SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரியில் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

2021-07-24@ 02:06:46

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி மற்றும் ஊட்டி புறநகர் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. நேற்று பெய்த கன மழையால் அவலாஞ்சியில் 16 செ.மீட்டரும், நடுவட்டத்தில் 14 செ.மீட்டரும் மழை பதிவாகின.  ஊட்டி அருகேயுள்ள கப்பத்தொரை, முத்தோரை பாலாடா மற்றும் நஞ்சநாடு போன்ற தாழ்வான பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும், குந்தாபாலம் ராமைய்யா பிரிட்ஜ் அருகே மரம் விழுந்ததால் மஞ்சூர் ஊட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதுதவிர, ஊட்டியில் ரோஸ்மவுண்ட், நொண்டிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்தால், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம்: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. இதையடுத்து, அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கோவை மாவட்ட நிர்வாகம் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 98 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம்  உயர்ந்து வருவதால் வாய்க்கால் கரையோரம் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.  இதையடுத்து, கோவை, நீலகிரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணிப்பேட்டையில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து 36,000 கனஅடி நீர் வருகை
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாகவும் உபரி நீர் வெளியேற்றம் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.  

அதேபோல், 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 103.38 அடியாக உயர்ந்துள்ளதால் 6 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட  தண்ணீர், இன்று (24ம் தேதி) மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 12,000 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது. எனினும் நேற்றைய நீர்மட்டம் 73.07 அடியாகவும் நீர் இருப்பு 35.39 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்