SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரவலுக்கு முற்றுப்புள்ளி

2021-07-20@ 00:06:55

இந்தியாவில் 2வது அலை முழு கட்டுக்குள் வராதபட்சத்தில், மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 3வது அலையின் பரவல் வேகம், வீரியம் எப்படி இருக்கும் என துல்லியமாக தற்போது கூற முடியாது. மருத்துவமனைகள் நிரம்பி வழியும்போது சிகிச்சையில் தாமதம் ஏற்படும். சுகாதார அவசர நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே 3வது அலையின் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 2வது அலையின் பாதிப்பை முன்கூட்டியே ஒன்றிய அரசு எச்சரித்து துரித நடவடிக்கை எடுத்திருந்தால், பெரும் பாதிப்பில் இருந்து தப்பித்து இருக்கலாம்.

நீண்ட சிந்தனைக்கு பிறகு மூன்றாவது அலையின் பரவல், பாதிப்பு குறித்து எச்சரிக்கை செய்து வருவது வரவேற்க வேண்டியது. 3வது அலை குறித்து பேசியதோடு, கடமை முடிந்து விட்டதாக ஒன்றிய அரசு இருக்கக்கூடாது. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தற்காலிக சுகாதார கட்டமைப்புகள் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில், பாரபட்சமும், தாமதமும் வேண்டாம். இந்தியாவில் 3வது அலை பரவ துவங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்கப்படும். இதனால் வழக்கமான பரிசோதனை செய்பவர்கள், பிற நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

இதை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெறும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். கொரோனா சிகிச்சை அளிப்பதில், கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் சிகிச்சை பெற்றவர்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, கொரோனா காலக்கட்டத்தில் தனியார் மருத்துவமனைகளை அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரலாம்.

 முக்கியமாக, ஒன்றிய அரசு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம். கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதல் நிதியை ஒதுக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட வேண்டும். சுகாதார துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலைமையை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர், மாநிலங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

மாநிலங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா விஷயத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும். இவர் நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், எந்த மாதிரியான அணுகுமுறையை கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 3வது அலை மட்டுமல்ல. எத்தனை அலைகள் வந்தாலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் மட்டுமே, தொற்று பரவலுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்