SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளை கூட்டம் தப்பியதால் மாம்பழ மாவட்ட காக்கிகள் மோதிக்கொள்வதை சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-22@ 00:48:04

‘‘மலையை மொட்டை அடிச்ச மாதிரி திருச்சி மாவட்டத்துல ஊராட்சி நிதியையும் மொட்டை அடித்ததை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.  
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தேவையற்ற பதிவேடுகள், ரசீது புத்தகங்கள் உதவி இயக்குனர் மூலம் வழங்கி அதற்கான பட்டியல் படி பெரிய தொகை பெறப்பட்டுள்ளதாம். அதில் வாங்கிய புத்தகங்கள் யாருக்கும் பயனில்லாமல் வீணாகி கிடக்கிறதாம்.
அதேபோல இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக புத்தகங்கள் வாங்கிக்கொள்ள மலைக்கோட்டையில் இருந்து மதுரையில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு மாற்றலாகி போன உயரதிகாரியும், தற்போது மலைக்கோட்டையில் டைரக்டர் லெவலில் உள்ளவர், உதவி டைரக்டர் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடுகள், ரசீது புத்தகங்களை இறக்கி வைத்துள்ளார்களாம்.
இதுதொடர்பாக மாவட்ட உயரதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம். ஆனால் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி தலைவர்களை மிரட்டி அதற்கான பட்டியலை அளித்துள்ளனர். அந்த விலைப்பட்டியலின்படி ஒரு  ஊராட்சிக்கு ரூ.21,694 என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்... மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 400 ஊராட்சிக்கு ரூ.90 லட்சம் ஆகிறது. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாம்.. இதுதொடர்பாக, மலைக்கோட்டை ஊராட்சி செயலாளர்கள் நல சங்கம் சார்பில் கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு, உள்ளாட்சித்துறை இயக்குனர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் மனு அனுப்பி அதிர வைத்துள்ளார்களாம்... இதனால் விசாரணை வளைய பயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமோ.. இல்லையோ... கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம் போங்க...’’ என சிரித்தபடியே கூறினார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகர காக்கிகளுக்கிடையே நடந்த மோதலில் கொள்ளையர் தப்பிய தகவல் இப்போ கசிஞ்சிருக்காம். கடந்த வாரம் பல்சர் வண்டியை திருடிய பலே கொள்ளையர்கள் ரெண்டு பேர், தொடர்ச்சியா மூன்று இடத்துல கைய வச்சிட்டாங்க. மாங்கனி போலீசார், கொள்ளையரின் படத்தை சிசிடிவி மூலமா எடுத்து குற்றவாளிய அடையாளம் கண்டுட்டாங்க. இதெல்லாம் சில மணி நேரத்துலயே முடிஞ்சுபோச்சு.  
அவர்களை சுற்றிவளைக்கும் நேரத்தில் சவுத் கிரைம் டீமுக்கும், வெஸ்ட் கிரைம் டீமுக்கும் இடையே யார் பிடிப்பதுன்னு போட்டி ஏற்பட்டிருக்கு.
இதற்காக இன்பார்மருடன் பேசிய தெற்கு டீம், எங்ககிட்டதான் பிடிச்சு தரணும்னு, வெஸ்ட் டீமுக்கு எதையுமே சொல்லக்கூடாதுன்னு கண்டிசன் போட்டிருக்காங்க. இதற்கிடையில் மதுகுடிக்க ஒன்று கூடிய கொள்ளையர்களை வெஸ்ட் டீம் சுற்றிவளைச்சிருக்கு. இதை தெரிஞ்சுக்கிட்ட சவுத் டீம் இன்பார்மர், ‘போலீஸ் வருது தப்பி ஓடிருங்கன்னு கொள்ளைக்காரங்களுக்கு ‘சிக்னல்’ கொடுத்துட்டாராம். கண் மூடி திறக்கும் நேரத்துல கொள்ளையர் கூட்டம் எஸ்கேப் ஆகிட்டாங்க.
அப்புறம்தான் தெரியுதாம், சவுத் டீம் பண்ணுன வேலைன்னு. இதுக்கு ஆதாரமா, இன்பார்மருக்கிட்ட பேசிய ஆடியோவும் கிடைச்சிருக்காம்... டீமா செயல்பட்டு இருந்தா கொள்ளையர்களை பிடிச்சு இருக்கலாம்... போட்டி போட்டதால... நம்ம இரண்டு டீமுக்கும் டாட்டா காட்டிட்டு கொள்ளைக்காரங்க போயிட்டாங்கனு காக்கிகள் மத்தியில் ‘டாக் ஓடுது’... என்றார் விக்கியானந்தா.
‘‘தேனி மாவட்டத்துல கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டியவங்க கல்லா கட்டுறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்தில், கனிமவள துறையில் முறைகேடாக கிராவல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. அனுமதி பாஸ் வழங்குவதற்கு இங்குள்ள ஒரு தற்காலிக பெண் ஊழியரை, மேலதிகாரிகள் நியமித்திருக்கின்றனர். ஒரு பாஸ் வழங்க கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை தற்காலிக ஊழியர் மூலமாக மேலதிகாரிகள் வாங்குகிறார்களாம். இப்படி கிடைத்த பல லட்சம் பணத்தை  பங்கு போட்டு இருக்கிறார்களாம்.
பணம் வாங்கும் வீடியோ லீக் ஆகி  விட்டதாம். உடனே வாங்கிய பணத்திற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற மாதிரி சொல்லி, தற்காலிக ஊழியரையும் பணிநீக்கம் செய்திருக்கின்றனர். துறை அலுவலகத்தில் பகிரங்கமாக டேபிள் போட்டு உட்கார்ந்து, ஒரு பெண் ஊழியர் கத்தை கத்தையாக பணத்தை வாங்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்தபோதும், அத்தனையையும் மூடி மறைத்து தப்பி  இருக்கிறார்களாம். வசூலான பல லட்சம் பணத்தில் யார், யாருக்கெல்லாம் பங்கு போனது என்று விசாரிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை இப்போது  இம்மாவட்டத்தின் சமூக ஆர்வலர்கள் சிலர் எழுப்பியதுடன், இதற்கென போராட்ட அறிவிப்புகளும் வெளியிட்டிருக்கின்றனர்.
சிக்கிய பெண் ‘பவர்புல்’ நபர் வசிக்கும் ஊரை சேர்ந்தவராம்... இதனால் லஞ்ச விவகாரத்தில் ‘பவர்புல்’ விஐபியை சேர்ந்தவர்கள் கொடுத்த பிரஷர் தாங்க முடியாம அதிகாரிகள் தரப்பு அப்படியே மூடி மறைத்துவிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்