SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி அரசின் அடுத்த குறி

2021-07-18@ 00:08:43

இந்தியாவில் கடல் வளம் மிகுந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நாட்டின் மொத்த கடற்கரைப் பரப்பில் 13 சதவீதம், அதாவது 1076 கி.மீ நீளம் தமிழகத்தில்தான் உள்ளது. சுமார், 40 ஆயிரம் பாரம்பரிய படகுகள், 6 ஆயிரம் விசைப்படகுகளுடன் கடல் வளத்தை நம்பி உள்ள மீனவர்கள் எண்ணிக்கையோ 10 லட்சத்துக்கும் அதிகம். இவர்களது வாழ்க்கை இருள் சூழ தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்தான். அரசு ‘இந்திய மீன்வள வரைவு மசோதா’வை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது ஒன்றிய அரசு.

மோடி அரசு ஒரு சட்டத்தை கொண்டு வருகிறது என்றாலே அது ஏழைகள், சாமானியர்களுக்கு எதிரானதாகவும், பெரும் பணக்காரர்களுக்கு வெண் சாமரம் வீசுவதாகவும் இருக்கும் என்ற புதிய இலக்கணத்திற்கு இந்த சட்ட மசோதாவும் விதிவிலக்கல்ல. நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல்  என்று வரையறுக்கப்பட்டுள்ளது.  இதில் பாரம்பரிய மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் வரை மட்டுமே சென்று மீன் பிடிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உள்ளூர்  பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி இல்லை.

இத்தோடு விட்டால் நம் மீனவர்கள் பிழைத்துவிடுவார்களே. அப்படி விட்டுவிட முடியுமா? மோடி அரசால்… அதனால், கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். மீன் பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.  வெளிப் பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாக கருதப்பட்டு, அவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் புதிய சட்டத்தில். கப்பல் என்றால் மாலுமி வேண்டும், இயக்குபவருக்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும். மோட்டார் பொருத்தப்பட்ட கட்டுமரத்தில் இதெல்லாம் சாத்தியமா? அந்தச் சட்டத்தை அப்படியே அதிகாரிகள் செயல்படுத்தினால் மீனவர்கள் கடலில் கால்வைக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

படகுக்கான அனுமதி, ஆவணங்கள் சரியில்லை என்றால் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்க முடியும். இது இந்திய மீனவர்களின்  வாழ்வாதாரத்தைப் பறித்து, நம்  கடல் வளத்தை அந்நிய நிறுவனங்களுக்கு விருந்து படைக்க கொண்டு வரப்பட்டிருக்கும் மசோதா ஆகும். இதை, ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நம் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறிதான்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்