SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மபி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை 6 கொரோனா நோயாளிகள் பலி

2021-04-19@ 01:44:37

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 6 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முக்கிய தேவையாக இருந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால், பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை தொடர்ந்து, போதிய ஆக்சிஜன் வழங்கலை உறுதிபடுத்தும் வகையில் பிரதமர் மோடி கடந்த வாரம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சமீப நாட்களாக  கொரோனா நோய் தொற்றின் அதிகமான பாதிப்பை எதிர்கொண்டு வரும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் 2 வாரங்களுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு பற்றியும் பிரதமர் விசாரித்து அறிந்தார். மேலும், 20, 25 மற்றும் 30 தேதிகளில் மூன்று கட்டமாக 17 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்த 12 மாநிலங்களுக்கு விநியோகம் ெசய்யப்படும் என்றும் அறிவித்தார். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படியும், மருத்துவ பயன்பாட்டிற்கு ஆக்சிஜன்களை அதிகமாக வழங்கும்படியும் தொழில் நிறுவனங்களுக்கு அவர் கேட்டுக் கொண்டார். சமீபத்தில், மகாராஷ்டிரா மருந்துவமனையில் 10 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஷாடாலில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், தீவிர சிகிச்சை பிரிவில் 62 படுக்கைகள் உள்ளன. சில நாட்களாக இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கொரோனா தீவிர சிகிச்ைச பிரிவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக தெரிகிறது.

இது குறித்து விநியோகஸ்தர்களை மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், இரவு நீண்ட நேரம் ஆகியும் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வந்து சேரவில்லை.  இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளில் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்குவதற்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காத நிலையில்,  6 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மருத்துவமனையின் தலைவர் மிலின் ஷிரால்கர் கூறுகையில், “62 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த தீவிர சிகிச்சை பிரிவில் 6 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.  மீதமுள்ள நோயாளிகள் பாதுகாப்பாக இருக்கின்றனர்,” என்றார்.

அமெரிக்கா சீனாவை மிஞ்சியது இந்தியா
இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி,  வல்லரசு நாடுகளுக்கு இணையாக துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில்  கடந்த 92 நாட்களில் 12 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்த 12 கோடி இலக்கை எட்டிப்பிடிக்க அமெரிக்கா 97 நாட்களும், சீனா 108  நாட்களும் எடுத்துக் கொண்டன.

மருத்துவமனையில் தீ, 4 நோயாளிகள் பலி
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ராஜ்தானி என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இதில் செயல்படும் கொரோனா சிகிச்சை வார்டில், நேற்று  முன்தினம் நள்ளிரவு தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ ஏற்பட்டது. சிறிது நேரத்தில், வார்டு முழுவதும் தீ மளமளவென பரவியது. இதை பார்த்ததும் அங்கிருந்த பல நோயாளிகள் அலறியபடி தப்பி வெளியே ஓடினர்.  மோசமாக உடல்நிலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 நோயாளிகள், தீயால் ஏற்பட்ட புகையின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.

மற்றொரு நோயாளி, தீயில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக மருத்துவமனை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தீ விபத்தில் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 02-05-2021

  02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-04-2021

  30-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxyindisee1

  நாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்