SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்கொள்முதல் நிலையங்களில் பல கோடி ஆதாயம் பார்த்த இலைகட்சி இடைத்தரகர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-22@ 00:04:09

‘‘நெல் கொள்முதல் நிலையங்களை இலை கட்சி நாசப்படுத்தி வச்சிருந்ததாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவல மாவட்ட விவசாயிங்க கடும் வறட்சி, பெருமழை போன்ற எல்லா நெருக்கடிகளையும் சமாளிச்சி, தொடர்ந்து நெல் சாகுபடியில ஈடுபடுறாங்க. ஆனாலும், தங்களை கைதூக்கி விட வேண்டிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கடந்த 10 ஆண்டுகளாக இலை ஆட்சியில இடைத்தரகர்களோட கொள்ளை கூடாரமா இருந்துச்சுன்னு விவசாயிங்க வேதனைப்படுறாங்க. வெளி மார்க்கெட்ல, ஒரு குவிண்டால் நெல் அதிகபட்சமா ரூ.1,200க்கும் குறைவாத்தான் விலைபோகுதாம். ஆனா, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல ஒரு குவிண்டால் ரூ.1,940க்கு கொள்முதல் செய்யுறாங்களாம். இதனால, கஷ்டப்பட்டு விளைவிச்ச நெல் மூட்டைகளை அங்கு கொண்டுசென்றால், தரமில்லை, ஈரமாக இருக்குன்னு காரணங்களை கூறி நெல் மூட்டைகள எடைபோடாம திறந்தவெளியில வார கணக்குல காக்க வைச்சு விவசாயிகளை அலைக்கழிச்சு இருக்காங்க. ஆனால், வெளி மார்க்கெட்டுல இருந்து இலைக்கட்சி சிபாரிசில் இடைத்தரகர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகளுக்கு மட்டும், சிவப்பு கம்பள வரவேற்பு இருக்காம். அந்த நெல்மூட்டைகளுக்கு தரம், ஈரப்பதம், பதர், ரகம்னு எதையும் அதிகாரிங்க சோதிப்பதே இல்லையாம். மூட்டைக்கு குறிப்பிட்ட கமிஷன் தொகைய கறந்துட்டு, உடனுக்குடன் கொள்முதல் தொகையை ஆன்லைனில் அனுப்பிடுறாங்களாம். கடந்த ஆட்சியில இந்த மாவட்டத்துல மட்டும் செயல்படும் 71 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல, அதிகாரிகளும் இடைத்தரகர்களும் பல கோடி ஆதாயம் பார்த்திருப்பதாக பகீர் புகார்களை சொல்றாங்க விவசாயிங்க.
 கடந்த சில மாதங்களுக்கு இடைத்தரகருங்க மூலம் வெளி மாநில வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்துச்சு. ஆனால், அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கலயாம். இதனால, கடந்த 10 ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளை விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிங்க கோரிக்கை வெங்சிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜல் ஜல் ஸ்டேசனை குறிவைச்சிருக்காங்களாமே லேடி அதிகாரி...’’ என்று சிரிப்புடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘செல்வம் கொழிக்கும் பூமியாக மாங்கனி மாநகரம் இன்னும் திகழ்ந்து வருகிறதென்றால் அது மிகையில்லை. இதனால் தான் காக்கி அதிகாரிகள், சேலத்திற்கு வந்துவிட்டால் மீண்டும் வெளியே திரும்ப மனமே வராது. அதுபோலத்தான் எலக்சன்ல மாற்றப்பட்ட ஒரு பெண் த்ரீஸ்டார் அதிகாரியும். சொந்த மாவட்டம்னு அதியமான் மாவட்டத்துக்கு மாத்துனாங்க. தற்போது மீண்டும் மாங்கனி மாநகருக்கே இடம்மாற்றி வந்துட்டாங்களாம். மாங்கனியில் இருந்து 5 லேடி அதிகாரிகள் மாறுதலில் சென்றாலும், 4 லேடி அதிகாரிகள் உள்ளே வாராங்க. இதுல அந்த அதிகாரியும் ஒருவர். ஜல் ஜல் என ஒலிக்கும் ஸ்டேசன்ல அவர் இலைக்கட்சியின் ஆதரவுடன் வந்தார். இந்த பூனையும் பால்குடிக்குமா என மூக்கின்மேல் விரல் வைக்கும் அளவுக்கு சுருட்டினாராம். பணமழையில நனைஞ்சாலும் மேல் அதிகாரிகளின் பங்கை சரியா தட்டிவிட்டாராம். அதுவும் குட்காவில் கொட்டோ கொட்டென  கொட்டிச்சாம். அதே திட்டத்தோட மாங்கனி மாநகருக்குள் மீண்டும் காலடி  வச்சிருக்காங்களாம். எப்படியும் அந்த ஸ்டேசனை பிடிச்சே தீருவேன்னு சத்தமில்லாமல் சபதம் போட்டிருக்காருன்னா பாருங்களேன் அவரது தில்லை’’  என்றார் விக்கியானந்தா.
