SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலைக்கு தடை போட்ட தாமரை பெண் தலைவரால் கூட்டணியில் கோஷ்டி பூசல் வெடித்திருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2021-06-17@ 00:44:12

‘‘புது ரேஷன் கார்டுகளுக்கான கொரோனா நிவாரணம், 14 வகையான பொருட்களை தராமல் சுடும் அதிகாரிகளை பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. நானும் கேள்விப்பட்டேன். புது ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்   செய்தவர்களுக்கு, ‘உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது’ என்ற தகவலுடன் பதிவு எண் செல்கிறது. செல்போனில் வரும் இந்த எண்ணை வைத்து ₹ 4 ஆயிரம் நிவாரணம், 14 வகையான தொகுப்புகளை வாங்கிக் கொள்ள முடியும் என்று   அரசு அறிவித்துள்ளது. ஆனால், சென்னை அருகே உள்ள பல்லாவரம் உள்ளிட்ட சில   ரேஷன் கடைகளை கண்காணிக்கும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், செல்போன் எஸ்எம்எஸ்சுடன் வரும் நபர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்க கூடாது. வழங்கினால் உங்கள் சம்பளத்தில் கைவைப்போம் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதனால் பிரச்னையில் சிக்க விரும்பாத ஊழியர்கள் ரேஷன் அட்டை இருந்தால் நிவாரணம்... எங்களை சங்கட படுத்த வேண்டாம் என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்புகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ ஆட்சி மாறியும் கிராமங்களில் காட்சிகள் மாறவில்லை... அதிகாரிகளும் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்ற பேச்சு பரவலாக ஒலிக்கிறதே... உண்மையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அரசு  அலுவலகங்களில் அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் தற்போதைய முதல்வர் படம்  வைக்கப்படும். முன்னாள் முதல்வரின் படம் நீக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் நகர்ப்புற  பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஏற்கனவே இருந்த முன்னாள் முதல்வர்கள்  ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டு மு.க.ஸ்டாலின்  படங்களும், கூடுதலாக சில அலுவலகங்களில் கலைஞர் படமும் வைக்கப்பட்டுள்ளது.  ஆனால்,  கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அலுவலகம் உள்ளிட்ட சில அரசு  அலுவலகங்களில் இன்னும் அதிமுக தலைவர்கள் படங்களே வைக்கப்பட்டுள்ளதாம். கேட்டால் நாங்க அந்த கட்சியை சேர்ந்தவங்க என்று குசும்பு பேசுகிறார்களாம். எந்த கட்சியாக இருந்தாலும் முதல்வர் படத்தை வைக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். இதுகுறித்து கேட்டபோது, சென்னை தலைமை  அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும், எந்த படம் வைக்க வேண்டும் என்ற படமும்  தங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம்...‘‘ என்றார் விக்கியானந்தா.
‘‘இனி கட்சி போதும்... சேர்த்த சொத்தை சேமித்து வைக்க வேண்டும். கட்சி என்று போய் நடுத்தெருவில் நிற்க விரும்பாத இலை கட்சியின் வேட்பாளர் பற்றி சொல்லுங்க...’‘ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென் மாவட்டத்தில் உள்ள திரு.. பத்தூர்.. தொகுதியில் கடந்த தேர்தலில் இலைக்கட்சி சார்பில் அதன் செய்தி  தொடர்பாளர் போட்டியிட்டார். இதற்காகவே இந்த தொகுதிக்குள் சொந்தமாக  வீடும் கட்டினாராம். கொரோனா முதல் அலையின்போது தேர்தலை மையமாகக்  கொண்டு தன் ஆதரவாளர்களுடன் சென்று ஆங்காங்கே நிவாரணப் பொருட்களும்  வழங்கினார்.   இதன்பிறகு தொகுதிக்குள் இவரை எந்த நிகழ்வுகளிலும் பார்க்க முடியவில்லை.  தேர்தலுக்கு முந்தைய முதல் அலையில் உதவிக்கு ஓடி வந்தவரை, கொரோனா இரண்டாவது  அலையில் பார்க்கவே முடியவில்லையாம். அவரது அடிபொடிகளிடம் விசாரித்தால்... அண்ணன் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து தேர்தலில் நின்று ஏதோ ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார். 2வது  அலையில் சிக்கி  இருப்பதை செலவிட்டு போண்டியாக விரும்பவில்லையாம்... அடுத்த தேர்தல் வரட்டும் சீட் கொடுக்கட்டும் அப்போது செலவு செய்கிறேன்.. இப்போதைக்கு ஆளை விடுங்கப்பா என்று பயந்து ஒளிகிறாராம்... இவரின் நடவடிக்கை குறித்து மேலிடத்துக்கு புகார்களை தட்டி விட்டு இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு லாபம் என்று குறிப்பிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்த தாமரையின் பெண் தலைவர் மீது மாவட்ட கட்சித் தலைவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை  தெற்கு தொகுதி தாமரை கட்சியின் மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் வானத்தின் பெயரை கொண்ட பெண் பிரதிநிதி. ேதர்தலுக்கு முன்பாக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தினமும் ஆலோசனை... கூட்டணியினருடன் வாக்கு சேகரிப்பு என்று ஒரு கூட்டமாகவே இருந்து வந்தாராம். தேர்தலில் ஜெயித்த பிறகு இவர் ஆளே மாறிவிட்டாராம். நேற்று  முன்தினம் கோவையில் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதி அலுவலக  திறப்பு விழா நடத்தினார். இந்த அலுவலகத்தை, கடந்த 5 ஆண்டு காலமாக இலை கட்சியின் மக்கள் பிரதிநிதி வில்லுக்கு பெயர் போனவர் பயன்படுத்தி வந்தார். இந்த  தேர்தலில் அவர் தொகுதி மாறி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்றுள்ளார். இவரை தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவுக்கு  வானத்தின் பெயரை கொண்ட பெண் பிரதிநிதி அழைக்கவே இல்லையாம். அவரும் அழைப்பு வரும் தன் அலுவலகமாச்சே..னு வாழ்த்திவிட்டு வரலாம் என்று காத்திருந்தாராம். ஆனால்,  அழைக்கவில்லை. இதனால், வில்லுக்கு பெயர் போன மக்கள் பிரதிநிதி அப்செட்டில் தனக்கு நெருக்கமானவர்களுடன் புலம்பி வர்றாராம்..  டெலிபோனில்கூட அழைப்பு விடுக்கவில்லையே என சகாக்களிடம் கூறி  வருத்தப்பட்டுள்ளார். இலை கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாங்கனி உள்ளிட்ட இதர  கட்சி தலைவர்களுக்கும் வானத்தின் பெயரை ெகாண்ட பெண் அழைப்பு விடுக்கவில்லையாம். இதனால் அவர்களும்  மனக்கசப்பில் உள்ளனர். ‘’நாங்கள் இதே கோவையில் கடந்த 30 வருடங்களுக்கும்  மேலாக அரசியல் செய்து வருகிறோம். ஆனால், நேற்று வந்தவர்கள், அதுவும் எங்கள்  தயவில் வென்றவர்கள், எங்களை பேருக்குகூட அழைக்கவில்லை’’ என இலை கட்சியினர் பொறிந்து தள்ளியுள்ளனர். இதன்மூலம், கோவையில் இலைக்கும்-தாமரைக்கும்  கூட்டணிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்