SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி

2021-04-15@ 16:48:06

சென்னை: 14வது  ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த  6வது லீக் போட்டியில்  சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 41 பந்தில் 5 பவுண்டரி, 3  சிக்சருடன் 59 ரன் எடுத்தார்.  கேப்டன் கோஹ்லி 33, தேவ்தத் படிக்கல் 11, ஷாபாஸ் அகமது  14,  டிவில்லியர்ஸ் 1, வாஷிங்டன் சுந்தர் 8, ஜேமீசன் 12 ரன் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில், ஜேசன் ஹோல்டர் 3, ரஷித்கான் 2, நடராஜன், புவனேஸ்வர்குமார், ஷாபாஸ் நதீம் தலா ஒரு விக்கெட்  எடுத்தனர்.

பின்னர்  களம் இறங்கிய ஐதராபாத் அணியில் சகா 1 ரன்னில் வெளியேற வார்னர்-மணிஷ்பாண்டே 2வது விக்கெட்டிற்கு 83 ரன் எடுத்தனர். அணியின் ஸ்கோர் 96ஆக இருந்தபோது வார்னர் 54 ரன்னில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். பின்னர் ஐதராபாத் சரிவை சந்தித்தது. கடைசி 7 ஓவரில் 46 ரன் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டை இழந்தது. மணிஷ்பாண்டே 38, பேர்ஸ்டோவ் 12, அப்துல் சமத் 0, விஜய்சங்கர் 3,  ஹோல்டர் 4, ரஷித்கான் 17 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 17வது ஓவரில் பேர் ஸ்டோ மற்றும் மணிஷ் பாண்டேவை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்திய ஷாபாஸ் அகமது கடைசி பந்தில் அப்துல் சமத் விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

ஹர்ஷல் பட்டேல்  வீசிய கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட முதல் 3 பந்துகளில் 8 ரன்  எடுத்த நிலையில் அடுத்த 2 பந்தில் ரஷீத், நதீம் ஆட்டமிழந்தனர். 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களே எடுத்த  ஐதராபாத் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  பெங்களூரு தரப்பில் ஷாபாஸ் அகமது 3, சிராஜ், ஹர்ஷல்பட்டேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் வீழ்ந்த ஐதராபாத்திற்கு இது 2வது தோல்வியாகும். மறுபுறம் பெங்களூரு 2வது வெற்றியை பெற்று பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், நாங்கள் பெருமைப்படுவது போல் ஆடாவிட்டாலும் இது எங்களுக்கு  ஒரு சிறந்த விளையாட்டாக இருந்தது. ரன் எடுக்க சவாலாக இருந்தது. இதனை மும்பை-கேகேஆர் போட்டியின் போது பார்த்தோம். இன்று நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. நடுத்தர ஓவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. 149 ரன்கள் எடுத்தாலும் சேசிங்கில் ரன் எடுக்க கடினமாக இருக்கும் என்பதால் வெல்ல முடியும் என சொன்னேன்.  தொடக்கத்தில் நாங்கள் அதிக ரன் அடிக்காவிட்டாலும் மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடினார்.  அவரின் இன்னிங்ஸ் எங்களுக்கு வித்தியாசம் என்று நினைக்கிறேன். உண்மையாக சொல்வதென்றால் இந்த வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை, என்றார்.

தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது: இது விழுங்குவதற்கு (தோல்வி)மிகவும் கசப்பான மாத்திரை. எங்கள் பந்துவீச்சாளர்கள்  அருமையாக கட்டுப்படுத்தினர். மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்து நல்ல இலக்கை அமைத்தார். எங்களுக்கு 2 செட் பேட்ஸ்மேன்கள் தேவை. ஆனால் அதை நாங்கள் செய்ய தவறிவிட்டோம். சிறந்த பார்ட்னர் ஷிப்பை உருவாக்க சரியான ஷாட்களை ஆட வேண்டும். ஆனால் நாங்கள் குறுக்கு பேட் ஷாட்களை  விளையாடினோம். இந்த பிட்சில் ஆடுவது எளிதல்ல. வர இருக்கும் போட்டிகளில் எவ்வாறு ஆடுவது என்பது எங்களுக்கு தெரியும். இங்கு இன்னும் 3 போட்டி எங்களுக்கு  உள்ளது. நாங்கள் பவர்பிளேவில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். மிடில் ஆர்டரில் நல்ல பார்ட்னர் ஷிப் வேண்டும். கடந்த 4 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் தோல்வி கண்டுள்ளது, என்றார்.


வாஷிங்டன் ஒரு சூப்பர் ஸ்டார்

2016 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்துள்ளார். நேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறுகையில், இது ஆர்சிபியின் நல்ல தொடக்கமாகும். எனக்கு நல்ல ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை வழங்கினர். என்னை சுதந்திரமாக விளையாட அனுமதிக்கிறார்கள்.  இது ஆஸி. அணியில் நான் வகிக்கும் பங்கு போன்றது.  இது எனது 4வது ஐபிஎல், என் தாக்கத்தை ஏற்படுத்த எனக்கு அழுத்தம் இருக்கிறது. பந்துவீச்சில் எனக்கு வாய்ப்பு கிடைக்க திட்டமிட்டுள்ளேன், ஆனால் அந்த வாய்ப்பை பெறும் வாஷிங்டன் சுந்தர் ஒரு சூப்பர் ஸ்டார், என்றார்.

கோஹ்லிக்கு நடுவர் எச்சரிக்கை

ஆர்சிபி கேப்டன்  விராட்கோஹ்லி நேற்று 33 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால்  விரக்தியில் வெளியேறிய அவர், பவுண்டரி லைனில் இருந்த விளம்பர மெத்தை,  மற்றும் சேரை பேட்டால் அடித்து தள்ளினார். இதனால் அவர் மீது லெவல் 1  விதிமுறை 2.2ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது கிரிக்கெட்  உபகரணங்கள் அல்லது உடைகள், பொருத்துதல்கள் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வது  தொடர்பானது. நடத்தை விதிகளை மீறியதைத் தொடர்ந்து கோஹ்லி போட்டி நடுவர்  வெங்கல் நாராயண் குட்டியால் கண்டிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

 • russia-naval-26

  ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்!: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்