SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசம் தேடும் சுவாசம்

2021-04-30@ 00:20:54

கொரோனா இரண்டாவது அலை ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 3.50 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.
நோய்த்தொற்று முற்றியும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் இறப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மந்தமாக செயல்படுவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. பிரதமர் மோடியை பதவி விலகக்கோரிய ஹேஷ்டேக்குகளும் வைரலாகி வருகின்றன.

கொரோனாவின் 2வது அலையின் தீவிரத்தை துவக்கத்திலேயே கணித்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காததே இதற்கு முக்கிய காரணம். தமிழகத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு விரைவில் அதிகரிக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை எம்பி சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். நமது தேவை தற்போது 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. தமிழகமும் அபாயக்கட்டத்தில் தான் உள்ளது. விரைவில் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்காவிட்டால் ஆபத்து’’ என எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 50க்கும் அதிக மெட்ரிக் டன் பற்றாக்குறை நிலவி வருவதாக கிடைத்துள்ள தகவல்கள் அச்சமளிக்கின்றன. தேவை அதிகரிக்கும் சூழலில் வடமாநிலங்களை போலவே, தமிழகத்திலும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வேதாந்தா நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உள்ளன. அதேநேரம் ஸ்டெர்லைட் ஆலையை
திறக்கக்கூடாது என போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

அதே நேரம், திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த ஆலையில் 1980 முதல் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், போதிய உதிரி பாகங்கள் கிடைக்காதது, உற்பத்தி விலையை விட வெளியில் குறைந்த விலைக்கு கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மீண்டும் பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பை தொடங்கலாம். இதன்மூலம் கொரோனா உயிரிழப்புகளை குறைக்க முடியும்.

மீண்டும் பெல் ஆலை இயங்குவதற்கு மத்திய அரசுதான் அனுமதி வழங்க வேண்டும். அப்படி உத்தரவிட்டால் குறைந்தது 20 முதல் 30 நாட்களுக்குள் புதிய ஆக்சிஜன் பிளான்ட் அமைத்து உற்பத்தியை தொடங்கலாம் என பெல் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அரசு ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும். மாநிலங்களில் நிலவும் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கொரோனா ஒரு நாள் பாதிப்பில் நம்பர் ஒன் இடத்தை பெற்றோம். இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பலி எண்ணிக்கையிலும் முதலிடம் பெறும் துயரமான சூழல் ஏற்படும். இனியாவது மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்