எல்லையோர ஆபத்து
2021-07-19@ 00:03:04

கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்தாலும், சில மாநிலங்களில் விடாப்பிடியாக நோயின் தாக்கம் நீடிக்கிறது. மத்திய சுகாதார அமைச்சக கணக்கீட்டின்படி கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 157 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் கேரளாவில் மட்டுமே 16,150 பேரும், மகாராஷ்டிராவில் 8,170 பேரும் உள்ளனர். மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 114 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில் தமிழகம் இல்லை. காரணம் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளால் வரும் ஆபத்து தீர்ந்தபாடில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இப்போது சராசரியாக 2 ஆயிரத்தை தொட்டு கொண்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கூட தினசரி பாதிப்பு 150ஐ ஒட்டியே உள்ளது. இருப்பினும் பக்கத்து மாநிலமான கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா தமிழகத்திற்குள் வர வாய்ப்புள்ளது. கேரளாவில் நேற்று கொரோனாவால் 16 ஆயிரத்து 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வார சராசரியாக தினமும் 13 ஆயிரத்து 409 பேர் தொற்று காரணமாக சிகிச்சைக்கு சேருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளும், தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக கேரளா செல்வோரும் அதிகம் உள்ளனர். இத்தகைய சூழலில், கேரளாவின் பாதிப்பு தமிழகத்திலும் தலைக்காட்டக் கூடும். அதிலும் ரயில்களில் வருவோர், செல்வோர் கொரோனாவை இங்கு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.
கடந்த மாதம் கொரோனா இரண்டாம் அலை தணிந்தபோது, கேரளாவில் அதன் பாதிப்புகள் கணிசமாக குறைந்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் அதிக தளர்வால், வழிபாட்டு தலங்கள் திறப்பு, பஸ், ரயில் நிலையங்களில் கூடிய அதிக கூட்டம் மீண்டும் கொரோனாவுக்கு வித்திட்டுள்ளது. கொரோனா 3ம் அலை எழுந்துள்ளதோ என அச்சப்படும் அளவுக்கு கேரளாவில் கடந்த இரு வாரங்களாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருதினங்கள் முழு ஊரடங்கு போடப்பட்டாலும் பாதிப்பு கட்டுக்குள் இல்லை.
படித்தவர்கள் மிகுந்த கேரளாவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் நோய் விழிப்புணர்வையே கேள்விக்குறியாக்குகிறது. கேரளாவில் பரவும் கொரோனாவால் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களுக்கும் ஆபத்து உள்ளது. எனவே கேரளாவில் இருந்து ரயில்களில் மற்றும் வாகனங்களில் வருவோரை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் தமிழகத்தில் அதிகம் காணப்படும் சூழலில், கொரோனா எண்ணிக்கை மீண்டும் கூடினால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும். முக கவசம், சமூக இடைவெளி தொடர்ந்தால் மட்டுமே கொரோனா அலையில் இருந்து தமிழகம் முற்றிலுமாக விடுபட முடியும்.
மேலும் செய்திகள்
உரிமை கோராத டெபாசிட்
தொடரும் ரெய்டு
ஆரோக்கியமான சமுதாயம்
தமிழகம் ஒளிர்கிறது
தமிழர் பெருமை
வழக்காடு மொழி தமிழ்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!