SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து குவிப்பு வழக்கு பாயாமல் இருக்க கொங்கு மண்டல அமைச்சர்கள் போட்டுள்ள ‘ஸ்கெட்ச்’ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-20@ 00:25:31

‘‘கொரோனா காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை... கொங்கு மண்டல அமைச்சர்களின் பிரச்னையே வேறு... சொத்து, ஊழல் வழக்குகளில் சிக்காமல் இருக்க... குடும்ப, சொந்தங்களின் வரவு செலவு கணக்குகளை நேர் செய்து வர்றாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்... உண்மை தான். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர், ஏற்கனவே கணித்து விட்டனர். இதனால பினாமி சொத்துக்களை ‘சேப்டி’ செய்வது.. விஜிலென்ஸ் ரெய்டு வந்தா தப்பிப்பது.. கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி என்று அதில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி மாற்றங்களை செய்யும் வேலையில் இறங்கி இருக்காங்களாம்... இதுக்கு தமிழ்நாடு சரிப்படாது என்பதால்... வெளி மாநிலத்தில் உள்ள ‘எக்ஸ்பர்ட்’டுகளை பணியில் அமர்த்தி உள்ளார்களாம். அவர்களுக்கு ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளின் கணக்கு வழக்குகளை பார்ப்பவர்கள் உதவி செய்தாங்களாம். வாக்குப்பதிவுக்கும், வாக்கு  எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத காலத்தை இவர்கள் இதற்காகவே பயன்படுத்திக்கொண்டாங்களாம். அதாவது, வக்கீல், ஆடிட்டர் என துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைப்படி எல்லாம் கிளியராக நடந்து முடிந்து விட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 24 பேர் உள்ளனர். இவர்களில், நான்கு பேர் அமைச்சர்கள். இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து, ‘அன்டர்கிரவுண்ட் வேலை’களை படு கச்சிதமாக முடித்து விட்டனர். ‘ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவாயில்லை... முதலில், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்... வெற்றியை இழந்தாலும், களத்தை இழக்கக்கூடாது, இந்த கணக்கு, நம் எதிர்கால அரசியலுக்கு ரொம்ப முக்கியம்....’ எனக்கூறி வருகின்றனர். இவர்களது, சுருட்டல், பதுக்கல் என எல்லாவற்றையும், மாநகர உளவுப்பிரிவு போலீசார் துல்லியமாக மோப்பம் பிடித்து, ரிப்போர்ட் தயார் செய்துவிட்டனர். மே 2ம் தேதிக்கு பிறகு புதிய அரசு அமைந்தவுடன், ரிலீஸ் செய்ய தயாராக வைத்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோயம்பேடு கட்சியின் பெண் தலைவர் மீதான அதிருப்தி தேர்தல் முடிவுக்கு பிறகு பெரிதாக வெடிக்கும்னு பேசிக்கிறாங்க... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி முடிவை சரியாக கையாளாததால் கோயம்பேடு கட்சி தலைமை மீதும், அக்கட்சியின் ‘பவர்புல்’ பெண் மீதும் கட்சிக்காரங்க அதிருப்தியில் இருக்காங்களாம். ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயம்பேடு கட்சியின் கூடாரம் காலியாகப் போகுதாம். அதில் வெயிலுக்கு பெயர் போன அவரின் சொந்த மாவட்டம் தான் முதலில் இருக்குமாம். இதற்காக தேர்தல் முடிந்த கையோட விழுப்புரத்தில் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தி முடித்திருக்கிறார். அக்கட்சியின் ஏழுமலையான் பெயரை கொண்ட மாவட்ட செயலாளர்.
இடைத்தேர்தலில் தலைமை எடுத்த முடிவு, எதிர்கால அரசியல் கருத்தைக் கொண்டு வாக்கு எண்ணிக்கை முடிவு வருவதற்குள் இந்த கூட்டத்தை நடத்தி ஒரு முடிவு பண்ணி இருக்காங்களாம். இக்கூட்டத்தில் பேசிய ஏழுமலையான் பெயரை கொண்டவர், ‘தேர்தலுக்கு முன்பாக ஜனவரிக்குள் கூட்டணியில் நல்ல முடிவு வரும் என்று ‘பவர்புல்’ பெண்மணி சொன்னார். அதை நம்பி இருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. 2011-ல் கேயம்பேடு கட்சி தலைவர் இலையுடன் கூட்டணி என்று உறுதியாக சொன்னார். சொன்னபடி நடந்து கொண்டார். அதனால நமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு சரியான நிலையை எடுக்கவில்லை. காம்ரேட்ஸ் சரியான கூட்டணி அமைத்து, கட்சிக்கு தலா 2எம்பி, எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். ஆனால் நம்மால் முடியவில்லை. எல்லாம் சறுக்கலில் முடிந்துவிட்டது. மூன்றாவது அணி, எப்போதும் முதல் அணியாக வர முடியாது. என்றைக்கும் தமிழகத்தில் 2 அணிதான் என்பதை இந்த தேர்தல்  நிரூபித்துள்ளது. இது நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தாராம்.
இனிமேல் கோயம்பேடு கட்சிக்காரரின் மார்க்கெட்டில் இனி அரசியல் காய்கறி வேகாது... எனவே, மாற்றுக் கட்சிக்கு செல்ல ரெடியாகி விட்டார்களாம். எலக்ஷன்ல கூட்டணி கட்சியில் 50 கோடி வாங்கிக் கொண்டு தலைமை செலவுக்கு, வெறும் 3 லட்சம் கொடுத்ததாகவும், அதை திருப்பி கொடுத்து விட்டதாகவும் புலம்பி தீர்த்துள்ளாராம் ஏழுமலையானவர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மீன்களை விட மீனவர்கள் விடும் கண்ணீரை துடைக்க தான் ஆள் இல்லை போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மீனவர் மாவட்டத்தில் 33 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, மீன்பிடி தடை கால நிவாரணத்தொகை கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை உயர்த்தி வழங்குவதாக கூறப்பட்டுள்ள நிலையில், எவ்வித உத்தரவுமின்றி பழைய நிவாரணத் தொகையை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை சம்பந்தப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி விட்டன.
மீனவர்களிடம் தற்போது நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் ஒப்புகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது. இதில் கையொப்பமிட வரும் ஒவ்வொரு  மீனவரிடமும் ரூ.200 துவங்கி ரூ.400 வரை ஏரியாவிற்கு ஏற்ப ஆளுங்கட்சியினர் வசூலித்து வருகிறார்களாம். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் மீனவர்களிடம் ரூ.68 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வசூல் வேட்டை ஜரூராக  நடந்து வருகிறதாம். இதை நினைத்து தான் மீனவர்கள்... தடைக்காலத்தில் தரையில் விழுந்த மீன்களாக துடிக்கிறோம்... அது தெரிஞ்சும் எங்களிடமே பணத்தை சுரண்டுறாங்க என்று வேதனையோடு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்