SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில் மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு டிரான்ஸ்பரில் தப்பி செல்ல நினைக்கும் அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-10@ 01:00:55

‘‘ஆட்சி மாற்றத்தால் கெத்து காட்டி கிசான் திட்ட ஊழலில் தப்பிய அதிகாரிகள் கலக்கத்தில் இருக்காங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மனுநீதி சோழன் ஆண்ட மாவட்டத்தில் கடைசியில் ராஜ் என்று முடியும் பெயர் கொண்டவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது இவருக்கு நெருக்கமானவர்களான உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையில் ஊழலில் கரைபுரண்டனர். மத்திய வேளாண் கிசான் திட்டத்தில் மத்திய அரசு வழங்கிய ரூ.6 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் போலி விவசாயிகளான இலைகட்சியை சேர்ந்த ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. போலியான விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட மொத்த பணமும் விவசாயிகளின் வங்கி கணக்கில் மாற்றம் செய்யப்பட்டதாம்.
இருந்தாலும் மாஜி அமைச்சரின் சிபாரிசால் வேளாண் இணை இயக்குனர், துணை இயக்குனர், வட்டார உதவி இயக்குனர்கள், இலைகட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என ஊழலில் சிக்காமல் இருக்க பெயரளவில் தற்காலிக பணியாளர்களான 3 கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்களாம். தற்போது ஆட்சி மாற்றத்தால் இதுசம்பந்தமாக மீண்டும் பைல்கள் தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரணை எதுவும் நடைபெறுமோ என ஊழலில் சிக்காமல் தப்பிய அதிகாரிகள், இலைகட்சி முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் இருப்பதாக அங்கிருக்கும் சக அதிகாரிகளே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘கோவை குழம்பி போய் இருக்கு போல... அதிகாரிகள் கையில் டிரான்ஸ்பர் கேட்டு திரியறாங்களாமே, ஏன் அவசரம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர், டிரான்ஸ்பர் இப்போது வருமா... வராதானு தவிச்சிகிட்டு இருக்காங்களம். வழக்கமாக மே மாதத்தில் டிரான்ஸ்பர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பலர் டிரான்ஸ்பர் கேட்டு மனுவோடு திரியறாங்களாம். என்ன, ஏது என்று விசாரித்தால், கடந்த காலத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு ஆதரவாக, கட்சிகாரர்கள் போல் நடந்து கொண்ட ஆபீசர்கள் சிலர், தாங்கள் ஏற்கனவே இருக்கும் பதவியில் நீடிக்க சிபாரிசு பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். இன்னும் சிலர் சஸ்பெண்ட், மெமோ என்று அதிகாரிகள் கொடுத்து விடுவார்களோ என்ற பயமும் ஒரு காரணமாம்.
 குறிப்பாக கோவை மாநகராட்சியில் பொறியியல், நகரமைப்பு பிரிவு, சுகாதார பிரிவுகளில் பல ஆண்டாக ஆட்டம் போட்டு பணத்தை வாரி குவித்த அதிகாரிகள் சிலர், அதிமுக நிர்வாகிகள் செய்த தவறுகளை அம்பலப்படுத்துகிறோம், எங்களை வேறு இடத்திற்கு மாத்திராதீங்க என உயரதிகாரிகளிடம் கெஞ்சிட்டு இருக்கிறார்களாம். சில அதிகாரிகள் கோவையில் பல கோடி ரூபாய் அபார்ட்மென்ட், வணிக வளாகம் என வாங்கி குவித்து இருக்கிறார்களாம். சில அதிகாரிகளுக்கு பினாமி பெயரில் ஏகப்பட்ட சொத்து இருப்பதாக தெரிகிறது. இதை காப்பாற்ற அதிகாரிகள் சிலரை காட்டி தர முன் வந்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. பேரூராட்சி உயரதிகாரி, திட்ட குழுமம், வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை, மின் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள சில அதிகாரிகள் வசூல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. உளவுப்பிரிவு தகவல் அடிப்படையில் சில அதிகாரிகள் மீது ஊரடங்கிற்கு பின்னர் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமி மீது கோபத்தில் கொதிக்கும் தாமரை தலைவர்கள் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என புல்லட்சாமி அறிவித்துவிட்டார். ஆனாலும் அமைச்சர் பதவிகளை பங்கிட்டு கொள்வதில் இழுபறி நிலவுவதால் மட்டும் முதல்வர் புல்லட்சாமி பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனாலும் அமைச்சரவை பதவியேற்பதில் கண்ணாமூச்சி காட்டுகிறாராம்.
அவரது மருமகன் துணை முதல்வர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என தாமரை மூலம் அழுத்தம் கொடுக்கிறாராம். ஆனால் புதுச்சேரியில் துணை முதல்வர் பதவியே இல்லையாம். இதனை உருவாக்கி மத்திய உள்துறைக்கு அனுப்பினால் அனுமதி பெற்றுத்தருவதாக தாமரை கூறிவிட்டது.
ஆனாலும் புல்லட்சாமி உடனே கோப்பு அனுப்பாமல் காலதாமதம் செய்கிறாராம். டென்ஷன் ஆகும் தாமரை, வேறு வழியின்றி காத்திருக்கிறதாம்.. ஏற்கனவே 4 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. ரொம்ப டார்ச்சர் செய்தால், தாமரையை கழற்றிவிட்டு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் தயவோடு புதிய கூட்டணி அமைத்து விடப்போகிறார் என தாமரை தரப்பு மிரண்டு போய் அடக்கி வாசிக்கிறதாம்.
ஆனால் வெளியே தாமரை கம்பு சுத்துகிறதாம். பொறுமையை புல்லட் ரொம்ப சோதிக்கிறாராம். மத்தியில் எங்க ஆட்சிதான், உங்களால் ஓவர் ரியாக்‌ஷன் எல்லாம் கொடுக்க முடியாது. டேமேஜ் ஆகிவிடுவீர்கள் என குரல் கொடுக்கிறார்களாம். ஆனால் புல்லட்சாமி கொரோனா பரவலை காரணம் காட்டி தனிமையில் சிந்திக்கிறாராம்...’’ என்றார்
விக்கியானந்தா.       

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்