SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் இருந்து சேலத்துக்கு எடப்பாடி வேகமாக சென்றதன் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-14@ 03:12:43

‘‘என்னை மீறி எதுவும் நடக்காது. இந்த ஸ்டேஷன்ல எனக்கு தான் வானளாவிய அதிகாரம் இருக்குனு சொல்லும் காக்கி யாரு... எந்த மாவட்டம்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்  மாவட்டத்தில் நகரின் மையப்பகுதியான நார்த் ஸ்டேஷன்ல ரைட்டராக மலையாள நடிகர்  பெயர் கொண்ட மூன்றெழுத்து கொண்ட நபர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்  நிலையத்தில் குற்ற வழக்கில் கையெழுத்திட வருபவரிடம் ‘க’ வாங்கிக் கொண்டு  அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாராம். ேமலும் ஸ்டேஷன்ல வேலை செய்யும்  பெண் போலீசாரிடம் கடலை போடுவது அவர்களை கேலி செய்வது உள்ளிட்ட பல முகம்  சுளிக்கும் வேலைகளில் கைதேர்ந்தவராம். இது சம்பந்தமாக எஸ்பி  அலுவலகத்தில் புகார் தெரிவித்தாலும் எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவரிடம்  தான் அந்த மனு வரும். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நடவடிக்கை என்  மீது பாயாது என்று காலரை தூக்கிக்கொண்டு சொல்கிறாராம். என் வானளாவிய அதிகாரம் யாருக்கும் இல்லை என்கிறாராம். இவரின் ஆட்டத்திற்கு  முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்பதே அங்கிருக்கும் பெண் காவலர்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சென்னையில முக்கியமான மீட்டிங் இருக்கும்போது சேலத்துக்கு ஏன் எடப்பாடி சென்றார்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சின்னமம்மியின்  முக்கிய ஆதரவாளராக இருந்தவர்தான் மாஜி முதல்வர். அவரது மனதில் முதல்வர்  ஆசையை விதைத்து, அதன்மூலம் வீசிய அதிர்ஷ்டக்காற்றில் இவருக்கு லட்டுபோல  முதல்வர் பதவி கிடைச்சதா கட்சிக்காரங்க, அப்பவே பேசிக்கிட்டாங்க. கடந்த 4  ஆண்டுகளில் பதவி என்ற நாற்காலியின் பவர் என்னன்னு அவருக்கு தெரிஞ்சு  போச்சாம். இதனால தேர்தல்ல கட்சி தோற்ற பிறகும் எப்படியும் எதிர்க்கட்சி  தலைவர் பதவியையாவது பிடிச்சே ஆகணும்னு வாயை திறக்காமலேயே ஆதரவாளர்களை வச்சு  அந்த பதவியையும் பிடிச்சிட்டாராம்.
இந்த நிலையில் தான் சட்டமன்ற  அனைத்துகட்சி கூட்டத்த கூட்டுவதற்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.  இலைக்கட்சி ஆட்சியில் எத்தனையோ முறை அனைத்துக் கட்சி கூட்டத்தை  கூட்டுங்கன்னு சொல்லியும் சேலத்துக்காரர் கூட்டாம அலட்சியம் செஞ்சிட்டாரு.  இந்த கூட்டத்துல கலந்துகிட்டா தனக்கு பெருத்த அவமானம் ஏற்படும்னு நினைச்ச  அவர் யாருக்கிட்டயும் சொல்லிக்கொள்ளாம சொந்த ஊருக்கு ஓடிவந்துட்டாராம். எதிர்க்கட்சி  பதவியை பிடிக்க இவ்வளவு போட்டி போட்ட நீங்க, கொரோனாவுல பாதிக்கப்படும்  மக்கள் பிரச்னை குறித்து ஆலோசனை சொல்லாம ஏன் ஓடுனீங்கன்னு கட்சிக்காரங்களே  கேள்வி கேட்டுவிடக்கூடாதுன்னு ஒரு திட்டம் போட்டிருக்காராம் மாஜி. இதனால சக  எம்எல்ஏக்களை கூட்டி ஆலோசனை நடத்திய அவர், மாங்கனி  அரசு ஆஸ்பத்திரிக்கு  சென்று ஆய்வு செஞ்சிட்டா, எல்லா கேள்விக்கும் முற்றுப்புள்ளி  வச்சிரலாமுன்னு முடிவு பண்ணியிருக்காராம். இதுக்கு கட்சிக்காரங்களும்  தயாராக இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடல்ல ஆட்டம் போட்டா படகு கவிழ்ந்துடும்... பதவியில் இருக்கும்போது ஆட்டம் போட்டா என்ன ஆகும்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘  அதிமுக ஆட்சியில் இருந்து தற்போது வரை கடலூர் மாவட்டத்துக்கு கலெக்டரின்  பி.ஆர்.ஓ.வாக இருந்து வருபவர் அருளானவர். இவர் சட்டமன்ற தேர்தலின்போது மாஜி  அமைச்சர் சம்பத்துக்காக அதிமுக ஆட்சியின் சாதனைகளை வீடியோவாக தயார் செய்து  அமைச்சரிடம் வழங்கினார். இதனை தொகுதி முழுவதும் அமைச்சர் வேனில் ஒளிபரப்பி  தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் நெருங்க நெருங்க மாஜி அமைச்சருக்காக  தீவிர விசுவாசம் காட்டினார். அப்போது எதிர்கட்சிகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தன. அரசு விழாக்களுக்கு அப்போதைய ஆளுங்கட்சி ஆதரவு  பத்திரிகை நிருபர்களை மட்டும் அலுவலக வாகனத்தில் அழைத்து செல்வார்.  தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பு விருத்தாசலம் மாஜி எம்எல்ஏவிடம்  கவர் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆட்சி மாறியதும் தற்போது நான் ஆளுங்கட்சிக்காரன் என்ற ரேஞ்சில் தனது  நெருங்கியவர்களிடம் பேசி வருகிறார். ஆட்சி மாறியதும் காட்சியை  மாத்திவிட்டார்... இல்லையென்றால் டம்மி பதவிக்கு போட்டு விடுவாங்களோ என்ற எண்ணத்தில் அண்ணன் மாற்றி மாற்றி பேசி வருகிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திருடனுக்கு தோள் கொட்டின மாதிரி என்று சொல்றாங்களே.. அது யாருக்கு பொருந்தும்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தில் முந்தைய ஆட்சியில் இருந்து தொடரும் அரசு அதிகாரிகள், கொரோனா தடுப்பு பணிகளில் ரொம்பவும் சுணக்கம் காட்டி வருகிறார்களாம். இதற்கான காரணம் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக, பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்தூள், கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அன்றைய ‘‘துறை தலைமையானவரின்’’, வேண்டப்பட்டவர்களின் போலி கம்பெனி பில் மூலம், கமிஷன் அடிப்படையில் தாறுமாறான விலையில் பேரூராட்சிகளில் வாங்கிக் குவித்து வருவாய் பார்த்தார்களாம்.
இப்போதைய ஆட்சி மாற்றத்தால், பழைய ரேட்டுக்கு இப்பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டினால், கண்டுபிடித்து விடுவார்கள், புதிய குறைந்த விலையைப் போட்டால் காரணம் கேட்பார்கள் என்ற அச்சத்தில், கொரோனா ஒழிப்பு பணியில் ஊரக, உள்ளாட்சி, வேளாண்துறை என சகல அதிகாரிகளும் தாமதம் காட்டி வருகின்றனராம். இதை தான் திருடனுக்கு தேள் கொட்டிய கதைனு சொல்லுவாங்க...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்