SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் மேகதாது

2021-06-21@ 00:13:22

தமிழகம் - கர்நாடகம் இடையே சற்றே அடக்கி வாசிக்கப்பட்ட காவிரி நதிநீர் பிரச்னை மீண்டும் மேகதாது அணை கட்டுமானத்தால் துளிர்விட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவசமுத்திரம் அருவியின் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில்  அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 5 ஆண்டுகளாக முயன்று வருகிறது. மேட்டூரில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வரத்து குறையும் என்பது நிதர்சனம், காவிரியின் வடிநில மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் பாழ்படும். காவிரி நதிநீர் தாவாவில் 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவினை மேகதாது அணை திட்டம் குறைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இத்திட்டத்தை எதிர்த்து கடந்த 2015ம் ஆண்டு தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. சமீபத்தில் கூட பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தங்களுக்கு சாதகமாக உள்ளதாக கூறி கொண்டு காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு மீண்டும் முருங்கை மரம் ஏற தொடங்கியுள்ளது. 9 ஆயிரம் கோடியில் கட்டப்படும் இந்த அணை மூலம் கர்நாடகாவிற்கு 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். பெங்களூருவின் குடிநீர் தேவையும் தீர்க்கப்படும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா புள்ளி விபரங்களை கோர்த்து வருகிறார். அதேசமயம் காவிரி தண்ணீரை நம்பியுள்ள தமிழக விவசாயம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை அவரும், மத்திய அரசும் உணர மறுக்கின்றனர்.

அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க தமிழக முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்க்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமியும், மேகதாது அணை விவகாரத்தில் சகோதரத்துவம் எனக்கூறி சமாளிக்கவே முற்படுகிறார். மேகதாது அணை குறித்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. ஆனால், அதையும் மீறி கர்நாடக அரசு புதிய முயற்சிகளை முன்னெடுப்பது, தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும். காவிரி ஆற்றில் வெள்ளம் வரும்போது, அதை திறந்து தமிழகத்திற்கு விடுவதும், வறட்சி காலங்களில் அணைக்கட்டு குறித்தான அரசியல் பேசுவதும் கர்நாடகா அரசியல் கட்சிகளின் வாடிக்கை. கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டால் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னமும் குறையாத நிலையில், மேலும் ஒரு அணையாக மேகதாது காவிரியின் குறுக்கே அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா நிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே, மேகதாது அணைக்கட்டுமானத்தை தடுக்க முடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்