SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்சி முடியும் நேரத்தில் கல்லா கட்டும் வெயில் மாவட்ட அதிகாரிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா..!

2021-04-21@ 00:35:05

‘‘சிவனின் பெயரைக் கொண்ட மாவட்ட, காக்கித்துறையில் ‘ரோல் கால்’ ரொம்பவே முக்கியம். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பணிபுரிகிற போலீஸ்  அத்தனை பேரும் ஆஜராக, அவர்களுக்கு எந்தெந்த பணி என்று அங்கிருக்கிற நிலைய  அதிகாரி தெரிவிப்பார். அத்தோடு சில அறிவுரைகளும் வழங்கப்படும். மாநிலம்  முழுக்க பல ஆண்டுகள் பல்வேறு இடங்களிலும் காலை 7 மணிக்கு நடந்து வந்ததை,  மாநில அதிகாரியானவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே, காக்கிச்சட்டைகளின்  சிரமம் புரிந்து, அத்தனை இடங்களிலுமே காலை 9 மணிதான் என்று மாற்றி  அறிவித்திருக்கிறார்.

இதன்படியே காலை 9 மணிக்கு இந்த ‘ரோல் கால்’  நடக்கிறதாம். ஆனால், சிவனின் பெயரை கொண்ட மாவட்டத்தில் மட்டும்  ஓரிரு வாரங்கள் இந்த நேரம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அப்புறம் அதிகாரிகளின்  வசதி கருதி, மீண்டும் காலை 7 மணிக்கே ‘‘ரோல் கால்’’ நடக்கிறதாம்.  வெளியூர்களில் இருந்து வரும் காக்கிக்காரர்கள் இதற்கென அதிகாலையிலேயே  எழுந்து தயாராகி, பல கிலோ மீட்டர் தூரம் டூவீலர், பஸ் பிடித்து அவசர  அவசரமாக வருவதில் சிரமப்படுகிறார்களாம். பெண் காக்கிகளின் நிலை மேலும்  பரிதாபமாக இருக்கிறதாம். அதாவது, குழந்தைகள், குடும்பத்தை முறையாக கவனிக்க   முடியாமலும், பணியில் கவனம் காட்ட முடியாமலும் மன உளைச்சல், உடல்  பாதிப்பிற்கு ஆளாவதாக புலம்பித் தவிக்கிறாங்க... இதை மேலதிகாரிகளிடம் சொல்ல முடிவு செய்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் கடைசி கட்ட ஆட்டம் போட்டு சம்பாதிக்கும் அதிகாரியை பற்றி சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல, ஊரக பகுதிகளில் நடந்த  திட்டப்பணிகளில் உள்ள ஆட்சேபணைகளை உடனடியாக சமர்ப்பித்து சரி செய்து  கொள்ளுங்கள் என்று தணிக்கையில இருக்கிற ஏழுமலையான் பேரை கொண்ட அதிகாரி 7  ஒன்றிய அதிகாரிகளையும் நேரில் சந்தித்து விரட்டுகிறாராம். அவர்கள்  காரணம் கேட்டால், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, 4ம் தேதி ஆட்சி  மாற்றம் உறுதியாகிவிடும். அப்போது நீங்கள் எல்லாம் இங்கேயே இருக்க  மாட்டீர்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் தொடங்கி அனைத்துத் துறைகளிலும், அனைத்து  மட்டத்திலும் டிரான்ஸ்பர் நிச்சயம். அதனால் உங்கள் ஒன்றியத்துக்குள்  ஊராட்சிகளில் நடந்த பணிகளில் பில் இல்லாமல் செய்த பணிகள் உட்பட  ஒன்றியத்தில் நடந்த பணிகள் தொடர்பாகவும் பல்வேறு ஆட்சேபணைகள் தொடர்பாக  என்னிடம் விவரங்களை சமர்ப்பித்து சரி செய்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள்  டிரான்ஸ்பர் ஆகி வெளியில் சென்ற பிறகு புதியவர்கள் வந்து பிரச்னை செய்தால்  சிக்கலில் மாட்டுவீர்கள் என்று சொல்லி வசூல் வேட்டை ஆடி வருகிறாராம்.

