SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடியல் கிடைத்தது

2021-05-03@ 00:12:30

கடந்த 10 ஆண்டுகளாக துன்ப இருளில் மூழ்கி தவித்த தமிழகத்திற்கு இன்ப விடியல் கிடைத்திருக்கிறது. விடுதலை கிடைத்துள்ளது என்றும் கூட கூறலாம். ஒன்றா, இரண்டா.. ஜல்லிக்கட்டுக்கு தடை, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டம், நீட் எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு என தமிழகத்தில்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்? அன்றாட வாழ்வில் ஆயிரம் இன்னல்களை சந்தித்த மக்கள் இனி நிம்மதியெனும் ஆக்ஸிஜனை சுதந்திரமாக சுவாசிக்க போகின்றனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமான கடினமான சூழலில், திமுக கட்சிக்கு தலைமை பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்.

மத்திய, மாநில ஆளுங்கட்சியினரின் வெறுப்பு அரசியல், கடும் விமர்சனங்களை தாண்டி கட்டுக்கோப்பாய் கட்சியை வழிநடத்திச் சென்றார். அதுமட்டுமல்ல... கொரோனா முதல் அலையில் அதிமுக அரசு அமைதியாக வேடிக்கை பார்த்தபோது, மக்களுக்காக கட்சியினரை களமிறக்கி நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட்டார் மு.க.ஸ்டாலின். தொண்டர்களை அரவணைத்து, கூட்டணி கட்சிகளை அனுசரித்து நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். அதிமுக, பாஜ அரசுகளின் அவலங்களை எதிர்த்து  குரல் கொடுத்ததோடு போராட்டங்களையும் தீவிரப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் சூறாவளியை காட்டிலும் வேகமாகவும், விவேகமாகவும் வியூகம் அமைத்து பிரசாரங்களை மேற்கொண்டார். அவரது பிரசார வேகமே மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரசாரங்களில் எல்லாம் மத்திய, மாநில அரசுகளின் செயலற்ற நிர்வாகத்தால் மக்கள் பட்ட துயரங்களை விளக்கி பேசினார். பொதுவாக, திமுக தேர்தல் அறிக்கை ஹீரோவாக போற்றப்படும். இம்முறை ஒட்டுமொத்த தமிழகம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நலத்திட்டங்களை வெளியிட்டு தேர்தல் அறிக்கை தயாரித்தார்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கான பலனே இந்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அரசு, மத்திய பாஜ அரசுக்கு அடிமை அரசாகவே வலம் வந்தது. கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதிலும், முதல்வர் பதவிக்கு போட்டா போட்டி என கடந்த 5 ஆண்டு கால அதிமுக அரசு தமிழக மக்களை பற்றி துளியும் கவலைப்படவில்லை.  அது மட்டுமா? கல்வித்துறை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில், அதிமுக அமைச்சர்கள் அடித்த கொள்ளை பல நூறு கோடிகளை தாண்டும். இப்படி கொள்ளை அடித்தே தமிழக கஜானாவை காலி செய்து விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்கள் உள்ளே செல்வார்கள் என மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி அதிமுக அரசின் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

அது மட்டுமல்ல... 14 வயதில் திமுகவில் இணைந்து, வாலிப பருவத்தில் மிசா போராட்டத்தில் பங்கேற்றது, இளைஞரணி செயலாளராக இருந்து இளைஞர்கள் மத்தியில் திமுகவை கொண்டு சென்றது, பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என படிப்படியாக கட்சி பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியது, எம்எல்ஏ, அமைச்சர், மேயர், துணை முதல்வர் என இவரது நிர்வாகத்திறன் துடிப்புமிக்கது. தூய்மையானது. மக்களால் வெகுவாக பாராட்டை பெற்றது. அந்த அடிப்படையில் இனி தமிழகம் ஒரு சிறந்த நிர்வாகியின் வழிநடத்தலில் மிளிரப்போகிறது என்றால்... மிகையல்ல. தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்...!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்