SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலா பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியவர்கள் இவரை மட்டும் ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறார்: wiki யானந்தா

2021-04-09@ 00:08:08

‘‘சசிகலாவுக்கு ஒரு நீதி.. கலெக்டரா இருந்து பதவி மாறியவருக்கு ஒரு நீதியா என்ற கேள்வி சுழன்றடிக்கிறதே... என்ன விஷயம் அது..’’ என ஆர்வத்தோடு கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.  ‘‘தேனி மாவட்ட கலெக்டரா இருந்த பல்லவி பல்தேவ் பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக துணை முதல்வர் வகித்து வரும் நிதித்துறையில் வருவாய்த்துறை இணை செயலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன் உன்னி தேனி கலெக்டராக பொறுப்பேற்றார். இவருக்கு தேனி கலெக்டர் பங்களா முகவரி மூலம் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபட்டது. புதிய வாக்காளர் பட்டியலில் கலெக்டர் பெயர் சேர்க்கப்படும் நிலையில், இங்கிருந்து டிரான்ஸ்பர் ஆன பல்லவி பல்தேவ் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அவரது பெயரை பட்டியலில் இருந்து நீக்கவில்லை. இதனால் வாக்குப்பதிவு தினத்தன்று தற்போதைய கலெக்டர் கிருஷ்ணன் உன்னி வாக்களித்த அதே வாக்குச்சாவடி மையமான வடபுதுப்பட்டி இந்து முத்தாலம்மன் பள்ளியில், பல்லவி பல்தேவ் சென்னையில் இருந்து முதல்நாளே தேனி மாவட்டம் வந்து தங்கியிருந்து வாக்களித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அரசுடமையானதும், அங்கே தங்கியிருந்த சசிகலா மற்றும் இளவரசியின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேனியில் இருந்து டிரான்ஸ்பர் ஆகிய நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் அவருக்கும், இதே முகவரியில் உள்ள தற்போதைய கலெக்டருக்கும் வாக்காளர் உரிமையை அளித்திருக்கிறதே என தேனி மாவட்ட அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு பேச்சு ஓடுகிறது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவை தெற்கில் என்ன சலசலப்பு...’’ ‘‘தமிழகத்தில் கோவையில்தான் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம், எனவே, கோவையில் களம் இறங்கவேண்டும் என்பது கமலின் கனவு. கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அவரது கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், இத்தொகுதியில் கணிசமான அளவு வாக்கு பெற்றிருந்தார். அதனால், நாம் இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட்டால், அதிக வாக்கு பெறலாம், ஏன், வெற்றிகூட பெறலாம் என கணக்கிட்டு, கமல், கோவை தெற்கு தொகுதியில் முதல்முறையாக, களம் இறங்கியுள்ளார். ஆனால், இவரால் முழு வீச்சில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. காரணம், இவரது இடது காலில் ஏற்கனவே செய்துகொண்ட அறுவை சிகிச்சை முற்றிலும் குணமாகவில்லை. அதனால், ஊன்றுகோலை நாடினார் கமல். தேர்தல் பிரசாரத்தின், உச்சக்கட்டத்தில் இவரை ஊன்றுகோலுடன் தொகுதிக்குள் காண முடிந்தது. இதைப்பார்த்தாவது மக்கள் மனம் உருகி, அனுதாப வாக்கு அளிப்பார்களா என எதிர்பார்த்தார். ஆனால், ‘எக்ஸிட்போல்’ கள நிலவரம் திருப்தியாக இல்லை. இதனால் அவர், அப்செட் ஆனாலும், நேற்றுவரை ஊன்றுகோலை கைவிடவில்லை. ‘தலைவரே, வாக்குப்பதிவுதான் முடிந்துவிட்டதே... இதை தூக்கி வீசுங்களேன்...’ என அவரது கட்சி தொண்டர்களே கலாய்க்கும் அளவுக்கு கள நிலவரம் உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘நாற்காலி கொள்முதல் விஷயம் விவகாரமாகி இருக்கிறதாமே...’’ ‘‘தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் 2019ம் ஆண்டில் தாமரை கூட்டுறவு தொழிற்சங்கத்தின் மூலம் நாற்காலிகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது. துறையின் முன்னாள் உயர் பெண் அதிகாரி தொழிற்சங்க முக்கிய பிரமுகரிடம் லஞ்சம் பெற்று நாற்காலிகள் கொள்முதல் செய்துள்ளாராம். இதனால் எந்த ஒரு சட்ட முறைகளும் கடைபிடிக்காமல் பணி வழங்கியதாக அப்போது செய்தியும் வெளியானது. அரசு பணம் பல லட்சம் ரூபாய் வீணானது. அதன் அடிப்படையில் இந்த ஊழல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், தற்போதும் நாற்காலிகள் வழங்கிய தாமரை கூட்டுறவு தொழிற்சங்கத்துடன் மீண்டும் உயர் அதிகாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். இதனால் மீண்டும் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அரசு பணம் வீணாக வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அனைத்து பணியாளர்கள் கருதுகிறார்கள். எனவே இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாற்காலி வாங்கிய கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கு பணம் வழங்க அனுமதி அளிக்க கூடாது என்று கூட்டுறவு துறை பதிவாளர் மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு ஊழியர்கள் புகார் மனு அனுப்பி உள்ளனராம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘இலை, கூட்டணிகளுக்கு வாய் பூட்டு போடும் விவிஐபி ‘‘நடந்து முடிந்த எலக் ஷன்ல, மீண்டும் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி தீவிரமாக செயல்பட்டது. இதற்காக கூட்டணி கட்சிக்கும் சேர்த்து ஒவ்வொரு தொகுதிக்கும் ₹5 கோடி வரை களம் இறக்கியது. இது கூட்டணி வேட்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பே, பட்டுவாடா கனஜோராக நடந்தது. இதனால எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதில் மாங்கனி மாவட்ட ஆளுங்கட்சி கூட்டணியினர் உறுதியோடு இருக்காங்களாம். இதற்கிடையில் பணப்பட்டுவாடா குறித்து ஆளுங்கட்சி நிர்வாகிகள் பேசும் பேச்சுக்கள் வாட்ஸ்அப்களில் வைரலாகி கிட்டு இருக்காம். இதனால விவிஐபி தனது கட்சிக்கு மட்டுமல்லாமல், கூட்டணிகளுக்கும் சேர்த்து வாய்ப்பூட்டு ஒன்றை போட்டிருக்காராம். மாங்கனி மாநகரில் பல நாட்களாக முகாமிட்டிருக்கும் அவரை சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் முதலில் சொல்வது அறிவுரை தானாம். யாரிடமும் பணப்பட்டுவாடா குறித்து செல்போனில் பேசவேண்டாம். அவ்வாறு பேசினால் அதனை பதிவு செய்து, வெளியிட்டுருவாங்க. இது நமது வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே யாரும் பணம் வழங்கியது குறித்து பேச வேண்டாம்’ என்று அறிவுரை கூறுகிறார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். அதே போல கொரோனா தடுப்பூசியும் மறக்காம போட்டுருங்கப்பா என் பதும் விவிஐபியின் அட்வைசாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்