‘‘லஞ்ச ஒழிப்பு காக்கிகள் வலையில் சிக்காமல் அதிகாரிகளை பத்திரமாக பாதுகாக்கிறார்களாமே பத்திர எழுத்தர்கள்...’’
‘‘கடலோர மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமான மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த இலை ஆட்சியில் கிராமப்புற பகுதிக்கும், நகர் புறப்பகுதிக்கென இரண்டு பத்திர பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மாவட்ட பத்திர அலுவலகத்தில் எந்தெந்த பத்திர எழுத்தர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பத்திரம் பதிவு செய்கிறார்கள் என்ற கணக்கு இரண்டு பதிவாளர்களிடம் பிங்கர்  பிரிண்டாக இருக்குமாம்... ரூ.10 லட்சத்திற்கு வீடு அல்லது காலிமனை ஒருவர் வாங்கும்போது பத்திரம் பதிவுசெய்வதற்காக பதிவாளருக்கு மட்டும் லஞ்சமாக ரூ.3 ஆயிரம் பத்திர எழுத்தரிடம் தனியாக கொடுத்து விடவேண்டும். இல்லை என்றால்.... ஏதாவது ஒரு காரணத்தை காட்டி பத்திரத்தில் இரண்டு அதிகாரிகளும்  கையெழுத்து போட மாட்டார்களாம்... ரூ.10லட்சத்திற்கு ரூ.3 ஆயிரம்..  ரூ.10 லட்சத்தை தாண்டினால்... அதற்கான தொகை அதிகரிக்கும்... இப்படி நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 பத்திரத்திற்கு மேல் பதிவு செய்யப்படுவது கடந்த இலை ஆட்சியில் இருந்தே வாடிக்கையாக இருந்து வருகிறதாம்.. அப்படி பார்த்தால்.... ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை லஞ்சமாக இரண்டு அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனை  பத்திரங்கள் பதிவாகிறதோ அதற்கான தொகையை வெளியே தெரியாத அளவுக்கு தனித்தனியாக இரண்டு கவர்களில் வைத்து இரண்டு அதிகாரிகளிடம் கொடுத்து விட வேண்டும். அதுவும்... பணி முடிந்து இரவு வீட்டுக்கு செல்வதற்கு முன்  அவர்களிடம் கவரை கொடுத்து விட வேண்டும்.. அப்படி இல்லை என்றால்...  சம்பந்தப்பட்ட பத்திர எழுத்தர்களை லெப்ட் ரைட் வாங்கி விடுவார்களாம்...  இதுதவிர.... லஞ்ச ஒழிப்பு காக்கிகள் வலையில் இரண்டு அதிகாரிகளும் சிக்காமல்  இருக்க பத்திர எழுத்தர்கள் பாதுகாத்து விட வேண்டும். கடந்த ஆட்சியில் இப்படி தான் 2 அதிகாரிகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறார்களாம்..  அதனால் தான்... லஞ்ச ஒழிப்புத்துறையே பத்திர அலுவலகத்திற்குள்ளே நெருங்க  முடியாத அளவுக்கு ஒரு பலத்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருப்பதாக பத்திர பதிவு செய்ய வரக்கூடிய மக்கள் புலம்பி செல்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்