SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா மாஜி அமைச்சரின் ஆதரவுடன் ஊழலில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடுக்கத்தில் இருப்பதை சொல்கிறார் wiki யானந்தா

2021-05-15@ 00:42:37

‘‘ஊழல் அதிகாரிகள் எல்லோரும் கலக்கத்தில் இருக்கிறார்களாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் ஆண்ட மாவட்டத்தில் கடைசியில் முடியும் ராஜ் பெயர் கொண்டவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் இவருக்கு நெருக்கமான வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார்கள் பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டார்களாம்.. தற்போது ஆட்சி மாற்றத்தால் தங்களுக்கு ஏற்பட போகும் நிலைமை குறித்து அவர்களுக்குள் புலம்பி வருகின்றார்களாம்... நெற்களஞ்சிய மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் எடுக்கும் பிரிவில் உள்ள பெண்  டி.ஆர்.ஓ ஏற்கனவே இந்த மாவட்டத்தில் ஆர்.டி.ஓ.,வாக இருந்துள்ளார்.

இவர் மாஜி அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாராம்.. வருவாய்த்துறையில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய காலத்தில் அனைத்து தாசில்தார்களும் இந்த பெண்  அதிகாரியுடன் நெருக்கமாக இருந்தார்களாம்.. கடந்த ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுக்கும் பணிக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் நடந்தபோது இந்த மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி பிரமுகரான தியேட்டர் உரிமையாளர் ஒருவரின் நிலத்திற்கு மாஜி அமைச்சரின் சிபாரிசின்  பேரில் உரிய இழப்பீடுக்கு மேல் கூடுதலாக ஒன்னே முக்கால் கோடி வழங்கப்பட்டதாம்.. பாபு என்று முடியும் தாசில்தார் ஏற்பாட்டில் இந்த பெண் அதிகாரி அந்த தொகை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தாராம். இந்த சம்பவம் மாவட்டம்  முழுவதும் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் அனைவரும் மாஜி அமைச்சரின் ஆதரவுடன் பெரும் ஊழலில் சிக்கி இருக்கும் நேரத்தில் தற்போது ஆட்சி மாற்றத்தால் நேர்மையான அதிகாரிகள் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் சம்பவங்கள்  குறித்து தற்போது போட்டு உடைப்பதற்கு தயாராக இருப்பதால் ஊழல் அதிகாரிகள் அனைவரும் கிலியில் இருந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருத்தர் உதார் காட்டுறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

 ‘‘இலைக்கட்சி ஆட்சிக்கு விசுவாசமாக  இருந்துகொண்டு சிறப்பாக செயல்படாத அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு  வருகின்றனர். நேர்மையான, மக்களுக்கு நல்லதை செய்யும் எண்ணம் கொண்ட ஐஏஎஸ்,  ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது  மலர்ந்துள்ள ஆட்சியில் பொறுப்புக்கு  வந்துள்ளனர். இது வழக்கமாக நடக்க கூடிய மாற்றங்கள்தான் என்றாலும்,  மாங்கனி  மாநகரில் எதிர்கட்சி எம்எல்ஏ ஒருவர் நடத்தும் தனி ஆவர்த்தனம், காக்கி  அதிகாரிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி  இருக்காம். அந்த எம்எல்ஏ, ஒவ்வொரு  அதிகாரிகளுக்கும் போன் செய்து, உங்களுக்கு எந்த ஸ்டேஷன் வேணும்னு கேளுங்க,  நான் செஞ்சித்தாறேன்னு சொல்றாராம்.

எதிர்கட்சி எம்எல்ஏவுக்கு எந்த பவரும்  கிடையாதே.. அதுமட்டுமில்ல, இவரு  எதிர்க்கட்சி கூட்டணியில் நின்னு ஜெயிச்சவரு.  இவரால் எப்படி ஸ்டேஷன் மாத்தி தர முடியும் என்று காக்கி அதிகாரிகள் கடும்  குழப்பத்துல இருக்காங்களாம். ஆனால், என்னாலும்  இன்ஸ்சுகளை இடமாறுதல்  செய்ய முடியும். அதற்கான  பவர் என்கிட்டயும் இருக்கு. எனக்கு  வேண்டப்பட்டவர்களை மாங்கனி மாநகருக்கு  கொண்டு வந்தே தீருவேன் என்று  மார்தட்டுகிறாராம் அந்த நியூ எம்எல்ஏ’’ என்றார் விக்கியானந்தா.
  ‘‘கோட்டை மாவட்டத்துல எதற்கும் அஞ்சாத பெண் அதிகாரியின் ஆட்டம் இன்னும் அடங்கலியாமே..’’

 ‘‘வெயிலூரான  மாவட்டத்தின் உச்ச அதிகாரி ரெண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஒன்றியத்துக்கு  ஆய்வு செய்ய சென்றாராம். அப்போது அங்கு நடக்காத பணிகளுக்கும் பில் பாஸ்  செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியில் உறைஞ்சி  போனாராம். உடனடியாக  சம்பந்தப்பட்ட துறையின் பெண் மாவட்ட அதிகாரியை, அது தொடர்பாக விளக்கம்  அளிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். அந்த பெண் அதிகாரியும், தனக்கு கீழே  பிடிஓ ரேங்குல இருக்கிற அதிகாரியை கூப்பிட்டு, பெயருக்கு ஒரு அறிக்கை  தயாரித்து வழங்கும்படி கேட்டாராம். இது என்னடா, நமக்கு வந்த சோதனை,  சிக்கலாயிடும் போலிருக்கேன்னு நினைத்த  அந்த அதிகாரி உடனடியாக தான் தயாரித்த  அறிக்கையை மாவட்ட உச்ச அதிகாரிகிட்ட கொடுத்து,

பெண் அதிகாரி ஆடிய  ஆட்டத்தையெல்லாம் ஒண்ணுவிடாம கொட்டி தீர்த்துட்டாராம். அதோட, அந்த பெண்  அதிகாரி, மாநிலத்தில இதே  துறையின் உச்ச அதிகாரியா இருக்கிற ‘ஹன்ஸ்’ ஆன  அதிகாரி துணைவியின் நெருங்கிய தோழியாம். வாங்குற கமிஷன்ல சரியா பிரிச்சி  கொடுத்துடுவாராம். இதனால எத்தனை புகார் வந்தாலும் அவர் மேல துறையோட மாநில   உச்சஅதிகாரி நடவடிக்கை எடுக்கிறதில்லை என்பதையும் போட்டு உடைச்சாராம். இதனால்  கோபத்தின் உச்சிக்கே போன மாவட்ட உச்சஅதிகாரி, பார்க்கலாம். தப்பு  செஞ்சவங்க தப்பிக்க முடியாது. யார் சிபாரிசு இருந்தா என்ன என்று கூறி அந்த  அறிக்கையை வாங்கி வச்சுகிட்டாராம். இது தெரிஞ்ச அந்த பெண் அதிகாரி,   தன்னிடம் கேட்காமல் போய் எப்படி மாவட்ட உச்ச அதிகாரிகிட்ட, அறிக்கைய  கொடுக்கலாம்னு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.                 <

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்