SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியூகம் தேவை

2021-06-22@ 00:34:41

இ ந்தியாவை அச்சுறுத்தும் வேலைகளில் சீனா இறங்கியுள்ளது. இது ஒருபோதும் பலிக்காது. இருந்தாலும் இவ்விஷயத்தில் ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதிக பணம் கொடுத்து கடனாளியாக்கி நேபாளத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடக்கிறது. இலங்கையும், நேபாளமும் சீனாவின் கட்டுக்குள் சென்றால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை மத்திய  அரசு புரிந்து கொள்ளவேண்டும். திட்டங்கள் என்ற பெயரில் இலங்கையில் சீனா கால் பதித்துள்ளது. இதனால் இந்திய கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம்.வான், தரை வழிகளை பாதுகாப்பது எளிது. ஆனால், கடல் பகுதியை பாதுகாப்பது கடினம். கடல் பகுதியை துல்லியமாக கண்காணிக்க  அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் நமக்கு தேவை. சீனா, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரிந்தும், இலங்கை, நேபாளம் அந்நாட்டுடன் நெருக்கம் காட்டுவது ஏன்? இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள்,  பிற நாடுகளை அணுகாத வகையில், நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதற்கான  முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தானில் அரசு கட்டுப்பாட்டில் இருந்த 27 மாவட்டங்களை தலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தெரிகிறது. ஆப்கான், தலிபான்களின் கூடாரமாக மாறினால், இந்தியாவுக்கு ஆபத்து. ஏனென்றால், தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் நெருக்கமாக உள்ளன. இதனால், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களை தலிபான்கள் மூலம் நிறைவேற்ற பாகிஸ்தான், சீனா முயற்சி செய்யலாம். எனவே எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது. ‘‘குவாட்’’ குழுவில் இந்தியாவுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கைகோர்த்திருப்பது சீனாவுக்கு பிடிக்கவில்லை. ஜி-7 அமைப்பில் உள்ள பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சீனா எதிரியாக கருதுகிறது. சமீபத்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

 கிழக்கு லடாக் எல்லையில் மோதல், இலங்கையுடன் நெருக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சீனா செய்து வருகிறது. சீனாவின் நோக்கம் என்ன? போர் சூழலை உருவாக்க  விரும்புகிறதா; அல்லது அச்சுறுத்த நினைக்கிறதா? இவற்றில் எதுவும் இந்தியாவிடம் எடுபடாது.  லடாக்கில் கொடுத்த பதிலடி மூலம் சீனா தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் சீனாவுக்கு தான் சிக்கல். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புகளை  நவீனப்படுத்த வேண்டும். சீனாவின் சவாலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க, ராஜதந்திர முறையில் வியூகம் வகுக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்