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு எட்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிட்டத்தட்ட எட்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை போலீசார் அவரை நெருங்க கூட முடியவில்லை. பாஜவின் அழுத்தம் காரணமா அல்லது போலீசார், அவராக வந்து சரண் அடையட்டும் என்று விட்டுவிட்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். மேலும் தற்போது சிக்கலில் சிக்கி உள்ள பாஜ பிரமுகர் ஏற்கனவே பல போலீசார் மீது மொட்டை பெட்டிஷன் போட்டு அவர்களை நீதிமன்றத்திற்கு அலைய விட்டுள்ளார். இதனால் போலீசார் ஒருவித அச்ச உணர்வுடனே அவரை நெருங்குவதாக கூறப்படுகிறது. இது போன்ற நபர்களை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதே பாஜ பிரமுகரால் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளாக உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தங்கம் சிக்கிய விவகாரத்தில் அரண்டு போய் கிடக்கிறாராமே ஒரு அதிகாரி.. என்ன விஷயம் அது.. விவரமாக சொல்லவும்..’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘அதிமுக ஆட்சியின்போது தூங்கா நகர  மாநகராட்சியின் மேற்பார்வை பொறியாளர் திடீரென பணியிட மாற்றம்  செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தெர்மாகோல் புகழ் மாஜி அமைச்சரின் தீவிர  ஆதரவாளராகவே வலம் வந்த மாநகராட்சி செயற்பொறியாளர்,  கூடுதலாக  மாநகராட்சியின் மேற்பார்வை பொறியாளராக கடந்த 2 ஆண்டாக பணியாற்றி  வந்தார்.  முன்னாள் மேயருக்கும் வலதுகரமாக செயல்பட்டு வந்தார். ஸ்மார்ட் சிட்டி  திட்டப்பணிகளில் நடந்த முறைகேட்டில், இவருக்கும் பெரும்பங்கு உள்ளது.  மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள இவரது அறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு,  லஞ்ச ஒழிப்பு  போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் தங்கம், வெள்ளி  பொருட்கள் கிலோ கணக்கில் சிக்கியது. பல லட்சம் ரூபாயும் சிக்கியது. மாஜி  அமைச்சர் தலையீட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஆட்சி  மாற்றத்திற்கு பின்பு நேற்று, இவர் பணியிறக்கம் செய்யப்பட்டார். புதிய அரசு  தங்கம் சிக்கிய விவகாரத்தை கிளறுமோ? ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டை  தோண்டுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

  ‘‘கட்டுமான தொழிலாளர்களின் இலவச வேட்டி, சேலையில ‘கைவைக்க’ பாத்தாங்களாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘நாகர்கோவிலில்  தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) உள்ளது. இங்கு  கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்குவதற்காக இலவச  வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வழங்க வேண்டிய இவை,  சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. பிப்ரவரி  மாதம் கடைசியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்டி-சேலை விநியோகம்  உடனே நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் 2 மாதமாகியும் அவற்றை  உரியவரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில்  மாவட்ட கலெக்டர், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு  நடத்தியுள்ளார்.  அப்போது அங்கு மூட்டை மூட்டையாக வேட்டி-சேலைகள் தேங்கி இருப்பது கண்டு  அதிர்ச்சியடைந்து கலெக்டர் விசாரித்துள்ளார்.

‘‘பொங்கலுக்கு வந்தது... தேர்தல் வந்ததால் கொடுக்காமல்  நிறுத்திவிட்டோம்...’’ என்று இழுத்துள்ளார்கள். ‘‘அதுதான் தேர்தல்  முடிந்துவிட்டதே... உடனே அவற்றை உரியவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்’’  என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் விடுபட்டவர்களுக்கு வழங்க  தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக அதிகாரி தற்போது முன்வந்துள்ளாராம். கலெக்டர்  ஆய்வால் இவை தொழிலாளர் கைக்கு போகிறது, இல்லையெனில் இவற்றை பழைய விலைக்கு  போட்டு கேரளாவில் ஏதேனும் ஒரு மூலையில் கூவிக் கூவி விற்பனை செய்துகொண்டு  இருப்பார்கள்’’ என்றார்  விக்கியானந்தா.

 ‘‘பத்து வருஷத்துல பல லட்சம் சுருட்டினாங்களாமே அதிகாரிங்க...’’
 ‘‘கிரிவலம்  மாவட்டத்துல 18 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்குது. இதுல 860 கிராம ஊராட்சிகள்  அடங்கியிருக்கு. இந்த கிராம ஊராட்சிகள்ல, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்  இருக்குதாம். இந்த சங்கங்கள் அனைத்துமே, மகளிர் திட்ட அதிகாரிங்க  கட்டுப்பாட்டுலத்தான் செயல்படுதாம். இந்த வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாக  தனிநபர் கழிவறை, தூய்மைகாவலர்களுக்கு ஊதியம்னு பல்வேறு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருது. சங்கத்துல நடக்குற பணிகளின் விவரங்களை பதிவேற்றம்  செய்றதுக்கு, ஒரு ஊராட்சிக்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கியிருக்காங்களாம்.  வறுமை  ஒழிப்பு சங்கங்களுக்கு கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை பராமரிக்குறதுக்காக  ஒரு வருஷத்துக்கு ரூ.4,130 நிர்ணயிச்சிருக்காங்க போல. கணினிகள் பழுதானாலும்,  பழுதாகாவிட்டாலும், வருஷத்துக்கு ஒரு முறை ரூ.4,130ஐ பில் போட்டு, மகளிர்  திட்ட அதிகாரிகளே கணினி பழுது பார்த்ததாக கணக்கு காட்டி  எடுத்துக்குறாங்களாம். இப்படியே கடந்த 10 வருஷத்துல, பல லட்சங்கள் வரையில்  அதிகாரிங்க சுருட்டிட்டாங்களாம். இப்படி மக்கள் வரிப்பணத்தை ஆட்டைய போட்ட  அதிகாரிகள் மேல நடவடிக்கை எடுக்கணும்னு அந்த துறை சார்ந்த பணியாளர்களே  கோரிக்கை வெச்கிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்