இது  ஒருபுறம் என்றால் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் என்ன வேண்டுமென்றாலும்  நடக்கலாம் என்பதால் உள்ளாட்சித்துறையில் குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையில்  ஒரு பெண் அதிகாரி உட்பட பல பேரின் சொத்து விவரங்கள் அதே துறையில்  அவர்களுக்கு வேண்டாதவர்களால் திரட்டப்பட்டு வருகிறதாம். இதில் ‘‘வி’’  என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒன்றிய அதிகாரி, கலெக்டர் பங்களாவுக்கு  பின்புறம் ₹1.5 கோடியில் வாங்கியுள்ள சொத்து குறித்தும், நகரின் மத்தியில்  அமைதிக்கு பெயர் போன ஒன்றிய பெண் அதிகாரி வாங்கியுள்ள சொத்து குறித்தும்  முழு விவரங்கள் திரட்டப்பட்டுள்ளதாம். இதுதவிர மாவட்ட நிர்வாக  அலுவலகத்தில் அதேதுறையில் பணியாற்றும் யுவமான அதிகாரி குவித்துள்ள  கோடிக்கணக்கான சொத்துகள் குறித்தும் விவரங்கள் திரட்டப்பட்டுள்ளதாம்.  ஆட்சி மாற்றம் முடிந்ததும், அவர்கள் தொடர்பான விவரங்கள் விஜிலென்சிடம்  கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தபால் வாக்குக்கு டிரான்ஸ்பர், கரன்சி கொடுப்பதாக சொன்ன இலை நிர்வாகியை பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பெரம்பலூர்  இலை கட்சியின் மாவட்ட செயலாளர் ராமன் பெயரை கொண்டவர் இருக்கிறார். இவர், தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்த  வாகனப்பிரிவு தலைமை காவலர் வழிகாட்டுதல் படி எழுத்தர்  (நர்கீஸ்) குன்னம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்கு  பதிவு செய்யும் காவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன் தபால் வாக்கை  என் கையில் கொடுத்து விடுங்கள். நான் நிரப்பி அதிகாரிகள் இடத்தில்  கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்து கொள்கிறேன் என்று சொல்லியும், உங்களுக்கு  இலகுவான பணி செய்ய வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லியும் காவலர்களின் தபால்  வாக்கை ஆளுங் கட்சிக்கு பெற்று வருகிறார். இது தெரிந்ததும் காக்கிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேட்பாளரின் உறவினரை ஏஜென்ட்டாக போட்டால் தான் விசுவாசமாக இருப்பார்கள் என்று எடப்பாடி அறிவுரை சொன்னது உண்மையா...’’ என்று சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தேர்தலுக்கு பிறகு எடப்பாடி ரிலாக்ஸ் மூடில் இல்லையாம். காரணம் அவரது காதுக்கு வந்த செய்தி எல்லாமே ‘அப்செட்’ ரகமாம். ஒரு உளவுத்துறை ரிப்போர்ட்டில் கூட நெகடிவ் வார்த்தைகள் தான் அதிகமாக தெறிச்சதாம். இதனால நம்ம சோகம் கட்சிக்காரங்களை தாக்கிடக் கூடாது என்பதற்காகவே சொந்த மாவட்டத்தில் இருக்கும் கட்சி ஆபீசுல கூட்டத்தை கூட்டினாராம். அப்போது அவரது முகம் மிகவும் சோகமாக இருந்ததை பார்த்த கட்சித்தொண்டர்கள் அதிர்ச்சியாகிட்டாங்களாம். கூட்டத்துல பேசிய எடப்பாடி, முடிவு என்னவாக இருந்தாலும் ஓட்டு எண்ணி முடிக்கும் வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. அங்கேயே இருக்கணும்னு சொல்லியிருக்காரு. அதேநேரத்தில் வேட்பாளரின் உறவினர் ஒருவரை ஏஜென்டா போட்டே ஆகணும், அப்போதான் கடைசிவரை உண்மையாக இருப்பாங்கன்னும் கறாராக  சொல்லிட்டார். அப்படின்னா கொரோனா தொற்றிலும் இரவு பகலா வேலை பார்த்த எங்க மேல நம்பிக்கை இல்லையான்னு களப் பணயாற்றியவர்கள் கோபத்தில் கொந்தளித்து போய் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்