SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரண ஓலம்

2021-05-01@ 00:07:10

இ ந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வேகமெடுத்த 10 நாட்களில் ஆயிரக்கணக்கில் உயிர்களை  பறித்து கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்தது போன்ற நிலை  இந்தியாவில் நடந்தேறி வருவது வேதனையளிக்கிறது. வடமாநிலங்களான டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட  மாநிலங்களில் சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் மயானத்தில் வரிசைகட்டி நிற்கிறது. இரவு பகல் பாராமல் மயானத்தில் பிணங்கள் எரிந்த வண்ணம்  உள்ளது. வடமாநில சாலைகளில் எங்கு திரும்பினாலும் மரண ஓலம் நெஞ்சை பதறவைக்கிறது.

கொரோனா 2வது அலையால் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர் வரை அகால மரணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் முதலிடத்தில்  இருந்த அமெரிக்காவை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் இறப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன்
தட்டுப்பாடு, தடுப்பூசி போதிய இருப்பு இல்லாதது, நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல பிரச்னைகளால் சாலைகளில்  நோயாளிகளுடன் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் காத்துக்கிடக்கின்றனர். சிலர் ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளியை காரில்  வைத்துக்கொண்டு மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இறந்தவர்களின் சடலத்தை மயானத்துக்கு எடுத்து செல்ல  ஆம்புலன்ஸ் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். சில இடங்களில் ஆம்புலன்ஸ் வர மறுப்பதால், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட
வாகனங்களில் சடலத்தை உறவினர்கள் தங்கள் நண்பர்களின் உதவியுடன் எடுத்துச்செல்லும் அவலமும் நடந்து வருகிறது.

கொரோனா முதலாவது அலையை திறம்பட சமாளித்த இந்தியா, 2வது அலையால் திக்கி திணறியுள்ளது. மருத்துவ உதவிக்காக வெளிநாடுகளிடம்  கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கதொடங்கியுள்ளது. குறிப்பாக வடசென்னை  பகுதிகளில் மிக மோசமான முகத்தை கொரோனா காட்டி வருகிறது. வடசென்னை பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய நர்ஸ்கள்,  ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்த ஆளில்லாததால்  5 மணி நேரத்துக்கும் மேல் படுக்கையில் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற நோயாளிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  பிணவறையில் சேர்க்கப்படும் சடலங்களை உடனுக்குடன் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் பிணவறை வார்டு கண்காணிப்பாளர், மருத்துவர்கள்  காலம் தாழ்த்துவதால் சடலங்களை எடுத்துச்செல்ல வரும் உறவினர்கள் கடும் அவதிக்காளாகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும் உதவி செவிலியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ள வேண்டும்.  அதேபோன்று மருத்துவ துறையில் அனுபவமுள்ளவர்கள் தன்னார்வலர்களாக உதவி செய்ய முன்வந்தால் அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.  இதனால் மருத்துவமனைகளில் ஆள் பற்றாக்குறையை தவிர்க்க முடியும்.  சுகாதாரத்துறை அனைத்து பிரச்னைகளிலும் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தி பேரிடர் காலத்தில் மக்களுக்கு பேருதவியாக இருக்க வேண்டும்  என்பதே மக்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்