SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவை கட்டுப்படுத்த 3 வாரங்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்படுங்கள்: 11 முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி விழா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

2021-04-09@ 00:08:00

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு மாநில அரசுகள் மிகவும் அலட்சியமாக இருக்கின்றன. அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு மாநிலங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்,’ என மாநில அரசுகளை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரசின் 2வது அலையில், நாடு முழுவதும் பாதிப்பும், பலியும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே, பல முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி விட்டார். நேற்றும் அவர் மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி, காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:
கொரோனா பரவலின் வேகம், நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது.  

கொரோனா 2வது அலையை நாம் ஒன்றாக இணைந்து  போராட வேண்டும். கொரோனா பாதிப்பின் அபாயம் புரியாமல், மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் கவலை இல்லாமல் மிகவும் சாதாரணமாக உள்ளன. கொரோனாவை எதிர்த்து மீண்டும் போராட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது. அதன் பரவலை தடுக்க,  பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.  70 சதவீதத்துக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்கு. தற்போதைய ஆபத்தை தடுப்பதற்கு, மாநில முதல்வர்கள் அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இம்மாதம் 11 முதல் 14ம் தேதி வரையில், தடுப்பூசி விழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். பரிசோதித்தல், கண்டறிதல், சிகிச்சை அளிப்பது ஆகியவையே கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.  கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த குறைந்தப்பட்சம் 30 பேரையாவது 72 மணி நேரத்துக்குள்  கண்டறிந்து பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காலாவதி காலம் நீட்டிப்பு சீரம் கோரிக்கை நிராகரிப்பு

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கான காலாவதி காலம் 6 மாதமாக இருந்து வருகிறது. இதை மேலும் 3 மாதங்கள் கூடுதலாக, அதாவது 9 மாதங்களாக நீட்டிக்கும்படி உலக சுகாதார அமைப்பிடம் சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால், அதற்கான போதிய தகவல்களை வழங்காததால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது.


இதுவரை இல்லாத புதிய உச்சம் ஒரே நாளில் 1.26 லட்சம் பாதிப்பு
நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பும், பலியும் தினமும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் 1.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலியும் இதுவரையில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இது பற்றி மத்திய சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது.
* மேலும் , தொற்று காரணமாக புதிதாக 685 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
இரவு ஊரடங்கு போடலாம். பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த, உலகளவில் இரவு நேர ஊரடங்கு பயன் அளிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்காக, இரவில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவும் என நினைத்து விடக் கூடாது. பல்வேறு மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தேவைப்படும் பல இடங்களில் இதை அமல்படுத்த வேண்டும்.  குறிப்பாக, இரவு 9 அல்லது 10 மணியில் இருந்து அதிகாலை 5 அல்லது 6 மணி வரையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்