SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொன்னா கேட்டுக்கணும்

2021-06-06@ 00:04:07

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் 21ம் தேதி இதுவரை இல்லாத அளவாக 36,184 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட துவங்கியது. இப்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தளர்வற்ற ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்தினால் அது பலரையும் பொருளாதார ரீதியில் நொடித்துப்போக செய்துவிடும் என்பதை அரசு உணர்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து நாளையுடன் நிறைவடையும் இருவார கால தளர்வற்ற ஊரடங்கை மேலும் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து அதிகாரிகள், மருத்துவர்களிடம் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதன் முடிவில் பல தளர்வுகளுடன் ஊரடங்கை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழ்நாடு கொரோனா கட்டுக்குள் வந்த மாவட்டங்கள், கட்டுக்குள் வராத மாவட்டங்கள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளுக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களாக மூடிக்கிடக்கும் பெரும்பாலான கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் கொரோனா கட்டுக்குள் வராத மாவட்டங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே நேரம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திலும் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுக்குள் உள்ள பிற மாவட்டங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக சலுகைகள் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைகள் மூடிக்கிடப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்கவும், வாழ்வாதார பிரச்னையை தீர்க்கவும் இந்த தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது நல்லது. ஏதோ கொரோனாவை தமிழ்நாட்டை விட்டே ஒழித்து விட்டதாக நினைத்து மீண்டும் கூட்டம் கூட்டமாக ஊர் சுற்றுதல், தேவையின்றி கூடுதல், சமூக இடைவெளியை மறத்தல் போன்ற செயல்களில் இறங்கினால் நிலைமை மீண்டும் விபரீதமாகி, கொரோனாவின் கோரப்பிடியில் மீண்டும் சிக்கிக் கொள்வோம். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். முதல்வர் சொன்னதை கேட்டுக்கொண்டு, அரசின் பிற கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாக பின்பற்றி கொரோனாவை விரட்ட சூளுரைப்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்