SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வரான பின் முதன் முறையாக டெல்லிக்கு 2 நாள் பயணம்: பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் நாளை சந்திப்பு

2021-06-16@ 21:53:14

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக 2 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் நாளை காலை டெல்லி செல்கிறார். மாலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, நீட் தேர்வு ரத்து, கூடுதல் தடுப்பூசி, 7 பேர் விடுதலை, அதிமுக மாஜி அமைச்சர்கள் ஊழல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு முதல்வராக கடந்த மே 7ம் தேதி பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார். தடுப்பூசி குறித்து அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, நாளுக்கு நாள் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.

நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் போட்டு செல்கின்றனர். ஆனால், போதிய அளவில் ஒன்றிய அரசு தடுப்பூசியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யாததால், அடிக்கடி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தடைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கேட்டு பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி பிறகு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், தடுப்பூசி தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதனால், மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு சிக்கல் ஏற்பட கூடாது என்பதற்காக, மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தி கொள்கிறோம். எனவே, நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடக்கும் நுழைவுத்தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். பிளஸ் 2 சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 வாரங்கள் மேலாகியும் இதுவரை நீட் தேர்வு தொடர்பாக, எந்த அறிவிப்பையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக 2 நாள் பயணமாக நாளை மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். விமான நிலையத்தில் ஸ்டாலினுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக எம்பிக்கள் அனைவரும் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

பின்னர், அவரை தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின், சிறிது நேரம் ஓய்வுக்கு பின், மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் அதிகளவில் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், கறுப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகளையும் தமிழகத்திற்கு கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும், ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்த, ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதியுடன், கூடுதல் நிதியும் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஸ்டாலின் பேச உள்ளார். தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை அடங்கிய மனுவையும் மோடியிடம் ஸ்டாலின் வழங்க உள்ளார். தற்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்க உள்ளார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர்கள் செய்த ஊழல்கள் அடங்கிய பட்டியலையும் மோடியிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஊழல் குறித்து தமிழகத்தில் தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதையும் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூற உள்ளார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கியுள்ள நிலையில், தற்போது முதல்வரான பிறகு பிரதமரிடம் வழங்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. பிரதமருடனான சந்திப்பு முடிந்த பிறகு டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலக கட்டிடத்தையும் பார்வையிடுகிறார்.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆகியோரையும் சந்தித்து பேச மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி செல்லும் முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் செல்கின்றனர்.

நாளை மறுநாள் சோனியா, ராகுல், டி.ராஜா, யெச்சூரியுடன் ஆலோசனை
டெல்லிக்கு நீண்ட இடைவெளிக்கு பின் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்தில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு திமுக அலுவலகமான அறிவாலயத்தின் கட்டுமான பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்காக கட்டப்பட்டு வரும் அறையை பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டு வரும் வசதிகள் குறித்து கேட்டு அறிந்து கொள்ள உள்ளார். பின்னர், மாலையில் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்