SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியாத்தம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கிபெண் உட்பட 3 பேர் காயம்: மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை

2021-04-16@ 00:46:24

குடியாத்தம்:  குடியாத்தம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் கட்டிட மேஸ்திரியின் மனைவி, மகன், மகள் காயம் அடைந்தனர். 8 மணிநேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழக-ஆந்திர-கர்நாடக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் குடியாத்தம் அடுத்த களர்பாளையம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்தது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வேட்டையாட முயன்றது. தெரு நாய்கள் குரைத்தபடி விரட்டியதால் பயந்துபோன சிறுத்தை, காற்றுக்காக திறந்து வைத்திருந்த மேஸ்திரி வேலாயுதம் (42) வீட்டிற்குள் புகுந்துவிட்டது. சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட வேலாயுதத்தை கடிக்க முயன்றது. அவர் உடனே வெளியே ஓடிவிட்டார். தப்ப முயன்ற அவரது மனைவி பிரேமா (40) தலையில் கடித்துவிட்டது. அவர். ரத்தம் சொட்ட, சொட்ட வெளியேறினார்.

அதன்பின், மகன் மனோகரன்(19), மகள் தனலட்சுமி(15) ஆகியோரையும் தாக்கியது. அவர்களும் சிறுத்தை நகத்தால் கீறியதில் காயங்களுடன் தப்பி வெளியே ஓடினர். சிறுத்தை வீட்டுக்கு உள்ளேயே பதுங்கி இருந்ததால் வெளிப்புறமாக பூட்டிவிட்டனர்.
அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். வேலாயுதம் கொடுத்த தகவலின்பேரில், குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் பேரணாம்பட்டு வனத்துறையினர் வந்து பார்த்தனர். வீட்டுக்குள் படுக்கை அறைக்குள் சிறுத்தை பதுங்கி இருந்ததை கண்டறிந்தனர். அதை விரட்ட முடியாததால், காலை 10.30 மணி அளவில், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  பின்னர், கூண்டில் அடைத்து, முதலுதவி சிகிச்சை அளித்து 12.30 மணி அளவில் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள சாரங்கல் காப்பு காட்டில் சிறுத்தையை விட்டனர். பிடிபட்ட அந்த ஆண் சிறுத்தை 5 வயதுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

வீடியோ எடுத்த டிவி நிருபர் காயம்
வீட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை  மயக்க ஊசி செலுத்தி மீட்க வனத்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நேரத்தில் ஜன்னல் வழியாக வீடியோ எடுக்க முயன்ற தனியார் டிவி நிருபரின் கையில் சிறுத்தை பிராண்டியது. இதில் கையில் காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை டிவி, கட்டில், பூஜை அறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்த  பொருட்களை உடைத்து சேப்படுத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jammu-flood-29

  ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்