SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொண்டர்களுடன் குடித்து கும்மாளமிட்ட வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-10@ 00:26:35

‘‘தொண்டர்களுடன் குடித்து கும்மாளமிட்டாராமே வேட்பாளர்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘சில வேட்பாளர்கள் தனக்காக அயராது உழைத்த தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்து உபசரணைகளை செய்து குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் போட்டியிட்ட  வேட்பாளர் ஒருவர் பேச்சிப்பாறை அணைமுகட்டில் தனது சகாக்களுக்கு அறுசுவை உணவுடன் மது விருந்து அளித்துள்ளார்.
காலையிலேயே 20க்கும் மேற்பட்டவர்களுடன் பேச்சிப்பாறை அணை பகுதிக்கு வேட்பாளர் வந்தார். மது விருந்து களைகட்டியது. ஒரு கட்டத்தில் போதையில் தள்ளாடினர். தகவல் கிடைத்து வனத்துறையினர் அங்கு சென்றபோது சட்டசபை  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் என்பதும் உடனிருந்தவர்கள் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் அமைதியாக காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல போதையில் அவர்களின் செயல்  எல்லையை தாண்ட ஆரம்பித்துள்ளது. உடனே, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நீடித்தது. இதற்கிடையே போதை தெளிய தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பினர். இதனால் அவர்கள்  தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்ததும் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமியை ஆதரிக்க காத்திருக்கிறார்களாமே சுயேச்சைகள்..’’
‘‘புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் புல்லட்சாமி தாமரையுடன் கூட்டணி சேர்ந்ததால் பல தொகுதிகளில் அவரது கட்சிக்காரர்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டது. எம்எல்ஏ கனவில் இருந்த பலருக்கும் இது அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதனால் பலர் சுயேச்சையாக களமிறங்கி கெத்து காட்டினர். முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, திருபுவனை,  காலாப்பட்டு என 4 தொகுதிகளில் பானை சின்னத்தில் களமிறங்கினர். இதில் கூட்டணி கட்சியினர் இலை,  தாமரையை எதிர்த்து நின்றதால், புல்லட் சாமி அப்செட் ஆனார். உடனே அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார். ஆனாலும் அவர்கள் இதனை பொருட்படுத்தவில்லை. புல்லட்சாமியின் ஆதரவோடு களத்தில் நிற்பதாக ஓட்டு  வேட்டையாடினர். இந்த 4 தொகுதிகளில் பிரதான கட்சிக்கும், சுயேச்சைக்கும் இடையேயான போட்டி நிலவுகிறது. இதில் சில தொகுதிகளில் வெற்றி முனைப்பில் இருக்கிறார்கள்.  தாமரை தரப்பு அதிக இடங்களில் வெற்றிப்பெற்று,  புல்லட்சாமியின் முதல்வர் கனவுக்கு ஆப்பு வைக்க மறைமுகமாக வேலைகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் சுயேச்சைகள் எங்களின் ஆதரவு புல்லட்சாமிக்குதான் என தூதுவிட்டனராம். இது தாமரை தரப்பின் திட்டத்துக்கு வேட்டு  வைத்திருக்கிறதாம். சுயேச்சைகளின் நிலைப்பாட்டால் புல்லட்சாமி உள்ளுக்குக்குள்ளே மன மகிழ்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘உளவுத்துறையே கலக்கத்தில் இருக்காமே.. அது என்ன மேட்டர்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட தேர்தல் பணி தொடர்புடைய அதிகாரிகள் பலரும், ஏற்கனவே  இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். அதேபோல், ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக்கூறி, கோவை மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மேற்கு மண்டல ஐ.ஜி., கோவை மாவட்ட எஸ்.பி. என பெரும் தலைகள்  பலவும் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன. தற்போது மிஞ்சியிருப்பது உளவுத்துறை மட்டுமே. கோவை மாநகர் மற்றும் புறநகர் என இரு மாவட்ட காவல்துறையிலும் உளவுத்துறை போலீசார் பலர் இடமாற்றம் செய்யப்படவில்லை. இவர்கள்,  தேர்தல் தொடர்பான தகவல்களை அரசுக்கு அவ்வப்போது சேகரித்து அனுப்பவேண்டும் என்பதால் இவர்கள் மீது ஆளும் கட்சியினர் கைவைக்கவில்லை. அத்துடன், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் இவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.  தற்போது, வாக்குப்பதிவு முடிந்து, தேர்தல் பணி ெதாடர்பான பெரும்பாலான நிகழ்வுகள் முடிந்து விட்டதால், தேர்தல் ஆணையத்தின் பார்வை உளவுத்துறை பக்கம் திரும்பியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தாமரைக்காரர்கள் ஏமாந்து நின்றார்களாமே..’’
 ‘‘ஆமா..‘பூட்டு மாவட்டத்தின் ‘‘முருகப்பெருமான்’’ குடியிருக்கும் ஊர் தொகுதியில், ஆளும்கட்சியின் முன்னாள் எம்எல்ஏவின் மகனான ‘‘ஏழெழுத்துக்காரர்’’ அதிமுக வேட்பாளராக நின்றார். கட்சியின் சீனியர்கள் ஏராளமானோர் இருந்தும்,  தொழிலதிபரான தன்னால் பெரும் தொகை செலவழிக்க முடியும் எனக்கூறி ‘‘சீட்’’ வாங்கி வந்து விட்டதால், சீனியர்கள் எல்லாம் தேர்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டனராம். கூட்டணி கட்சியினரான தாமரைக்காரர்களை மட்டுமே  கைவசம் வைத்துக் கொண்டு முழு மூச்சாக தேர்தல் பணியில் ஈடுபட்டாராம். பணப்பட்டுவாடாவையும் தாமரைக்காரர்களுக்கே ஏழெழுத்துக்காரர் கொடுத்திருந்தாராம். இப்படி எல்லா வேலையும் வாங்கிக் கொண்டவரை, தேர்தல் இறுதி நாளில்  தேடி வந்த தாமரைக்காரர்கள் தொகுதிக்குள் 405 பூத்துகளுக்கும் ஒரு பூத்துக்கு தலா ₹20 ஆயிரம்னு கணக்குப் பண்ணி, கையில் முழுத்தொகையும் தாருங்கள் என்று கேட்டு வந்தார்களாம். இப்போ தர்ரேன், அப்போ தர்ரேன் என்று எலெக்‌ஷன்  முடிந்து ஓட்டுப்பெட்டிகளை ஏற்றி அனுப்பிய பிறகும் எந்தக்காசும் தராமல் கைவிரித்து விட்டராம். கடைசிவரையிலும் வேலை வாங்கிட்டு, காசு தராம கைகழுவிட்டாரே என்று ஏழெழுத்துக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிற  தாமரைக்காரர்கள், நம்பிக்கைக்கு நாசம் பண்ணிட்ட இவரு எலெக்ஷன்ல எப்படியும் தோத்துப் போகணும்னு பிரார்த்தனையில் இருக்குறாங்களாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்