SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் முடிவு வருவதற்குள் கட்சி பதவியை ராஜினாமா செய்த வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-18@ 00:57:04

‘‘தேர்தல் முடிவு வர்றதுக்குள்ள கட்சி பதவியை ராஜினாமா பண்ணிட்டாராமே வேட்பாளர்...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் நடிகர் கட்சியில் போட்டியிட்டவர் திடீரென தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரை வேட்பாளராக அறிவித்தவுடன் சரி. அதற்கு பிறகு கட்சி மேலிடம் ஏன் என்று கூட கேட்கவில்லையாம். குறைந்தபட்சம் பிரசாரத்திற்காவது முரசு கொட்ட வேண்டுமல்லவா, அப்போது தானே கட்சியின் இமேஜாவது நிலைக்கும். தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாரும் அவரது தொகுதியை எட்டிக் கூட பார்க்கவில்லையாம். மாவட்ட செயலாளராக இருந்தாலும் யாருடைய ஆதரவும் இல்லாமல் தொகுதியை சுற்றிச் சுற்றி வந்தவர் நடந்த சம்பவங்களை நினைத்து வெறுத்துப் போய் விட்டார். வேட்பாளராக நிறுத்திய கட்சி தேர்தல் செலவுக்கு கொஞ்சமாவது பணம் கொடுத்திருக்கலாமே என்பது அந்த மனிதரின் ஆதங்கம். தனது விரக்தியை ஒருவரிடம் கொட்டித் தீர்க்க அதையே அந்த மனிதர் டேப் போட்டு தலைமைக்கு அனுப்பினாராம். இதை வைத்துக் கொண்டு கட்சித் தலைமையும் விளக்கம் கேட்டதாம். கடந்த 15 ஆண்டுகளாக கட்சியில் இருந்து தனது வருமானம் முழுவதையும் செலவு செய்த மனிதர் வெறுத்துப் போய் விட்டார். வேறு வழியில்லாது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தேர்தலில் போட்டியிட்டவர் முடிவு வருவதற்கு முன்பே கட்சி பதவியை துறந்தால் விவாதம் இல்லாமலா இருக்கும்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், பொது மேலாளரையே மிஞ்சும் அளவுக்கு இரு அதிகாரிகள் ஆட்டம் அதிகமாக உள்ளதாமே...’’
‘‘அரசு பஸ்களில் இவர்கள் பயணிக்கும்போதோ, இவர்களின் உறவினர்கள் செல்லும்போதோ உரிய மரியாதை இல்லை என்று கூறி பல அதிரடியான உத்தரவுகளை பொது மேலாளருக்கு தெரியாமலேயே பிறப்பித்து உள்ளார்களாம். ஒரு அதிகாரியின் உறவினர், நாகர்கோவில் - திருநெல்வேலி என்ட் டூ என்ட் பஸ்சில் ஏறி முன் பக்கம் கண்டக்டர் இருக்கும் தனி சீட்டில் போய் அமர்ந்துள்ளார். அவரை வேறு சீட்டில் மாறி உட்கார சொன்னாராம் டிரைவர். இதுபற்றி அந்த அதிகாரிக்கு தெரிந்ததும், என்ட் டூ என்ட் பஸ்சில் எந்த கண்டக்டரும் இனி முன் சீட்டில் உட்கார கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு அதிகாரி களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். அந்த பஸ்சில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இவர் செல்போன் பேச இடையூறாக இருந்ததால், டிரைவரிடம் சென்று பாடலை ஆப் செய் என கூறி இருக்கிறார். வந்திருப்பது போக்குவரத்து அதிகாரி என தெரியாமல் டிரைவர் பாடலை ஆப் செய்ய வில்லை. இதனால் இப்போது திருநெல்வேலி, களியக்காவிளை, மதுரை உள்ளிட்ட மார்க்கங்களுக்கு செல்லும் பஸ்களில் பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என கூறி, ரேடியாவுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் குறுநில மன்னர்களாக செயல்படுகிறார்கள் என டிரைவர்கள், கண்டக்டர்கள் புலம்பி தள்ளுகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இரண்டெழுத்து மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை முறையாக விநியோகம் செய்வதில்லையாமே..’’
‘‘30 சதவீதமே ரேஷன் கடைகளில் விநியோகித்து, மற்றவற்றை வௌிமார்க்கெட்களில் விற்பனை செய்து பெரும் தொகை அதிகாரிகளால் பங்கிடப்படுகிறது. ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை பாலீஷ் செய்து, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கூடுதல் விலைக்கு விற்று பெரிய லாபம் பார்க்கப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்கும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவானது ‘உத்தமமான’ ஊரில் இயங்கி வருகிறது. இதன் தலைமையில் இருந்த ‘உதயமான’ அதிகாரி கொஞ்ச நாட்கள் தீவிரம் காட்டிய நிலையில், இவரையும் மாற்றி விட்டதால், கடத்தல் கும்பலின் கை ஓங்கி இருக்கிறதாம்... ஆளுங்கட்சியின் முக்கிய நபர்களே இந்த கடத்தல் காரியங்களில் ஈடுபடுவதும், தங்களுக்கான வருவாய் முறைப்படி கிடைப்பதும், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கருப்பு ஆடுகளை களை எடுக்கும் பணி தொடங்கியிருக்காமே..’’
‘‘கோவை மாநகர எல்லைக்குள் உள்ள சுமார் 280க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில், அன்றாடம் இரவு 10 மணிக்கு கடைகள் பூட்டிய பிறகும், விடிய விடிய மதுபானம் விற்பனை நடந்து வந்தது. ஆளும்கட்சி சமஉக்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் துணையுடன் இந்த கள்ளச்சந்தை வியாபாரம் படுஜோராக நடந்தது. மதுபானம் விலை 150 ரூபாய் என்றால், கள்ளச்சந்தையில் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. இப்படி வருடம்தோறும் பல கோடிகள் சுருட்டப்பட்டன. இதை, மோப்பம் பிடித்து மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டிய உளவுப்பிரிவு போலீசாரும், சரண்டர் ஆகிவிட்டனர். தற்போது, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நிர்வாகப்பிடி முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கைக்கு சென்றுவிட்டது. ஆனாலும், வசூல் ஓயவில்லை, பங்கு பிரிப்பதும் முடியவில்லை. இதையெல்லாம், மேலிட பார்வைக்கு கொண்டு வராதது ஏன் என கோவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ‘கொக்கி’ போட துவங்கிவிட்டார். இதன் தொடர்ச்சியாக, மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை ‘களை’ எடுத்துள்ளார். இன்னும் ‘களை’ எடுக்கவேண்டிய பணி நிறைய உள்ளது, குறிப்பாக, உளவுத்துறையை முற்றிலுமாக காலிசெய்ய வேண்டும் என சாட்டையை சுழற்ற துவங்கியுள்ளார்’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்