SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலமா, மாநிலங்களவையா என்ற குழப்பதில் தவிக்கும் இலை கட்சி மாஜியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-08@ 00:09:13

‘‘இலைகட்சிக்கும், பழக்கட்சிக்கும் சமூகவலைதளங்கள்ல சண்டை நடக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகத்துல சட்டமன்ற தேர்தல் சமீபத்துல நடந்து முடிஞ்சது. குயின்பேட்டை மாவட்டத்துல இருக்குற சோ லிங்கர் தொகுதியில இலைகட்சியோட கூட்டணியில, பழக்கட்சி வேட்பாளர் போட்டியிட்டாரு. இந்த தொகுதியில பழக்கட்சிக்கு ஏற்கனவே நல்ல செல்வாக்கு இருக்குதாம். இதோட இலைக்கட்சியில கூட்டணி வெச்சா, எளிதா வெற்றிபெற்றிடலாம்னு கணக்கு போட்டு பழக்கட்சி வேட்பாளர் நினைச்சாராம்.
ஆனா, இலைகட்சி நிர்வாகிங்க சிலபேர், உள்ளடி வேலை செஞ்சி, பழக்கட்சியின் வெற்றியை தடுத்துட்டாங்களாம். இதனால பழம்கட்சி தோல்வியை தழுவிடுச்சாம். இது அடிமட்ட தொண்டர்கள்ல இருந்து மாநில நிர்வாகிங்க வரைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காம்.
இதுக்கு காரணம் இலைக்கட்சிக்காரங்கதான்னு, வாட்ஸ் ஆப், பேஸ்புக்னு சமூக வலைதளங்கள்ல துரோகம் செய்த இலைகட்சிக்கு பாடம் புகட்டுவோம்ன்ற பதிவுகள் வைரலாகி வருகிறது. இந்த மேட்டர்தான் அந்த தொகுதியில ஹாட் டாப்பிக்காக பேசப்படுது’’ என்றார் விக்கியானந்தா.  
 ‘‘இலைகட்சியில் தேனிக்காரரின் தீவிர விசுவாசியான கிருஷ்ணகிரி மாஜி, ஜெயித்தும் பலனில்லாமல் போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராமே...’’
 ‘‘ஆமா.. நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு வாங்கி போட்டியிட்டவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனால் வம்படியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாங்கினாரு. அப்புறம் மாநில அரசியலில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற எய்மில், சட்டமன்றத்துக்கு சீட்டு வாங்கி போட்டியிட்டாரு. ப வைட்டமினை தண்ணியா இறைச்சு வெற்றியை பிடிச்சாரு. ஆனால் தேர்தல் முடிவுகள், மாநிலம் முழுவதும் இலைகட்சிக்கு ஆப்போசிட்டாக போச்சு. இதனால் விரக்தியான மாஜி, இப்போது மாநிலங்களவைக்கு போகலாமா அல்லது மாநிலத்திலேயே இருக்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்காராம். மாநிலத்தில் ரூலிங் பார்ட்டியாக இருந்தாதான் கெத்து. ஆனால் இப்ப அந்தநிலையில் இலைகட்சி இல்லை. அதனால் மாநிலத்தை விட, மாநிலங்கள் அவையைத்தான் அண்ணன் விரும்புறாரு. அது மட்டுமில்ல, சென்ட்ரல் மினிஸ்டரி விரிவாக்கம் வரும்போது அண்ணனுக்கு கண்டிப்பா பதவி வரும் என்றும் அளந்து கொண்டிருக்கிறார்கள் மாஜியின் விசுவாசிகள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மன்னர் மாட்ட தலைவரை மாற்ற கோரி 2 சட்டமன்ற தொகுதி தாமரை கட்சியினர் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாமே..’’
 ‘‘மன்னர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் மாவட்ட தலைவராக ராமர் பெயர் கொண்டவர் இருந்து வருகிறார். இவரை மாற்ற கோரி தலைமையிடத்தில் மாவட்ட ஒட்டு மொத்த நிர்வாகிகள் புகார் கொடுக்க இருந்தனர். தேர்தல் அறிவிப்புக்கு முன் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது மாவட்ட தலைவரை மாற்றுவது குறித்தும் அவர் மீது பல்வேறு புகார்களும் தெரிவிக்கப்பட்டதாம்... இதனால் மாவட்ட தலைவரின் ஆதரவாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்து வந்தது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு கோட்டை பெயர் கொண்ட சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான இலைகட்சியிடம் இருந்து கேட்டு இருந்தால் கிடைத்திருக்குமாம்...
 ஆனால் ராமர் பெயர் கொண்ட மாவட்ட தலைவர் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டிருந்தால் நம் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காது. எதிர் கோஷ்டிகளுக்கு தான் சீட் கிடைக்கும் என்பதால் தலைமையிடத்தில் அதற்கான முயற்சி எதுவும் எடுக்காமல் மாவட்ட தலைவர் இருந்து விட்டாராம்... இதனால் மாவட்ட தலைவராக தொடர்ந்து ராமர் பெயர் கொண்டவர் இருந்தால் இவரை மீறி மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. கடைசி வரையிலும் கோஷ்டி பூசல்தான் இருக்க கூடும். கட்சிக்கு தான் கெட்ட பெயர் வரும் என கருதி மாவட்ட தலைவரை மாற்ற 2 சட்டமன்ற தொகுதி முக்கிய நிர்வாகிகள் தலைமையிடத்தில் புகார் கொடுக்க சென்னைக்கு செல்ல அதற்கான முயற்சித்து வருகின்றார்களாம்... இந்த தகவல் ராமர் பெயர் கொண்ட மாவட்ட தலைவருக்கு தெரியவர அதனை தடுக்க முயற்சித்து வருவதாக தாமரை கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்டாய காத்திருப்பில் இருக்கும் வன அதிகாரிகளை பற்றி சொல்லுங்க...’’
 ‘‘ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், கடம்பூர் வனச்சரக அலுவலர் மற்றும் ஆசனூர் வனக்கோட்டம் ஜீரகஹள்ளி வனச்சரக அலுவலர் ஆகிய இருவரது பணிக்காலம் மூன்று ஆண்டுகள் முடியாத நிலையில், எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், திடீெரன பணியிட மாறுதல் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்றம் ஆணையானது, துறை தலைவர் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரின் ஆணைக்கு முரணாக உள்ளது. மேலும், இந்த பணியிடமாறுதல், அவசரம் அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு வனச்சரக அலுவலர்களும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலுக்கு ஆளானதுடன், இம்மாத சம்பளமும் வழங்கப்படவில்லை. இதனால், பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, துறை தலைவர் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இதில் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பில் சென்னைக்கு மனுக்கள் பறந்துகொண்டே இருக்கின்றன’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்