SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமதம் ஏன்?

2021-06-09@ 00:06:18

ஒருவழியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மாநிலங்கள் அனைத்தும் வேண்டுகோள், கதறல், கோரிக்கை இன்னும் பல விதங்களில் குரல் எழுப்பியும் எதையும் கேட்காதது போல், கேட்காமல் இருந்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் தலையில் இரண்டு குட்டு போட்டு கேள்வி எழுப்பியதால் , தாமதமாக இருந்தாலும் இப்போது பதில் வந்து இருக்கிறது.  கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்தபோது மத்திய அரசு எதிலும் தலையிட விரும்பவில்லை. ஊரடங்கை அமல்படுத்துவது உள்பட அனைத்து பொறுப்புகளும் மாநில அரசு களின் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஜனவரி 16ல் கொரோனா தடுப்பூசியாக கோவாக்சின், கோவிஷீல்டு அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டன. முன்னுதாரணமாக செயல்பட்டு, மக்களின் பயத்தை போக்க விரும்பாமல், தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தாமல், வெளிநாடுகளுக்கு 6 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கொரோனா இரண்டாம் அலை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் அடைந்தபோது தடுப்பூசியை தேடி மக்கள் ஓடினர். ஆனால் எங்கு பார்த்தாலும் தடுப்பூசி தட்டுப்பாடு. இந்த சூழலில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி தட்டுப்பாடு. இந்த சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எங்கே என்று கேட்டால், அதை  உரிய விலை கொடுத்து மாநிலங்கள் வாங்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. பணமா முக்கியம், உயிர்தான் முக்கியம் என்று கூறி பல மாநில அரசுகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து, உரிய பணத்தை கொடுப்பதாக கூறியும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உரிய சப்ளை செய்ய முடியவில்லை. சரி வேறு வழியில்லை, உலகளாவிய டெண்டருக்கு போகலாம் என்றால் மத்திய அரசை தாண்டி, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்ய மற்ற நாடுகளின் மருந்து கம்பெனி நிறுவனங்கள் தயாராக இல்லை.

ஒருபுறம் தடுப்பூசி தட்டுப்பாடு, மறுபுறம் தடுப்பூசி மையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் என்று மாநில அரசுகள் திணறிப்போய் விட்டன. இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றன. அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம் மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவிட்டதையும் கண்டித்தது. இதன்பிறகே அவசர அவசரமாக ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி. மாநிலங்களின் வரிவருவாய் தான், மத்திய அரசின் பொருளாதாரம். மாநிலங்கள் தவிக்கும் போது கைகொடுப்பதுதான் மத்திய அரசின் கடமை. அதுவும் இந்த கொரோனா பேரிடர் நேரத்தில் இரண்டாம் அலை தாக்கத்தின் உச்சியில் மத்திய அரசு இத்தனை தாமதம் செய்து இருக்க வேண்டியது இல்லை. முந்தி செயல்பட்டு இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்