SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ வியூகம் தோல்வி

2021-05-04@ 00:08:28

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பிரமாண்ட வெற்றியுடன் ஆட்சியை கைப்பற்றியது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், அசாமில் பாஜ கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடித்தன. புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

5 மாநில தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரியில் பாஜ கட்சி, ஒரு சில தொகுதிகளில் வென்றிருந்தாலும், அந்த கட்சி வகுத்த சில அதிரடி வியூகங்கள், பெரிதாக எடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னதாகவே திரிணாமுல் காங்கிரசில் பல முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களை பாஜ விலை பேசி தங்கள் பக்கம் இழுத்தது. அந்தக்கட்சியின் முக்கிய தலைவராக திகழ்ந்த சுவேந்து அதிகாரி கூட பாஜவுக்கு தாவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும், மம்தா சிறிதும் அசரவில்லை.

நந்திகிராம் தொகுதியில் பிரசாரத்தின்போது, பாஜவை சேர்ந்த சிலர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக மம்தா புகார் கூறினார். காலில் கட்டு போட்டபடியே தீவிர பிரசாரம் செய்தார். 8 கட்டமாக நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜ மூத்த தலைவர்கள் பலர் மாறி, மாறி கடும் பிரசாரம் மேற்கொண்டனர். அதை எல்லாம் தாண்டி, ‘‘பாஜவை இரட்டை இலக்க எண்ணிக்கையை தாண்ட விட மாட்டேன்’’ என சூளுரைத்தார் மம்தா. அதை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.

அவரது கட்சியை விட்டு சென்று, பாஜ சார்பில் போட்டியிட்ட 80 சதவீதத்துக்கும் மேலானோர் தோல்வி அடைந்துள்ளனர். ஒரு கட்சியை உடைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்ட பாஜவின் வியூகம் மேற்கு வங்கத்தில் எடுபடவில்லை என்றே கூற வேண்டும். கேரள சட்டமன்ற தேர்தலில், ‘‘பாஜ ஒரு இடத்தை பிடித்தால் கூட, அத்தொகுதியில் கல்வியறிவை மேம்படுத்த வேண்டும்’’ என்றார் முதல்வர் பினராய் விஜயன். கொரோனா தடுப்புப்பணியில் இவரது அரசு வெளிநாடுகளின் பாராட்டை எல்லாம் பெற்றது. இதனால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இங்கு பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. மிகப்பெரிய தேசிய கட்சி ஒரு சீட் கூட பெறாதது, மத்திய அரசின் ஆட்சி முறையை அம்மாநில மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர் என்பதையே காட்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4 தொகுதிகளில் பாஜ கட்சி வென்றிருந்தாலும், அக்கட்சியின் மாநில தலைவரான முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா, துணைத்தலைவர் அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோரும் தோல்வி அடைந்தனர். 50 சீட்களுக்கு மேல் வேண்டுமென்று அமித்ஷா உட்பட பலர் போராடி பார்த்தும், கடைசியில் 20 சீட்களை மட்டுமே அதிமுக கூட்டணியில் பாஜ பெற முடிந்தது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் கூட கடும் இழுபறிக்கு இடையே தான் வெற்றி பெற முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாதது, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் பற்றாக்குறை, மக்கள் விரோத சட்டங்கள் போன்ற பாஜ அரசின் மீதான மக்களின் அதிருப்தி தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டுள்ளது. இனியாவது மாநில அரசியலில் குழப்பங்களை மேற்கொள்வதை தவிர்த்து விட்டு, நாட்டின் நலனை மனதில் கொண்டு மத்திய பாஜ அரசு செயலாற்ற வேண்டுமென்பதே இந்திய மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்