SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறி விருந்தில் புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறையை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2021-04-11@ 01:06:24

‘‘சென்னை புறநகர் பகுதிகளில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் பகுதியான குன்றத்தூரில் ஏகப்பட்ட குளறுபடியாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் பேரூராட்சி ஊழியர் அதிகளவில் பணம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கட்டிட அனுமதி பெறுவதற்காக, குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தை மக்கள் நேரடியாக அணுகினால், பல்வேறு பொருத்தமில்லாத காரணங்களை கூறி, இளநிலை உதவியாளர் அலைக்கழிக்க செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதையும் மீறி, கட்டிட வரைபட அனுமதி காலதாமதம் குறித்து கேள்வி கேட்கும் பொதுமக்களிடம் உங்களது கோப்புகள் அனைத்தும் காணாமல் போய் விட்டது. நீங்கள் புதிதாக ஆவணங்கள் மற்றும் கட்டணத்துக்கான டிடி எடுத்து வாருங்கள் என திருப்பி அனுப்புகிறாராம். மாறாக இடைத் தரகர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் ஆவணங்களுக்கு, உடனடியாக கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கட்டிட வரைபடம் கேட்பவர்களின் பின்புலம், வீடு கட்டும் மதிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒரு பெரிய தொகை லஞ்சமாக கேட்பதாகவும், கட்டிட வரைபட அனுமதிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக, சமையல் அறைக்கு குறைந்தபட்சம் ₹25 ஆயிரம் என விலையை நிரந்தரமாக நிர்ணயம் செய்து செயல்படுகிறார் என்றும் புகார் கூறப்படுகிறது. தினமும் சுமார் ₹20 ஆயிரம் இல்லாமல் அவர் வீட்டுக்கு செல்வதில்லை என்ற லட்சிய நோக்கோடு பொதுமக்களிடம் லஞ்சமாக பணத்தை வாங்கி வருகிறார். இந்தப் பணத்தில் பலருக்கு பதவிக்கு தகுந்த பங்குகள் போய் சேருகின்றன. இது தவிர, மாதந்தோறும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி நிர்வாக இயக்குநர் அலுவலகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர் கப்பமாக கட்டி விடுவதால், பொதுமக்கள் எந்த புகார் தெரிவித்தாலும் கூட, யாரும் கண்டுகொள்வதில்லை. இவரை உடனடியாக பணியிட மாறுதல் செய்து, மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் தகுதியான நபரை பணியமர்த்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியதாக பெண் ஒருவரை மாநில தலைமை நியமித்திருப்பதற்கு கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாமே...’’
 ‘‘கட்சி தலைவர் திடீரென்று இந்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதனை ஏற்றுக்கொள்ளாத கட்சி நிர்வாகிகள் சிலர் மாவட்ட பொறுப்பில் உள்ள தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு கட்சி தலைமைக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அதனை நீக்கப்பட்ட மாவட்ட தலைவருக்கும் பகிர்ந்து வருகிறார்களாம். இது கட்சி வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘கறி விருந்தில் என்ன கசமுசா..’’ ‘‘மெடலில் துவங்கும் மாவட்டத்தில் தேர்தல் முடிந்த மறுநாள் கறிச்சோறு, சிக்கன், மீன் என அறுசுவை அசைவ அயிட்டங்களை உள்ளே தள்ளுவதை பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத் தலைமைக்கான அலுவலக தரப்பு வாடிக்கையாக நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு மண்டபம் பிடித்து கறி விருந்து போட தேர்தல் ஆணையம் நிதி ஒதுக்குகிறதா, இல்லை வேறு கணக்கு எழுதி கும்பல் தின்று தீர்க்கிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.

தற்போதும் தேர்தல் முடிந்த மறுநாள் அதே கூத்தை மெடல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிலான அலுவலக தரப்பு நடத்தி உள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் அதிகம் பேருக்கு 25க்கும் அதிக கிடாய் வெட்டி, 200 கிலோ சிக்கன், முட்டை, வாழைப்பழம், ஜிலேபி என தடபுடல் விருந்து வைத்து அசத்தி இருக்கின்றனர். இந்த விருந்தில் தேர்தல் விழிப்புணர்வு, வாக்குப்பதிவில் உழைத்த ஊரக வளர்ச்சித்துறையின் ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள், உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் என 800 பேரை ஓட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனராம்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் உழைத்த வர்க்கத்தை விட்டு விட்டு, அவர்கள் மட்டும் கறிச்சோறு தின்பதா என கொதித்தெழுந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், எங்களை அழைக்காதது ஏன்.. உணவை விடுங்க... உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லையே.. கறி விருந்துக்கான நிதி எப்படி எடுக்கப்படுகிறது என கொதித்து எழுந்து மாவட்டத் தலைமையிடமே கேள்விகள் கேட்டு அதிர வைத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்