SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்த 6 மாதத்தில் உ.பி பேரவை தேர்தல்; ‘ஆள்’ தூக்கும் வேலையை ஆரம்பித்தது பாஜக: ராகுலின் நம்பிக்கைக்குரிய தலைவர் திடீர் விலகல்

2021-06-10@ 20:33:03

லக்னோ: அடுத்த 6 மாதங்களில் உத்தரபிரதேசத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், எதிர்கட்சிகளை சேர்ந்த பிரபலங்களை பாஜகவில் இழுக்கும் வேலைகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. அந்த வகையில், ராகுலின் நம்பிக்கைக்குரிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களில் ஆட்சியை தக்கவைக்கவும் அல்லது ஆட்சியை கைப்பற்றவும் எதிர்கட்சிகளை சேர்ந்த பிரபலங்களை தங்களது கட்சிக்கு இழுப்பதை முக்கிய பணியாக கொண்டுள்ளது.

அப்படித்தான், 2019க்கு பின்னர் நடந்த மாநில தேர்தல்களில் செய்தது. சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் திரிணாமுல் தலைவரான மம்தாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிரபலமாக கருதப்பட்ட சுவேந்து அதிகாரியை தங்களது கட்சிக்குள் வளைத்துப் போட்டது. அவரையே, மம்தாவுக்கு எதிராக களமிறக்கி தோற்கடித்தது. தற்போது பாஜக மேற்குவங்கத்தில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட, அதில் பாதி பேர் திரிணாமுல், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்தாண்டு துவக்கத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், ‘ஆள்’ தூக்கும் வேலையில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், ராகுல்காந்தியின் நெருங்கிய உதவியாளருமான காங்கிரஸ் மூத்த தலைவரான ஜிதின் பிரசாத்தை தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டது. இது, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், ராகுலின் நெருங்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியாவை தங்களது கட்சிக்குள் பாஜக இழுத்துப் போட்டது. அதனால், கமல்நாத்தின் ஆட்சியே பறிபோனது. தற்போது உத்தரபிரதேசத்தில் ஜிதின் பிரசாத் பாஜகவுக்குள் வந்துள்ளதால், குறிப்பிட்ட சமூக மக்களின் அதிருப்தியில் இருந்து தப்பமுடியும் என்று பாஜக நம்புகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிரிஜேஷ் சுக்லா கூறுகையில், ‘ஜிதின் பிரசாத் பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

உத்தரபிரதேசத்தில் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருந்தும், இனி வரும் நாட்களில் அவர்கள் என்ன முடிவை எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் காங்கிரசால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. ஜிதின் பிரசாத் வருகையால் பாஜகவுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறவும் முடியாது. காரணம், 2014, 2019ல் நடந்த தேர்தலில் ஜிதின் பிரசாத் வெற்றி பெறவில்லை. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஜிதின் பிரசாத் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம்’ என்றார்.

ஜிதின் பிரசாத் பாஜகவில் சேருவதற்கு முன்பு, கடந்த ஆண்டு ‘பிராமண சேத்னா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்கினார். மாநிலத்தில், சுமார் 12 சதவீத பிராமண வாக்கு வங்கி உள்ளது. பல தொகுதிகளின் மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிராமணர்களாக உள்ளனர். அதனால், வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பதில், அவர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 2007 சட்டமன்றத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி பிராமண - தலித் சமூக கூட்டணி என்ற பெயரில் 207 இடங்களில் வென்றது.

இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பிராமணர்களுக்கு 86 சீட்டுகளை வழங்கியது. இந்த சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள், வாக்கு வங்கி அடிப்படையில் பிரபலங்களை இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளதால், உத்தரபிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்