SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு முதல் அடி திரிணாமுல் கட்சிக்கு திரும்பினார் முகுல் ராய்: ஆட்டத்தை ஆரம்பித்தார் மம்தா பானர்ஜி; இன்னும் பலர் வர காத்திருப்பதாக தகவல்

2021-06-12@ 01:25:39

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசிலிருந்து பல முக்கிய தலைவர்களை வளைத்துப் போட்ட பாஜவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல் அடி கொடுத்துள்ளார். பாஜவில் சேர்ந்த மூத்த தலைவர் முகுல் ராய் தனது மகன் சுப்ரன்ஷூவுடன் 4 ஆண்டுக்குப்பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரசிலேயே சேர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பலர் பாஜவிலிருந்து திரும்பப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ குறுக்கு வழியில் வெற்றி பெற, ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பல முக்கிய தலைவர்களை வளைத்துப் போட்டது. கட்சியில் அதிகாரம் மிக்க தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி தனது குடும்ப அரசியல் வாரிசுகளுடன் பாஜவில் ஐக்கியமானார்.

ஆனாலும், நந்திகிராம் தொகுதியில் சுவேந்துவை வைத்து மம்தாவை மட்டுமே வெல்ல முடிந்த பாஜவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் மம்தா அமோக வெற்றி பெற்று, 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் வெற்றியோடு, வரும் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சி தாவிய முக்கிய தலைவர்களை மீண்டும் பாஜவிலிருந்து அழைத்து வர மம்தா காய் நகர்த்தி வருகிறார். அவரது முதல் குறி மூத்த தலைவர் முகுல் ராய். கட்சியில் மம்தாவுக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி கடந்த 2017ம் ஆண்டு பாஜவில் இணைந்தார். அங்கு அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் பாஜவில் முகுல் ராய் ஓரம்கட்டப்பட்டார்.

சமீபத்தில் முகுல்ராயின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மம்தாவின் மருமகனும் கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜ கூட்டத்தில் முகுல்ராய் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர், பாஜவில் இருந்து திரிணாமுலுக்கு திரும்ப  உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் பவனுக்கு தனது மகன் ஷுப்ரன்ஷுவுடன் நேற்று வந்த முகுல் ராய், மம்தா முன்னிலையில் மீண்டும் திரிணாமுல் காங்கிரசிலில் தன்னை இணைத்துக் கொண்டார். முகுல் ராயை வரவேற்ற மம்தா, ‘‘மீண்டும் வீட்டுக்குத் திரும்பி விட்டீர்கள். பிறரைப் போல நீங்கள் துரோகியாக இருக்கவில்லை. பாஜ யாரையும் அமைதியாக இருக்க விடாது, எல்லாரையும் நெருக்கடியிலேயே வைத்திருக்கும் என்பதை முகுல் ராய் நிரூபித்துள்ளார்’’ என்றார். முகுல் ராய் பேசுகையில், ‘‘என்னால் பாஜவில் இருக்க முடியாது. மம்தா பானர்ஜியுடன் எப்போதுமே எனக்கு எந்த முரண்பாடும் இருந்ததில்லை. அவர் மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவர்’’ என்று புகழ்ந்தார். இது பாஜவுக்கு விழுந்துள்ள முதல் அடி என கூறும் திரிணாமுல் காங்கிரசார், இன்னும் அடுத்தடுத்து பலர் பாஜவிலிருந்து விலகி திரிணாமுலுக்கு வர இருப்பதாக கூறுகின்றனர்.

* சுவேந்து வந்தால்…?
இதே போல சுவேந்து அதிகாரி திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என மம்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘சுவேந்து போல முகுல் ராய் மோசமானவர் அல்ல. நிதானமானவர்களும், கசப்பை ஊக்குவிக்காதவர்கள் மட்டுமே மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்’’ என்றார். பாஜ மாநில தேசிய பொதுச் செயலாளர் ஜாய் பிரகாஷ் மஜூம்தர் கூறுகையில், ‘‘முகுல் ராய் முடிவால் பாஜவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் வந்து மூன்றரை ஆண்டில் பாஜ எந்த ஆதாயமும் அடையவில்லை’’ என்றார்.

* பிரனாப் மகன் கட்சி தாவலா?
உபியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் ஐக்கியமானார். இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் மகனுமான அபிஜித் முகர்ஜி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் இணையப் போவதாக சில டிவி மற்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. இதனை அபிஜித் மறுத்துள்ளார். ‘‘நான் இப்போதும் காங்கிரசில் இருக்கிறேன். நான் வேறு கட்சியில் சேர்ந்ததாக வரும் தகவல்கள் பொய்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்