SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டு வலிமை

2021-06-10@ 00:27:24

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் தொழில்கள் முடங்கியிருக்கும் நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் மற்றும் சிறு கடனாளிகள் தங்களது கடனை திருப்பிச்செலுத்த கால அவகாசம் கோரி வருகின்றனர். அவர்களுக்கு தோள் கொடுத்து உதவும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இறங்கியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள் இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பிச்செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டும் என ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், டெல்லி,  ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா,  மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு கடந்த ஜூன் 8ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

 அதில், ‘‘கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றை பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம். ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கவேண்டும் என்றும் நாம் வலியுறுத்தினோம். நம் அனைவரின் கூட்டு முயற்சியின் காரணமாக, பிரதமர் தனது முந்தைய கொள்கையை கடந்த ஜூன் 7ம் தேதி மாற்றியமைத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், ‘‘குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றில் இருந்து காப்பாற்ற, மாநில அரசுகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளை கொண்டுள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், குறைந்தது 2021-2022ம் ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களை திருப்பிச்செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்கவேண்டும். இந்த கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’’ எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், சிறு கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இதை, மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது செயல்பாட்டை முன்னெடுத்துள்ளார். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அதேபோல ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வழிக்கு வந்தது. தற்போது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரண்டாவது அடியை எடுத்து வைத்துள்ளார். அதிலும் வெற்றி நிச்சயம் என்பது கண்முன்னே தெரிகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்