SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றி: எதிரணியினர் எங்கள் பந்துவீச்சாளர்களை சமாளிப்பது கடினம்..! டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் சொல்கிறார்

2021-05-03@ 15:57:15

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 29வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப்பன்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில், உடல்நிலை பாதிப்பால் கேப்டன் லோகேஷ் ராகுல் இல்லாததால் கேப்டன் பொறுப்பு மயங்க் அகர்வாலிடம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலுடன் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினார். 16 பந்துகளைச் சந்தித்த இவர் 12 ரன்களை மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் அவுட்டானார். தொடர்ந்து வந்த அதிரடி மன்னன் கிறிஸ்கெயிலும் சிறிது நேரத்திலேயே ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து டி20 ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் டேவிட் மலானுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அவரும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். தீபக் ஹூடா ஒரு ரன்னில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் என்ற பொறுப்புடன் மயங்க் அகர்வால் மறுபக்கம் நிலைத்து நின்று விளையாடினார். அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்கச் செய்தார். இருப்பினும் பின்வரிசை வீரர்கள் இவருக்கு ஒத்துழைப்பு தராமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இருந்தாலும் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் அணியின் ஸ்கோர் 150 ரன்களைக் கடக்க உதவினார்.
கடைசி ஓவரில் 15 ரன்கள் அடித்த அகர்வால் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அகர்வால் 99 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். டெல்லி அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவன் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். பிருத்வி ஷா 22 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அசத்தினார். இதையடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 22 பந்துகளில் 24 ரன்னும், கேப்டன் ரிஷப் பன்ட் 11 பந்துகளில் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் இந்த தொடரில் தொடர்ந்து அற்புதமாக ஆடிவரும் ஷிகர் தவான் 47 பந்துகளில் 69 ரன் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதிக்கட்டத்தில் ஷிம்ரோன் ஹெட்மையர் 4 பந்துகளில் 16 ரன் எடுத்தார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், டெல்லி அணி 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில், “ஷிகர், பிருத்வி இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். முதல் இன்னிங்ஸில் பந்து சரியான வேகத்தில் சென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் பந்து நின்று வந்ததால் அதனை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. இருப்பினும், இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். ஓபனர்கள் அதிரடி துவக்கம் தரும்போது, வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை தானாகவே வந்துவிடும். போட்டி விறுவிறுப்பாகச் சென்றது. எங்கள் அணியின் வீரர்கள் துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் குண்டுகள்போன்ற வேகத்தில் பந்துவீசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிப்பது கடினம். கேப்டனாக இருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. தினமும் புதுப்புது விஷயங்களை கற்று வருகிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்